Posted by Haja Mohideen
(Hajas) on 2/7/2011
|
|||
நெல்லை மாவட்ட ஆற்றங்கரை பகுதிகளில் 4வது நாளாக போலீசார் மணல் வேட்டை
பிப்ரவரி 07,2011,00:17 IST திருநெல்வேலி : நெல்லை மாவட்ட ஆற்றங்கரை பகுதியில் தொடர்ந்து நான்காவது நாளாக நேற்றும் போலீசார் மணல் வேட்டையில் ஈடுபட்டனர். இதுவரை 95 மாட்டுவண்டிகள் உட்பட 5 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நெல்லை தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ளுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி தாமிரபரணி ஆற்றுப்பகுதிகளில் பொக்லைன் இயந்திரம் மூலம் மணல் அள்ளுவதற்கு தடை விதித்து தீர்ப்பு அளித்தார். இதனால் தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் மணல் அள்ளமுடியாமல் மணல் கொள்ளையர்கள் தவித்தனர். அவர்கள் லாரிகளில் மணல் அள்ளுவதை நிறுத்திவிட்டு, இரவு நேரங்களில் மாட்டுவண்டி மற்றும் டிராக்டரில் தாமிரபரணி ஆற்றங்கரை பகுதிகளில் மணல் அள்ளுவதாக எஸ்.பி.,விஜயேந்திர பிதரிக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து இரவு நேரங்களில் ஆற்றங்கரை பகுதிகளில் ரோந்துப் பணியை தீவிரப்படுத்தினார். கடந்த 3ம் தேதி முதல் ஆலங்குளம், பழவூர், பனவடலிசத்திரம், முக்கூடல், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சுத்தமல்லி, அம்பாசமுத்திரம், பாப்பாக்குடி போன்ற மாவட்டத்தின் ஆற்றங்கரை பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் நள்ளிரவு கூடன்குளம் ஆற்றங்கரை பகுதியில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட ஒரு டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். கடந்த 3 நாட்களாக ஆற்றங்கரை பகுதியில் தொடர்ந்து நடந்த அதிரடி வேட்டையில் 95 மாட்டு வண்டிகள், 2 டிராக்டர்கள், 2 மினி லாரிகள் மற்றும் 5 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |