Posted by Haja Mohideen
(Hajas) on 2/2/2011
|
|||
ஸ்பெக்ட்ரம் ஊழல்: ராசா, 2 அதிகாரிகள் கைது-சிபிஐ அதிரடி,அதிர்ச்சியில் திமுக!
புதன்கிழமை, பிப்ரவரி 2, 2011, 13:45[IST] டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு ஊழல் விவகாரம் தொடர்பாக முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா, அவரது சகோதரர் கலிய பெருமாள் ஆகியோரை சிபிஐ இன்று கைது செய்தது. ராசாவுடன் முன்னாள் தொலைத் தொடர்புத்துறைச் செயலாளர் சித்தார்த் பெகுரியா, ராசாவின் முன்னாள் தனிச் செயலாளர் சந்தோலியா ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ராசா மீது சட்டவிரோத கிரிமினல் செயல்பாடு, தொலைத் தொடர்புத்துறை கொள்கைகளை மீறி சில நிறுவனங்களுக்கு சலுகை வழங்கியது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குகள் தாக்கல் செய்துள்ளது சிபிஐ. ஐபிசி 120B, 13(2), 13(1D) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் தாக்கலாகியுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக ஆ.ராசா, நீரா ராடியா, தொலை தொடர்பு துறை முன்னாள் அதிகாரிகள் உள்பட பலரிடமும் சிபிஐ தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்தப் புகாரையடுத்து நவம்பர் 14ம் தேதி ராசா தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து ராசாவிடம் கடந்த டிசம்பர் மாதம் 24ம் தேதி முதன் முதலில் சிபிஐ விசாரணை நடத்தியது. அப்போது அவரது உறவினர்களிடமும் நண்பரிடமும் விசாரணை நடந்தது. அதற்கு முன் 8ம் தேதி அவரது வீட்டிலும் அவரது உறவினர்களின் வீட்டிலும் என மொத்தம் 14 இடங்களில் ரெய்ட் நடத்தியது. 25ம் தேதி 2வது முறையாக ராசாவிடம் விசாரணை நடத்தினர். இந் நிலையில் நிலையில் நேற்று முன்தினம் டெல்லியில் திமுக தலைவர் கருணாநிதியும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் சட்டமன்றத் தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு நடத்திக் கொண்டிருந்தபோதே ராசாவிடம் சிபிஐ மீண்டும் விசாரணை நடத்தியது. சுமார் 7 மணி நேரம் தொடர்ந்து இந்த விசாரணை நடந்தது. சகோதரரிடமும் விசாரணை-கைது: அதே நேரத்தில் ராசாவின் சகோதரர் கலிய பெருமாளிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந் நிலையில் இன்று காலை முதல் ராசாவிடம் மீண்டும் சிபிஐ அதிகாரிகள் 4வது முறையாக விசாரணை நடத்தினர். டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் வைத்து இந்த விசாரணை நடந்தது. இன்றைய விசாரணையைத் தொடர்ந்து சிபிஐ இன்று முக்கிய முடிவு எடுக்க இருப்பதாக உள்ளதாக நாம் ஏற்கனவே கூறியிருந்தோம். அதே போல இன்று பிற்பகலில் ராசாவை கைது செய்தது சிபிஐ. பின்னர் ஆஅவரது சகோதரர் பெருமாளையும் கைது செய்வதாக சிபிஐ அறிவித்தது. அவர்களுடன் முன்னாள் தொலைத் தொடர்புத்துறைச் செயலாளர் பெகுரியா, ராசாவின் முன்னாள் தனிச் செயலாளர் சந்தோலியா ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந் நிலையில் ராசாவின் மருத்துவர் சிபிஐ தலைமை அலுவலகத்துக்கு விரைந்துள்ளார். இதற்கான காரணம் தெரியவில்லை. ராசா இன்றே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவாரா அல்லது இன்று சிபிஐ அலுவலகத்தில் வைக்கப்பட்டு நாளை சிறையில் அடைக்கப்படுவாரா என்பதும் தெரியவில்லை. ஸ்பெக்ட்ரம் தொடர்பான விசாரணை அறிக்கையை சிபிஐ வரும் 10ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தனது தாக்கல் செய்ய வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு முறைகேடுகளால் நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மத்திய தலைமை தணிக்கைத்துறை குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், ரூ. 22,000 கோடியளவுக்கே நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சிபிஐ தனது முதல் தகவல் அறிக்கையில் (FIR) கூறியுள்ளது. அதே நேரத்தில் தமிழக சட்டமன்றத் தேர்தல் தொகுதிப் பங்கீட்டில் திமுகவை நெருக்கவே இந்த நேரத்தில் சிபிஐ தனது பிடியை இறுக்குவதாகவும் பேச்சுக்கதள் எழுந்துள்ளன. இந்தக் கைது நடவடிக்கையால் திமுக அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. இந் நிலையில் ராசா கைது செய்யப்பட்டதை அதிமுகவினர் .பட்டாசு வெடித்து கொண்டாடினர். திருநெல்வேலி மற்றும் நீலகிரியில் அதிமுகவினர் பட்டாசுகளை வெடித்தனர் http://thatstamil.oneindia.in/news/2011/02/02/cbi-hounds-raja-for-round-4-grilling-aid0090.html |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |