களக்காடு அருகே யானைகள் திடீர் விசிட்:பள்ளி குழந்தைகள் அலறியடித்து ஓட்டம்
ஜனவரி 29,2011,01:51 IST
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே, காட்டுயானைகள் ஊருக்குள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் ஐயப்ப சீசனையொட்டி கேரள வனப்பகுதிக்குள் நிலவும் கடுங்குளிர் மற்றும் கொசுக்கடியை தவிர்க்க, நெல்லை மாவட்ட வனப்பகுதிக்குள் யானைகள் வருகின்றன. சில மாதங்களாக களக்காடு வனப்பகுதியில், 20 யானைகள் குட்டிகளுடன் அடிக்கடி ஊருக்குள் வந்துபோகின்றன. களக்காடு - சேரன்மகாதேவி ரோட்டியில் பிளவக்கல் இசக்கியம்மன் கோயில், புலவன்குடியிருப்பு பகுதிகளுக்கு அதிகாலையில் வரும் யானைகள், தோட்டங்களில் வாழை, தென்னை மரங்களை சேதப்படுத்தி செல்கின்றன. நேற்று காலை 8 மணிக்கு ஒரு யானை ரோட்டை கடந்து சென்றது. அந்த வழியே சென்ற உ லகன்குளம் பஞ்சாயத்து தலைவர் பீட்டர்(32), யானையை பார்த்ததும் மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தார். ரோட்டை கடக்கும் போது அந்த பைக்கை யானை மிதித்து சேதப்படுத்தியது. அதே பகுதியில் பள்ளி வேனுக்காக காத்திருந்த 20 மாணவ, மாணவிகள் யானையை பார்த்ததும் அலறியடித்து ஓடினர். மலையோரமாக அமைந்துள்ள கிறிஸ்தவ பயிற்சி மையத்திற்குள் அதிகாலை 5 மணிக்கு புகுந்த யானைகள் தென்னை மரங்களை சேதப்படுத்தின. காலை 9 மணிக்கு மீண்டும் வனப்பகுதிக்குள் திரும்பின. அதிகாலையில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிக்கு யானைகள் வருவது பொதுமக்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
http://www.dinamalar.com/district_detail.asp?id=176426
|