Posted by Haja Mohideen
(Hajas) on 1/25/2011
|
|||
மீனவர்கள் மீதான தொடர் தாக்குதலுக்கு காரணம் என்ன? ஜனவரி 25,2011,23:21 IST
மீன் பிடிப்பதற்காக கடலுக்குள் செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்துகிறது. படகுகளை பிடுங்குவது, அவற்றை உடைப்பது, வலைகளை அறுப்பது, மீனவர்களை தாக்குவது போன்ற காரியங்கள் சர்வசாதாரணமாக நடக்கின்றன.
தொடர்ந்து மீனவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதற்கான காரணமும், அதை தடுத்து நிறுத்த முடியாத அவலத்துக்கும் காரணம் என்ன என்பது குறித்து, தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:மீனவர்களின் தாக்குதலுக்கு காரணம், கச்சத்தீவை இலங்கைக்கு இந்தியா தாரை வார்த்தது தான் என்றும், அதை திரும்பப் பெற வேண்டுமென்றும் கோரிக்கை வைக்கப்பட்டு வருகின்றன. 1974ல், இலங்கை மற்றும் இந்திய அரசுகளுக்கு இடையில் போடப்பட்ட ஒப்பந்தம் அது.
இந்தியாவுக்கு சொந்தமாக இருந்தாலும் கூட, கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது இந்த ஒப்பந்தம் தான்.ராமநாதபுரம் மகாராஜாவுக்கு சொந்தமாக, இந்த கச்சத்தீவு இருந்ததற்கான அதிகாரப்பூர்வ அரசு ஆவணங்கள் இருக்கின்றன. தவிர, பூகோள அடிப்படையில் இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகவும் இன்றியமையாத முக்கிய இடம் கச்சத்தீவு. இப்படியிருந்தும், கச்சத்தீவை இந்திய அரசு இலங்கைக்கு தாரை வார்த்தது.அந்த ஒப்பந்தத்தில், தமிழக மீனவர்களுக்கு என, சில உரிமைகள் அளிக்கப்பட்டன. மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் தங்களது வலைகளை உலர்த்துவதற்கு உரிமை அளிக்கப்பட்டது. இது தவிர, கச்சத்தீவு அந்தோணியார் கோவிலில் நடக்கும் திருவிழாவுக்கு சென்று வருவதற்கும் உரிமைகள் அளிக்கப்பட்டன.வலைகளை உலர்த்துவதற்கு உரிமை உள்ளது என்றாலே, அப்பகுதியில் மீன் பிடிப்பதற்கும் உரிமை உள்ளது என்பது தான் அர்த்தம்.
அந்த காலத்தில் நைலான் வலைகளை மட்டுமே மீனவர்கள் பயன்படுத்தினர். காலப்போக்கில் இது மாறிவிட்டதால், வலைகளை உலர்த்த வேண்டிய அவசியம் தமிழக மீனவர்களுக்கு இல்லாமல் போய் இருக்கலாம்.அதுகூட, 34 ஆண்டுகளாக எந்த பிரச்னையும் இல்லாமல் தான் இருந்து வந்தது. அவ்வப்போது சிறிய அளவில் பிரச்னைகள் வருமே தவிர, பெரிய அளவில் எந்த சிக்கலும் எழாமல் இருந்தது. இந்த சூழ்நிலையில், கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் ஆட்சி நடைபெற்ற 2008ல், திடீரென ஒப்பந்தம் ஏற்பட்டது.இரு நாட்டு அரசுகளுக்கு இடையில், இந்த ஒப்பந்தம் போடவில்லை. விடுதலைப் புலிகளை ஒடுக்குவதற்காக அந்நாட்டு அரசு முனைப்பாக இருந்த சமயம் அது.
அப்போது இருநாட்டு அதிகாரிகள் கூடி ஆலோசித்து, அவர்கள் மட்டத்திலேயே போட்டுக் கொண்ட ஒப்பந்தம் அது.அந்த ஒப்பந்தப்படி, இரு நாடுகளுக்கு இடையிலான சென்சிடிவ் பகுதிகள் எது எது என கண்டறிந்து, அப்பகுதிகளில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க கூடாது என, இலங்கை தரப்பு அரசு அதிகாரிகளால் வரையறை செய்யப்பட்டது.அப்பகுதிகளுக்குள் மீன்பிடிக்க வந்தால், நடவடிக்கை எடுக்க அனுமதிக்க வேண்டுமென்றும் அவர்கள் தரப்பில் கூறப்பட்டது. இலங்கை அதிகாரிகளின் கோரிக்கைகளுக்கு, இந்திய அதிகாரிகள் அப்படியே ஒப்புதல் அளித்தனர்.
அப்படி, இலங்கை அதிகாரிகள் கேட்ட கோரிக்கைகளுக்கு, இந்திய அரசு அதிகாரிகளால் அனுமதி வழங்கப்பட்டு போடப்பட்ட ஒப்பந்தம் தான் அது.அந்த ஒப்பந்தம் தான் இப்போதும் அமலில் உள்ளது. இந்த ஒப்பந்தத்தை தமிழக மீனவர்கள் மீறுகின்றனர் எனக் கூறி, இந்திய கடற்படையினரோ, கப்பல் ரோந்து படையினரோ பாதுகாப்பு தர முடியாத சூழ்நிலை உள்ளது.நடைமுறையில் உள்ள உண்மை இது என்றாலும், இது பெரிய அளவில் வெளியில் தெரியாமல் உள்ளது. இரு நாட்டு அரசுகள் கூட போடாமல், வெறும் இரு தரப்பு அதிகாரிகளே போட்டுக் கொண்ட அந்த ஒப்பந்தத்தை காரணம் காட்டி, மீனவர்களுக்கு பாதுகாப்பு மறுக்கப்படுகிறது.இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை தமிழக அரசியல் கட்சிகளோ, போராடும் பிற அமைப்புகளோ முன் வைப்பதில்லை.
இந்த ஒப்பந்தம் தான், தமிழக மீனவர்களின் மீதான தாக்குதலுக்கு வழி வகுக்கிறது. விடுதலைப் புலிகள் அமைப்பு செயல்பட்ட காலத்தில், பல காரணங்களுக்காக போடப்பட்டது அந்த ஒப்பந்தம்.ஆனால், இப்போது புலிகள் அமைப்பே இல்லை என்றாகிவிட்ட பிறகும், அந்த ஒப்பந்தம் ஏன் நீடிக்கிறது என்பது குறித்தும், அந்த ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென்ற கோரிக்கையும் தீவிரமாக எழாமல் இருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |