தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கன்னடியன் அணையின் தடுப்பு சுவரை அகற்றியே தீர வேண்டும் என்பதை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. நெல்லையில் விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் அந்தப் பகுதி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கன்னடியன் கால்வாய்க்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தாமிரபரணியின் மூன்றாவது அணை கன்னடியன் அணையாகும். இதன்கீழ் ஐந்து அணைகளும், ஏழு கால்வாய்களும் உள்ளன. கன்னடியன் அணையில் தாமிரபரணியின் வெள்ள உபரி நீரை வறண்ட பகுதிகளான சாத்தான்குளம், திசையன்விளைக்குத் திருப்பி விட வெள்ள நீர் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக அணையில் 515 மீட்டர் நீளம், ஒரு மீட்டர் உயரத்திற்குத் தடுப்பு சுவர் கட்டப்பட்டுள்ளது. இதற்கு நெல்லை மாவட்டத்தின் ஒரு பகுதியினரும் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அணையில் கட்டப்பட்ட தடுப்பு சுவரை அகற்ற வேண்டும் என விவசாயிகள் குரல் கொடுத்து வருகின்றனர்.
இதையடுத்து தாமிரபரணி வடிநில வட்ட பொறியாளர்கள் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மதுரை மண்டல தலைமை பொறியாளர் சந்திரசேகரன் 70 மீட்டர் நீளத்துக்குத் தடுப்பு சுவர் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். ஆனால் இதுவரை தடுப்பு சுவர் அகற்றப்படவில்லை. இதனால் கடந்த 1ம்தேதி தாமிரபரணி பாசன அமைப்பு திட்டக்குழு தலைவர் உதயசூரியன் தலைமையில் நெல்லையில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பிறகும் நடவடிக்கை எடுக்கப்படாததால் இன்று பாளையங்கோட்டை திருச்செந்தூர் ரோட்டில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவதாக விவசாயிகள் அறிவித்தனர்.
இதன் காரணமாக தாமிரபரணி வடிநில விவசாய சங்க பிரதிநிதிகளுடன் பொதுப்பணித்துறை மதுரை மண்டல தலைமை பொறியாளர் சந்திரசேகரன் தலைமையில் கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கல்ராஜ், கோட்டாட்சியர் ராஜகிருபாகரன், போலீஸ் அதிகாரிகள் புகழேந்தி, ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் நேற்று இரவு சமாதான பேச்சுவார்த்தை பாளையில் நடத்தப்பட்டது.
3 மணி நேரம் நடந்த கூட்டத்தில் விவசாயிகளின் சரமாரியாக கேள்வி கேட்டனர். அப்போது அதிகாரிகள் தடுப்பு சுவரை அகற்ற 3 மாத கால அவகாசம் கேட்டனர். இதற்கு விவசாயிகள் சம்மதிக்கவில்லை. இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் இன்று திட்டமிட்டபடி நெல்லை, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் பாளை சீனிவாச நகரில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகளுக்கு ஆதரவாக தூத்துக்குடி நகரப்பகுதிகளிலும், நெல்லை,தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடையடைப்பு போராட்டமும் நடத்தப்பட்டது. இது குறித்து தாமிரபரணி பாசன அமைப்பு திட்டக்குழுத் தலைவர் உதயசூரியன் கூறுகையில், "கன்னடியன் அணையில் தடுப்பு சுவரை அகற்ற உறுதியளித்த அதிகாரிகள் தற்போது கோர்ட்டில் வழக்கு உள்ளதாக கூறி 3 மாத காலம் அவகாசம் கேட்கின்றனர். இதனால் திட்டமிட்டபடி முற்றுகை போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்" என்றார்.
கன்னடியன் அணை தடுப்புச்சுவரை அகற்ற கோரி விவசாயிகள் பாளையங்கோட்டையில் இன்று நடத்திய முற்றுகை போராட்டத்தில் வன்முறை வெடித்தது. பேருந்துகள் மீது கற்கள் வீசப்பட்டன. விவசாயிகள் ஆங்காங்கே அமர்ந்து மறியல் செய்தனர். வன்முறையில் ஈடுபட்ட விவசாயிகளைக் கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். போராட்டத்தால் நெல்லை-திருச்செந்தூர், நெல்லை- தூத்துக்குடி சாலைகளில் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது. முன்னதாக அவ்வழியாக வந்த பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதால், அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது.