Posted by Haja Mohideen
(Hajas) on 10/26/2010
|
|||
27 Oct 2010 01:24:26 AM IST
சாதாரண பொதுஜனத்தின் நலனையும் ஒட்டுமொத்த சமுதாயத்தின் நியாயமான கோரிக்கைகளையும் எதிர்த்து மேல்முறையீடு செய்யும் மனத்துணிவு மக்களால் மக்களுக்காக மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இருப்பதுதான் வேடிக்கை, விசித்திரம். சென்னை, தியாகராய நகர் வெங்கட்நாராயணா சாலையில் உள்ள விளையாட்டுத் திடல் மற்றும் பூங்காவின் கீழே வாகன நிறுத்தச் சுரங்கம் அமைக்கவுள்ளதாக சென்னை மாநகராட்சி திட்டமிட்டபோது, அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்குத் தொடுக்கப்பட்டது. அந்த வழக்கில் மாநகராட்சியின் தீர்மானம் சரியல்ல, ஏற்கெனவே சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ள சென்னையில் இவ்வாறு இருக்கின்ற பூங்காக்களைச் சேதப்படுத்துவது தவறு என்று நீதிமன்றம் சென்னை மாநகராட்சியின் முடிவுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, ஏ.கே. கங்குலி இருவரும் இந்த மனுவைத் தள்ளுபடி செய்ததுடன் சென்னை மாநகராட்சி வெட்கப்படும்படியான கேள்விகளையும் கேட்டுள்ளனர். இப்போது கார்களை நிறுத்த இடம்தேடி அலையும் சென்னை மாநகராட்சி தியாகராய நகரில் முறையான அனுமதிபெறாமல் கட்டப்பட்ட கட்டடங்களை அனுமதிப்பதும், அந்த அத்துமீறிய கட்டடங்களைப் பின்னர் முறைப்படுத்துவதையும்தானே தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது என்று நீதிபதிகள் கேட்ட கேள்விக்கு சென்னை மாநகராட்சி என்னதான் பதில் சொல்லிவிட முடியும்? மேலும், தில்லியில் கன்னாட் பிளேஸில் உள்ள பாலிகா பஜார் போன்று சென்னை மாநகராட்சியும் இத்திட்டத்தைத் திறம்படச் செய்யும் என்று கூறியபோதும்கூட நீதிபதிகள் ஏற்க மறுத்து, அங்கே மூச்சுத் திணறுகிறது. பாலிகா பஜாரின் உள்ளே சுவாசிப்பதே கடினம் என்றும் அங்கே இருந்த பூங்கா இப்போது எங்கே என்றும் பதில் கேள்வி எழுப்பினர். நல்லவேளை நீதிமன்றம் என்று ஒன்று இருக்கிறதால் நாம் பிழைத்தோம். ஒரு வர்த்தகத் திட்டம் தடை செய்யப்பட்டு, மக்கள் நியாயம் வென்றிருக்கிறது. சாலை என்பது முதலில் மக்களுக்காகத்தான். வாகனங்களுக்காக அல்ல. நான் வரி செலுத்துகிறேன், சாலையில் வாகனத்தை நிறுத்தக் கட்டணம் தருகிறேன் என்பதெல்லாம் மிக அதிகமாக வாகனங்கள் புழங்கும் வெளிநாடுகளில்கூட எடுபடாத வாதங்கள். மக்கள் நடக்கவும், சைக்கிளில் செல்லவும் வழிவிட்டதுபோக, மீதி இடம் இருந்தால்தான் கார்கள் நிறுத்த இடம் ஒதுக்கப்படும். வசதி இருப்பவர்களுக்கு மேலும் வசதி. வசதி இல்லாதவர்களுக்கு மேலும் வசதி குறைப்பு. இதுதான் சுதந்திர இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளாக நாம் நேர்கொள்ளும் விபரீதம். இதன் நேரடிப் பாதிப்பை பெருகிவரும் குடிசைப் பகுதிகளும், அதிகரித்துவரும் மாவோயிஸ்ட் தாக்குதல்களும் உணர்த்துகின்றன. இந்தத் தீர்ப்பு ஏதோ சென்னை மாநகருக்கு மட்டுமே உரியதாகப் பார்க்கப்படக்கூடாது. இதே சிக்கல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் ஏற்பட்டுவிட்டது. சில மாநகராட்சிகள் பல அடுக்கு வாகன நிறுத்தக் கட்டடங்களைக் கட்ட முனைப்புக் காட்டி வருகின்றன. ரயில்வே நிர்வாகம்கூட, முக்கிய இடங்களில் பல அடுக்கு வாகன நிறுத்த மையங்களை அமைக்கத் தனியாரை ஊக்கப்படுத்துகிறது. அதாவது ""கட்டு-பராமரி-பின்னர் கொடு'' எனும் ஒப்பந்தத்தில் தொடங்க தனியாரை அழைக்கிறார்கள். இத்தகைய வாகன நிறுத்தும் இடங்கள் மூலம் அதிகம் சம்பாதிக்க முடியும் என்பதை நமது அரசியல்வாதிகள் புரிந்து வைத்திருக்கிறார்கள். ஒரு மணி நேரத்துக்கு கார்களுக்கு ரூ. 50 வரை கட்டணம் வசூலிக்க முடியும் என்பதால், இத்தகைய முயற்சிகளில் தனியாரை -அல்லது தங்கள் பினாமிகளை- இறக்கிவிட்டு, அதன் மூலம் கொள்ளைலாபம் பார்க்க நினைக்கிறார்கள். நகரில் ஓர் இடத்தை விலைக்கு வாங்கி இதுபோல வாகன நிறுத்தும் இடங்களைத் தங்களது சொந்தச் செலவில் நடத்துவதைக்காட்டிலும் அரசுக்குச் சொந்தமான இடங்களில் சமூகநோக்கு என்கிற போலி காரணத்தைக்கூறி, ஊர்ப்பணத்தில் கொழிக்க அரசியல்வாதிகள் முற்பட்டிருக்கிறார்கள். வீட்டில் கார் நிறுத்தவே இடமில்லை என்றாலும் கார் வாங்கி, தெருவில் நிறுத்திவைத்து, இரவில் போர்வைபோட்டு மூடி வைத்து, சாலையில் செல்வோருக்கு இடையூறாக நிற்கும் கார்கள்தான் நகரங்களில் அதிகம். கார் நிறுத்த இடம் இருப்பவர்களுக்கு மட்டுமே கார் வாங்க முடியும் என்று சட்டம் வந்தால்? வராது. வர விடமாட்டார்கள். இந்த அரசும் ஆட்சியும் கார்களில் பயணிப்பவர்களால் கார் தயாரிப்பாளர்களின் லாபத்துக்காக நடத்தப்படும் ஆட்சியாக இருக்கும்போது பாதசாரிகளின் நலன் பேணப்படாமல் இருப்பதில் வியப்பென்ன இருக்கிறது! |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |