Posted by Haja Mohideen
(Hajas) on 12/12/2010
|
|||
போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு: பழச்சாறு விற்பனையாளரின் திட்டம் உதாசீனம் பதிவு செய்த நாள் : டிசம்பர் 11,2010,23:12 IST சென்னை : நகரின் நெரிசலுக்கு, தீர்வு கூறிய பழச்சாறு விற்பனையாளரின் ஆலோசனையை ஏற்க வேண்டும், என ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தும், கடந்த ஒன்பது மாதங்களாக, எவ்வித பதிலளிக்காமல் அரசு கிடப்பில் போட்டுள்ளது.
சென்னை தி.நகரைச் சேர்ந்த சரவணனுக்கு காலை பத்து மணிக்கு, "இன்டர்வியூ'. வீட்டில் இருந்து விரைந்து கிளம்பியும்,"இன்டர்வியூ'க்கு சரியான நேரத்திற்கு செல்ல முடியவில்லை. காரணம் போக்குவரத்து நெரிசல். சரவணனைப் போல் சென்னையில் வசிக்கும் ஒவ்வொரு வரும் நாள்தோறும் இந்த பிரச்னையை சந்திக்கின்றனர். சென்னை போன்ற பெரு நகரங்களில் வசித்து வரும் பலரின், ஒரு நாளின் பெரும் பாலான நேரம், போக்குவரத்து நெரிசலில் சிக்கி வீணாகிறது. நெரிசலுக்கு தீர்வு காண, தன்னார்வ தொண்டு நிறுவனம் மற்றும் சமூக சேவகர்கள் கூறும் அறிவுரைகளை அரசு கொஞ்ச மாவது, காது கொடுத்து பரீசிலிக்க வேண்டும். அவ்வாறு, பரீசிலிக்காததால் வெகுண்டு எழுந்த ஒரு சிலர் ஐகோர்ட் வாசல் படியில் ஏறிய சம்பவமும் நிகழந்திருக்கிறது. அப்படி தான், கடந்த ஐந்து வருடத்திற்கும் மேலாக, நகரில் உள்ள போக்குவரத்து நெரி சலை குறைக்க தன்னால் முடிந்தளவு பல ஆய்வுகள் மற்றும் வெளிநாடுகளில் பின்பற்றப்படும் முறை குறித்தும் பல ஆலோசனைகளை அரசுக்கு தெரிவித்திருக்கிறார்.
பழச்சாறு விற்பனையாளரான சாகுல் ஹமீது(49). மூன்றாம் வகுப்பு வரை படித்திருக்கும் அவர், கடந்த 14 வருடங்களாக சென்னை தேனாம்பேட்டையில் வசித்தும் வருகிறார். சென்னையில் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் தள்ளுவண்டியில் பழச்சாறு விற்பனை செய்து வருகிறார். இங்கேயே பிறந்து வளர்ந்ததால், நகரின் சமீபத்திய அனைத்து மாற்றம் மற்றும் வளர்ச்சியை, ஒரு போதும் அவர் கவனிக்க தவறியதில்லை. அவசர வேலைகளின் போது, சாலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி நேரம் விரையமாவதை தானும் அனுபவித்ததால், பாங்காங், சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளுக்குச் தன் சொந்த செலவில் சென்று, போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க, அந்நாடுகள் பின்பற்றும் முறைகளை பார்த்தறிந்து வந்திருக் கிறார். அதோடு மட்டுமில்லாமல், தன்னுடைய பணி முடிந்த பிறகு, நகரில் உள்ள போக்குவரத்து போலீசாருடன் சேர்ந்து, போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
நகரில் ஏற்படும் நெரிசலை கட்டுப்படுத்த, அதை விடச் சிறப்பான முறைகளை செயல்படுத்தினால், நெரிசலுக்கு தீர்வு ஏற்படும் என்று தான் உருவாக்கிய திட்டத்தை, அதிகாரிகள் மற்றும் அரசுக்கு நேரடியாகவும், கடிதம் மூலமாகவும் தெரியப்படுத்தினார். இதற்கு உரிய அங்கீகாரம் கிடைக்காததால், சென்னை ஐகோர்ட் வாசற்படியேறிய சாகுல் ஹமீதுக்கு ஐகோர்ட்டும் சாதகமான தீர்ப்பளித்தது. "மனுதாரரின் ஆலோசனைகளின் மூலம் போக்குவரத்து நெரிசல் குறையுமானால், அதைப் பரிசீலிக்கத் தயாராக உள்ளதாக கூடுதல் கமிஷனர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால், போக்குவரத்தை ஒழுங்குபடுத்த தன்னிடமுள்ள ஆலோசனை களை மனுதாரர் எழுத்து பூர்வமாக போக்குவரத்து கூடுதல் கமிஷனரிடம் அளிக்க வேண்டும். அதை அவர் பரிசீலிக்க வேண்டும்' என்று கடந்த மார்ச் மாதம் ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது. ஐகோர்ட் உத்தரவின் பேரில், தன்னிடமுள்ள ஆலோசனைகளை எழுத்து பூர்வமாக, காவல் கூடுதல் கமிஷனரிடம் (போக்குவரத்து) அளித்தும், கடந்த ஒன்பது மாதங்களாக இவரின் திட்டங்களுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை என்பது தான் வேதனை.
இதுகுறித்து, சாகுல் ஹமீது கூறியதாவது: நகரில் பல இடங்களில் ஏற்படும், போக்குவரத்து நெரிசலுக்கு அதிகப்படியான தேவையில்லாத, "சிக்னல்கள்', ஒரு வழி பாதை மற்றும் இடது புறம் திரும்ப விடுவதில்லை ஆகியவை தான் முக்கிய காரணம். போக்குவரத்து பிரச்னையை தீர்ப்பதில் நிர்வாகத்திற்குள் ஏற்படும் குளறுபடியும் ஒரு காரணம். நெரி சலை 90 சதவீதம் கட்டுப்படுத்தும் வகையில், அது குறித்து ஒரு திட்டத்தையும் தயார் செய்து அரசுக்கு தெரிவித்தேன். உதாரணமாக, சாலையில் நேராக சென்றால் பத்து நிமிடத்திற்கு 100 வாகனங்கள், வலது புறத்தில் திரும்பினால் 50 வாகனங்கள், "யு' திருப்பம் போட்டால் 25 வாகனங்கள் தான் செல்ல முடியும். நகரில் பெரும்பாலான இடத்தில்,"யு' திருப்பங்கள் உள்ளன. இது போன்ற பல குறைகளையும், புதிய முறையையும் திட்டமாக தயாரித்து அளித்தேன். நான் மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருப்பதால், என்னையும், திட்டத்தையும் உதாசீனப்படுத்தியதால், ஐகோர்ட் வரை சென்றேன். அதில், என்னுடைய ஆலோசனையை பரிசீலிக்க வேண்டும் என கோர்ட் உத்தரவு பிறப்பித்தும், கடந்த ஒன்பது மாதங்களாக, அதிகாரிகளிடமிருந்து எவ்வித அறிவிப்பும் இல்லை. நான் கொடுக்கும் திட்டத்தில் தோல்வி ஏற்பட்டால் பொதுப்பணியில் ஈடுபடுவதையே விட்டு விடுகிறேன். இவ்வாறு சாகுல் ஹமீது கூறினார்.
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |