Posted by Haja Mohideen
(Hajas) on 10/30/2010
|
|||
குத்திரபாஞ்சான் அருவி மேம்பாட்டு பணிக்கு ரூ.1.11 கோடி ஒதுக்கீடு
வள்ளியூர்: பணகுடி குத்திரபாஞ்சான் அருவியில் அடிப்படை வசதி செய்து கொடுக்க டவுன் பஞ்.,மூலம் பணிகள் மேற்கொள்ள தமிழக அரசு 1.11 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக டவுன் பஞ். துணைத் தலைவர் சங்கர் தெரிவித்தார். பணகுடி ஊருக்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஏழைகளின் குற்றாலம் என்று அழைக்கப்படும் குத்திரபாஞ்சான் அருவி உள்ளது. இங்கு மழைக்காலங்களில் குற்றாலத்தை போன்று அருவியில் தண்ணீர் கொட்டும். இதனால் சுற்றுலா பயணிகள் குத்திரபாஞ்சான் அருவிக்கு குடும்பத்தினருடன் வந்து குளித்துவிட்டு அருகிலுள்ள கன்னிமாரான் தோப்பிற்கு சென்று விட்டு மகிழ்ச்சியுடன் செல்கின்றனர்.
இப்பகுதியில் போதுமான அடிப்படை வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் ராதாபுரம் எம்.எல்.ஏ. அப்பாவுவிடம் கோரிக்கை விடுத்தனர். அப்பாவு எம்.எல்.ஏ. சட்டசபையில் சுற்றுலாத்துறை மானிய கோரிக்கையின் போது, "பணகுடி குத்திரபாஞ்சான் அருவியை மேம்படுத்த வேண்டும்' என்று அமைச்சர் சுரேஷ்ராஜனிடம் கோரிக்கை விடுத்தார். உடனே இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை அனுப்ப மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவு அனுப்பப்பட்டது. அதனடிப்படையில் கலெக்டர் ஜெயராமன் பணகுடி குத்திரபாஞ்சான் அருவிக்கு நேரில் சென்று ஆய்வு செய்து சுற்றுலாத்துறைக்கு அறிக்கையை அனுப்பினார்.
அதனடிப்படையில் தற்போது குத்திரபாஞ்சான் அருவிக்கு செல்லும் பாதையை தார்ரோடாக அமைக்க 65 லட்ச ரூபாயும், குத்திரபாஞ்சான் மற்றும் கன்னிமாரான் தோப்பு அருகில் உடை மாற்றும் அறை கட்ட 14 லட்ச ரூபாயும், ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப்பறை கட்ட 26 லட்ச ரூபாயும், கன்னிமாரான் அருவி அருகே படித்துறை அமைக்க 6.25 லட்ச ரூபாயும் ஆக மொத்தம் ஒரு கோடியே 11 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த பணிகளை பணகுடி டவுன் பஞ். மூலம் மேற்கொள்ளவும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இவ்வாறு பணகுடி டவுன் பஞ். துணைத் தலைவர் சங்கர் தெரிவித்துள்ளார். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |