Posted by Haja Mohideen
(Hajas) on 11/6/2010
|
|||
500 ரூபாய் கள்ளநோட்டு அச்சிட்ட கேரள தம்பதி நெல்லையில் கைது: லேப்டாப், பிர்ன்டர் பறிமுதல் நவம்பர் 07,2010,04:18 IST திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 500 ரூபாய் கள்ளநோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டதாக கணவன், மனைவி இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 13 ஆயிரத்து 500 ரூபாய் கள்ளநோட்டுகள், லேப்டாப், ஸ்கிரீன் பிரின்ட் மிஷின் மற்றும் கார் என 2 லட்சம் மதிப்புள்ள பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நெல்லை ஜங்ஷன் பகுதியில் கடந்த 4ம் தேதி இரவு ஒருவர் 500 ரூபாய் நோட்டை மாற்றி 200 ரூபாய்க்கு பட்டாசு வாங்கி சென்றார். இதுபோல் அவர் தொடர்ந்து 500 ரூபாயை மாற்றுவதும், மீதமுள்ள ரூபாயை வாங்குவதுமாக இருந்தார். இதனால் அவர் மீது பட்டாசு கடைக்காரருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அப்போது அவர் கொடுத்த 500 ரூபாய் நோட்டுகளை கடைக்காரர்கள் பரிசோதனை செய்த போது, ரூபாய் நோட்டுகளின் நம்பர்கள் ஒரே மாதிரியாக இருந்தன. இதையடுத்து பட்டாசு கடைக்காரர் அவரை பிடித்து நெல்லை ஜங்ஷன் போலீசில் ஒப்படைத்தார். இதையடுத்து உதவி கமிஷனர் லயோலா இக்னேஷியஸ், இன்ஸ்பெக்டர் சிவசுப்பு மற்றும் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவரது சொந்த ஊர் கேரள மாநிலம் கொல்லம் அருகேயுள்ள பத்மநாபபுரத்தை சேர்ந்தவர் அப்துல்ரஷித்(47) என்பதும் கடந்த 2 மாதத்திற்கு முன்பு பழையபேட்டை இ.பி.,அலுவலகம் அருகில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருப்பதாகவும் கூறினார்.
இதையடுத்து பழையபேட்டையில் உள்ள அவரது வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் 13 ஆயிரத்து 500 ரூபாய் கள்ள நோட்டுக்கள் கலர் ஜெராக்ஸ் பிரின்டர், ஸ்கேனர், லேப்டாப் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கள்ளநோட்டு தயாரிப்பதற்கு அப்துல் ரஷித்திற்கு உதவியாக இருந்ததாக அவரது மனைவி அஷ்வதி(45) கைது செய்யப்பட்டார்.
"திடுக்'தகவல்: கேரளாவில் அப்துல் ரஷித் டிசைனிங் இன்ஜினியரிங்காக வேலைபார்த்து வந்தார். அவரது முதல் மனைவி கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து சென்றார். பின்னர் அஷ்வதி என்ற பெண்ணை 2வதாக திருமணம் செய்துகொண்டார். இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று கள்ளநோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டுள்ளனர். ஒரிஜினல் 500 ரூபாய் நோட்டை ஸ்கேனர் மூலம் கலர் ஜெராக்ஸ் எடுத்து ஸ்கீரின் பிரின்டிங் மூலம் காந்திபடம், கம்பிகோடு, ஆகியவற்றை பிரின்ட் செய்து 500 ரூபாய் கள்ளநோட்டை தயாரித்துள்ளனர். கடந்த 2 மாதங்களாக நெல்லை மாவட்டத்தில் பல ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டிருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்தும் அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். கடந்த 2007ம் ஆண்டு கள்ளநோட்டுகளை தயாரித்து புழக்கத்தில் விட்டதாக அப்துல்ரஷித்தை ஏற்கெனவே கேரள போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |