Posted by Haja Mohideen
(Hajas) on 10/25/2010
|
|||
களக்காடு செங்கல்தேரி செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை நீக்கப்படுமா? சு. இராமையா
Last Updated :
களக்காட்டிலிருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது செங்கல்தேரி. இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 2000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. களக்காடு புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள செங்கல்தேரி, சுற்றுலாப் பயணிகளின் கோடை வாசஸ்தலமாகத் திகழ்கிறது. இங்குள்ள வனங்களின் வனப்பும், குளிர்ச்சியும் உடலுக்கும், மனதுக்கும் மகிழ்வைத் தருகிறது. சுமார் 350 ச.கி.மீ. பரப்பளவில் பரந்து, விரிந்து காணப்படும் களக்காடு புலிகள் காப்பகத்தில் செங்கல்தேரி, நெட்டேரியன்கால் அணை, நாய் உருண்டான்பாறை அருவி, குளிராட்டி அருவி, கருங்கல் கசம் அருவி, தேங்காய்உருளிச் சிற்றருவி, கோழிக்கால், தலையணை ஆறு உள்ளிட்ட நீரோடைகள் உள்ளன. மேலும் புலிகள் காப்பகத்தில் மான், மிளா, யானை, புலி, சிறுத்தை, ராஜநாகம், காட்டெருமை, சிங்கவால் குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகளும், பல்வேறு பறவைகள் மற்றும் அரிய வகைத் தாவரங்களும் உள்ளன. செங்கல்தேரிக்கு சற்று மேலே கருமாண்டி அம்மன் கோயில் உள்ளது. இதனருகே தான் களக்காடு மலையில் உற்பத்தியாகி ஓடிவரும் பச்சையாற்று தண்ணீர் இரண்டு பகுதிகளாகப் பிரிந்து ஒரு சிறிய பகுதி களக்காடு நோக்கியும், மற்றொரு பெரிய பகுதி மணிமுத்தாறு நோக்கியும் பாய்கிறது. செங்கல்தேரி சுற்றுலா மையத்தின் பருவகாலம் செப்டம்பர் முதல் மார்ச் வரை. இக்காலங்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் தங்கள் குடும்பத்துடன் இங்கு வந்து குளியலிட்டு தங்கிச் செல்வர். இவர்கள் இங்கு தங்குவதற்காக ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட நவீன தங்கும் விடுதிகளும், மரவீடும் உள்ளது. மழைப்பொழிவு இல்லாத வறட்சிக் காலங்களில் மட்டும் குறிப்பாக மே முதல் ஜூலை வரை மட்டுமே சுமார் 3 மாத காலம் இங்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு வறட்சிக் காலம் முடிவுற்று, மழை பெய்து தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் திறக்கப்பட்ட 2 மாதத்துக்குள் மீண்டும் திடீரென மூடப்பட்டுள்ளது. மூடப்பட்டதற்கு வனத்துறையினர் கூறும் காரணம் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மதுஅருந்தி ரகளையில் ஈடுபடுகின்றனர் என்பதுதான். செங்கல்தேரி செல்ல வேண்டுமென்றால் களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனரிடம் முன்கூட்டியே உரிய முறையில் அனுமதி பெற வேண்டும். அவ்வாறு அனுமதிக்கப்படும் சுற்றுலாப் பயணிகள் களக்காடு வனச்சரக அலுவலக நுழைவுவாயிலில் கட்டணம் வசூலிக்கப்பட்டு, உரிய சோதனைகளுக்குப் பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். சுற்றுலாப் பயணிகளுடன் வனத்துறை பணியாளர் ஒருவர் உடன்சென்று அவர்களை கண்காணிக்கிறார். செங்கல்தேரி சுற்றுலா மையத்துக்கு அனுமதிக்கப்படும் சுற்றுலாப் பயணிகள் வனப்பகுதிக்குள் வனச்சட்டத்துக்கு விரோதமாக செயல்பட்டால் தண்டிக்கப்படுவதுடன் அபராதமும் வசூலிக்கப்படும் என்ற எச்சரிக்கைக்கு பின்னரே அவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இவ்வாறு அங்கு செல்பவர்களில் ஒரு சிலர் மதுஅருந்தி ரகளையில் ஈடுபட்டால் அவர்கள் மீது வனப்பாதுகாப்புச் சட்டப்படி வழக்குத் தொடர்ந்து உரிய அபராதம் வசூலிக்க வேண்டியது வனத் துறையினரின் கடமை. இதை விடுத்து, ஒரு சிலர் செய்யும் தவறுக்காக ஒட்டுமொத்த சுற்றுலாப் பயணிகளை செங்கல்தேரிக்கு அனுமதிக்க மறுப்பதும், திடீர் தடை விதிப்பதும் முறையல்ல் என்று சுற்றுலாப் பயணிகள் புகார் கூறுகின்றனர். செங்கல்தேரி செல்ல தடை விதிக்கப்பட்ட இரண்டொரு நாளில் களக்காட்டிலிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ள தலையணை ஆற்றுக்குச் செல்லவும் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. இதன் பின்னர் பொதுமக்கள், அரசியல் கட்சியினரின் தீவிர எதிர்ப்பையடுத்து, தலையணைக்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் செங்கல்தேரி செல்ல விதிக்கப்பட்டது தடை இன்றளவிலும் நீடிக்கிறது. சுற்றுலாப் பயணிகளால் வனவிலங்குகளுக்கோ, வனவளத்திற்கோ பாதிப்பு ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. சம்பந்தப்பட்ட வனத்துறை உயர் அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை செய்து செங்கல்தேரிக்கு சுற்றுலாப் பயணிகள் சென்றுவர அனுமதிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |