Posted by Haja Mohideen
(Hajas) on 12/18/2010
|
|||
வாக்காளர்களை கவரும் கட்சிகள் தந்திரம் : கண்காணிக்க தேர்தல் கமிஷன் புது திட்டம் டிசம்பர் 17,2010,23:02 IST
புதுடில்லி : தமிழக சட்டசபை தேர்தலில் பணப் புழக்கத்தை தடுக்க, தேர்தல் கமிஷன் அதிரடி வியூகங்களை வகுத்துள்ளது. வேட்பாளர்களின் சொத்து பட்டியல் தாக்கல், வேட்பாளர்களின் செலவுகளை கண்காணிப்பது உள்ளிட்ட நடைமுறைகளில் கடுமையான விதிமுறைகளை பின்பற்ற முடிவு செய்துள்ளது. தமிழகம், மேற்கு வங்கம், கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, தேர்தல்களில் ஓட்டுக்கு பணம் என்ற நடைமுறையை அரசியல் கட்சிகள் பின்பற்றுவதாக தேர்தல் கமிஷனுக்கு புகார் வந்துள்ளதை அடுத்து, இந்த மாநிலங்களில் நடக்கவுள்ள தேர்தல்களில் கடுமையான விதிமுறைகளை பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தலைமை தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் கூறியதாவது: பீகாரில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், சில புதிய விதிமுறைகள் பின்பற்றப்பட்டன. இதன்படி, முக்கிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களில் வருமான வரித் துறை அதிகாரிகளைக் கொண்ட குழு ஒன்றை நியமித்து, அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் பணம் கொண்டு வருவோரை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நடைமுறையை, அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள மாநிலங்களிலும் பின்பற்ற திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், தேர்தலின் போது பணப் புழக்கத்தை தடுக்கும் வகையில் வருமான வரித்துறையை முழுவதுமாக பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் கமிஷன் அதிகாரிகள், நேரடி வரித் துறை அதிகாரிகளிடம் சமீபத்தில் ஆலோசனை நடத்தினர். இதன்படி, தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளர்களையும் கண்காணிக்க ஒரு குழு அமைக்கப்படவுள்ளது. வேட்பாளர்கள் தாக்கல் செய்த சொத்து பட்டியலில் உள்ள விவரங்களை இந்த குழு கண்காணிப்பதுடன், அவர்களுக்கு உண்மையில் எவ்வளவு சொத்துக்கள் உள்ளன என்பது பற்றிய விவரங்களை கண்டறிந்து, அவற்றை ரகசிய ஆவணங்களாக வைத்துக்கொள்வர். அவர்கள் புதிதாக செய்த முதலீடுகள், மற்ற சொத்துக்கள் குறித்தும், புதிதாக சொத்து பட்டியலில் தர வேண்டும் என்று அறிவுறுத்தப்படுவர்.
ஒவ்வொரு வேட்பாளர்களும், தேர்தலுக்கென தனியாக ஒரு வங்கிக் கணக்கு துவங்கி, தேர்தல் தொடர்பான வரவு, செலவுகளை அந்த வங்கிக் கணக்கின் கீழ் அவர்கள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்படும். சட்ட விரோதமாக பணம் செலவிடப்படுவதை தடுக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க, ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் 24 மணி நேரமும் செயல்படக் கூடிய வகையிலான ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும். ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியிலும், தேர்தல் கமிஷன் சார்பில் பறக்கும் படை, கண்காணிப்பு படை அமைக்கப்படும். இந்த சிறப்பு படைப் பிரிவினர், தங்களுக்கு சந்தேகம் ஏற்படும் வகையில் யாராவது பணம் செலவழித்தாலோ, பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தாலோ, அவற்றை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தும். வேட்பு மனு தாக்கல் செய்வதில் இருந்து, தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் வரை வேட்பாளர்கள் செய்யும் செலவுகளை, வரித் துறை மற்றும் வருவாய் துறையினர் தினந்தோறும் கண்காணிப்பர். ஒவ்வொரு வேட்பாளரின் அன்றாட நடவடிக்கையும் வீடியோ மூலம் பதிவு செய்வதற்கும் ஒரு குழு அமைக்கப்படும். இவர்கள், வேட்பாளர்கள் பயன்படுத்தும் வாகனங்கள், நாற்காலிகள், மேடைகள் மற்றும் விளம்பர பலகைகள், போஸ்டர்கள் ஆகியவற்றை பதிவு செய்து, அதுகுறித்த பதிவுகளை அதிகாரிகளிடம் அளிப்பர்.
வேட்பாளர்கள் தினந்தோறும் செய்யும் செலவுகளைக் கண்காணித்து, அவற்றை பதிவு செய்து, இந்த செலவுகளை வேட்பாளர்களின் மொத்த செலவுத் தொகையில் தினந்தோறும் கழித்து வரும் பணியை செய்வதற்கும் ஒரு குழு அமைக்கப்படும். இந்த குழுவில் அதிகாரி மட்டத்திலான ஒருவரும், எழுத்தாளர் அளவிலான ஒருவரும் இடம் பெறுவர். விளம்பரம் அன்றி, செய்திகளை சாதகமாக மீடியாக்களில் வெளியிடுவதற்காக செலவிடப்படும் தொகை குறித்த தகவல்களும் கண்காணிக்கப்படும். இதற்காக, மாவட்ட உதவி கல்வி அதிகாரி தலைமையில் ஒரு குழு அமைக்கப்படும். இதில், மாவட்ட மக்கள் தொடர்புத் துறை அதிகாரி மற்றும் அத்துறையின் ஊழியர்களும் இடம் பெறுவர். இவர்கள், தினந்தோறும் பத்திரிகை, "டிவி'க்கள், உள்ளூர் கேபிள் சேனல்களில் வெளியாகும் செய்திகளை ஆய்வு செய்து, அது தொடர்பான விவரங்களை, கணக்குகளை பராமரிக்கும் குழுவிடம் அளிப்பர். ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பான புகார்களை பெறுவதற்காக, "கால் சென்டர்கள்' அமைக்கப்படும். தேர்தலின் போது சட்ட விரோத பணப் புழக்கம் பற்றிய தகவல்களை, வாக்காளர்கள் இந்த கால் சென்டர்களில் பதிவு செய்யலாம். இவ்வாறு தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்தன.
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |