Posted by Mohamed Uvais
(jasmin) on 2/24/2011
|
|||
லிபியா கலவரத்தில் சிக்கி தவிக்கும் நெல்லை மாவட்ட மக்கள்!http://www.inneram.com/2011022313744/tamil-nadu-workers-in-libya லிபியா கலவரத்தில் தமிழர் ஒருவர் பலியானார். அங்குச் சிக்கித்தவிக்கும் மேலும் 29 தமிழர்களைப் பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
எகிப்தைத் தொடர்ந்து லிபியா நாட்டிலும், அதிபர் கடாபிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்துள்ளது. 42 ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சி நடத்திவரும் கடாபியின் ராணுவத்தினர், புரட்சியை இரும்புக்கரம் கொண்டு அடக்கி வருகிறார்கள். வீதியில் இறங்கி போராடும் மக்கள் மீது போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களில் பறந்து சென்று குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். தலைநகர் திரிபோலி உள்ளிட்ட மற்ற நகரங்களிலும் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. ராணுவத்தினரை எதிர்த்து மக்கள் கலவரங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். வெளிநாட்டு நிறுவனங்கள் சூறையாடப்பட்டு தீவைத்து கொளுத்தப் படுகின்றன. அரசு டெலிவிஷன் நிலையங்களும் சூறையாடப்பட்டன. தலைநகர் திரிபோலி அருகில் உள்ள கொரிய நாட்டு கட்டுமான நிறுவனம், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இரவில் சூறையாடப்பட்டது. இக் கலவரத்தில் அங்குப் பணிபுரிந்த கொரியா மற்றும் வங்காள தேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர் காயம் அடைந்தனர். லிபியா கலவரத்தில் இதுவரை 233 பேர் பலியாகி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட போதிலும், 2 ஆயிரம் பேர் வரை இறந்து இருப்பார்கள் என்று பென்காஸி நகரத்தைச் சேர்ந்தவர் கூறினார். இந்நிலையில், லிபியாவில் நடந்துவரும் கலவரத்தில் தமிழ்நட்டைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் பலியான தகவல் கிடைத்துள்ளது. கொரிய கட்டுமான நிறுவனம் ஒன்றில் தமிழ்நாட்டில் நெல்லை மாவட்டம் சிவகிரி தாலுகா, தலைவன் கோட்டை, ஆலங்குளம் தாலுகா நாகல்குளம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச்சேர்ந்த 30 தொழிலாளர்கள் மின்கோபுரம், காற்றாலைகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். நிறுவனம் அருகில் உள்ள ஒரு கூடாரத்தில் அவர்கள் தங்கி இருந்தனர். இரண்டு நாட்களுக்கு முன்பு அந்தக் கூடாரத்தை ஒரு கும்பல் சுற்றி வளைத்து தாக்கியது. உடனே தமிழக தொழிலாளர்கள் பதறியடித்தபடி அங்கிருந்து சிதறி ஓடினார்கள். அவர்கள் மீது வெடிகுண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினார்கள். இந்தத் தாக்குதலில் தலைவன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த முருகையா (வயது 40) என்பவர் குண்டு பாய்ந்து பலியானார். நாகல்குளத்தைச் சேர்ந்த அசோக்குமார் (24) என்ற வாலிபர் படுகாயம் அடைந்தார். தப்பி ஓடிய மற்ற 28 பேரும், அருகில் உள்ள ஒரு மசூதியில் தஞ்சம் அடைந்தனர். முருகையா பலியான தகவலை, படுகாயம் அடைந்த அசோக்குமார் டெலிபோன் மூலம் முருகையாவின் மனைவி வெள்ளைத்தாயிடம் தெரிவித்தார். ஆனால், கடந்த இரண்டு நாட்களாக தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டு விட்டதால் அங்கிருந்து எந்தத் தகவலும் வரவில்லை என்று அந்த கிராம மக்கள் தெரிவித்தனர். இதற்கிடையில், பலியான முருகையாவின் மனைவி வெள்ளைத்தாய், மகன் கோபால கிருஷ்ணன் (14), மற்றும் லிபியாவில் உள்ள தொழிலாளர்களின் உறவினர்கள் தலைவன் கோட்டை பஞ்சாயத்து தலைவர் பூசைப்பாண்டியன் தலைமையில் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பலியான முருகையாவின் உடலை இந்தியாவுக்குக் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காயம் அடைந்த அசோக்குமார் உள்ளிட்ட லிபியாவில் சிக்கித் தவிக்கும் மற்ற தொழிலாளர்களைப் பத்திரமாக மீட்டு வருவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கலெக்டர் ஜெயராமனிடம் மனு கொடுத்தனர். மனுவைப் பெற்றுக்கொண்ட கலெக்டர் தலைமை செயலாளரிடம் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார் |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |