Posted by Haja Mohideen
(Hajas) on 4/16/2011
|
|||
உங்கள் தோல்வி துவண்டு போக அல்ல.. - 16-04-2011 கல்வி இறுதி ஆண்டு தேர்வுகளும், உயர் கல்வி பயில்வதற்கான நுழைவுத் தேர்வுகளும் என்று மாணவர்கள் தேர்வுப் பயணத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்கள். எந்த தேர்வாக இருந்தாலும் சரி, எப்படி படித்திருந்தாலும், எந்த மாணவருக்கும் தோல்வி ஏற்படுவது சகஜம்தான். ஒரு சில மாணவர்கள், தேர்வில் ஏற்பட்ட தோல்வியால் மனம் துவண்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்குக் கூட போய்விடுவதுண்டு. இதற்கு மாணவர்களது பெற்றோரும் கூட ஒரு காரணமாக அமைந்துவிடுவார்கள். ஆனால், எந்த தோல்வியும் துவண்டு போவதற்காக அல்ல.. நமது வழியை மாற்றி, நம்மை ஒரு நல்ல லட்சியத்தை நோக்கி பயணிக்க வைக்கலாம் என்பதை எடுத்துக் கூற பல வரலாறுகள் உள்ளன. இந்தியாவின் தந்தையாகப் போற்றப்படும் மகாத்மா காந்தி, வழக்கறிஞராக படித்து பட்டம் பெற்றிருந்தால், ஒரு பத்து பேருக்கு தெரிந்த வழக்கறிஞராக மட்டுமே இருந்திருப்பார். ஆனால், வெள்ளையர்கள் அவரை ரயிலில் இருந்து இறக்கிவிட்ட ஒரு சம்பவத்தால் அவர் வாழ்க்கைப் பயணம் தடம் மாறியது. அதனால் அவர் அடைந்தது மகாத்மா என்ற பெருமையை. இதேப்போல, எத்தனையோ பேர், தாங்கள் அடைந்த சிறு தோல்வியால் பயணம் மாறி பெரிய லட்சியங்களை அடைந்துள்ளனர். ஸ்பெயினைச் சேர்ந்த ஜுலியோ என்ற இளைஞன் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டவர். அதீத பயிற்சியில் ஈடுபட்டு, ரியல் மேட்ரிட் அணியில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார். இவர் அணியின் சிறந்த கோல் கீப்பராக வருவார் என்று எல்லோரும் எண்ணினார். ஒரு நாள் கார் விபத்து ஒன்றில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜுலியோவிற்கு நடப்பதே கடினமானது. 18 மாத மருத்துவமனை வாழ்க்கையில் இருந்து வெளியே வந்த ஜுலியோ, தனது வாழ்க்கைப் பயணம் இப்படி இருண்டு விட்டதே என்று எண்ணி கண்ணீர் விட்டார். கண்ணீரை பேனாவில் மையாக ஊற்றி பாடல்கள் எழுதினார். இதனை கிட்டாரில் தானே வாசித்து பாடவும் செய்தார். பின்னாளில், இசை வரலாற்றில் ஜுலியோ இக்லேசியஸ், சிறந்த பத்து பாடகர்களில் ஒருவராக இடம்பெற்றார். 300 ஆல்பங்களை வெளியிட்டு, ஏராளமான ரசிகர்களைப் பெற்றிருந்தார். அந்த கார் விபத்து அவருக்கு நேரிட்டிருக்காவிடில், ஜுலியோ இக்லேசியஸ் வெறும் 100 பேருக்கு தெரிந்த ஒரு கோல் கீப்பராக இருந்திருப்பார். ஆனால் தற்போது உலகமே அறிந்த பாடகராக இருக்கிறார். நமக்கு ஒரு கதவு மூடப்பட்டால், நம்மருகே மற்றொரு கதவு திறந்திருக்கிறது என்று அர்த்தம். ஆனால், பலரும், மூடியே கதவருகே அமர்ந்து அழத்தான் செய்கிறார்களேத் தவிர, திறந்திருக்கும் கதவை கவனிப்பதே இல்லை. ஒரு தோல்வி தந்த அனுபவத்தைக் கொண்டு, நமது வாழ்க்கையை இன்னும் எவ்வாறு சிறப்பாக மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் என்று சிந்திக்க வேண்டும். நாம் அதிகம் விரும்பும் ஒன்றை நாம் இழப்பதற்குக் காரணம், நம்மை அதிகம் விரும்பும் ஒன்று நமக்காக காத்திருக்கிறது என்பதால்தான். தோல்வி அடையும் போது துவண்டு விடாமல், நமக்கிருக்கும் திறமை மீது நம்பிக்கை வைத்து, மற்றொரு நல்ல வழியை பின்பற்றி, லட்சியத்தை அடைய முயற்சியுங்கள். தோல்விதான் நமக்கிருக்கும் திறனை வெளிப்படுத்தும் கருவி என்பதை உணருங்கள். நீங்கள் விரும்பியதே கிடைத்துவிட்டால், உங்கள் மனத் திடம் வெளிப்படாது. உங்கள் மீதான நம்பிக்கை பயனற்றுப் போகும். உங்களைப் பற்றி உங்கள் தோல்வியில்தான் நீங்கள் முழுமையாக அறிய முடியும். பாலிடெக்னில் நுழைவுத் தேர்வில் தோல்வி அடைந்தவர்தான் ஐன்ஸ்டீன். அவர் விஞ்ஞானியாகவில்லையா. தோல்வி அடைந்துவிட்டோம். நமக்கு எதுவும் தெரியாது என்று அவர் நினைத்திருந்தால் நமக்கு ஐன்ஸ்டீன் என்ற ஒரு நபர் தெரியாமலேப் போய் இருப்பார் அல்லவா? கேரளாவின் ஒரு சிறிய கிராமத்தில் மருத்துவராக வேண்டும் என்று கனவு கண்டார் ஒரு இளைஞர். ஆனால் மருத்துவ நுழைவுத் தேர்வில் தோல்வி அடைந்ததன் மூலமாக அந்த கனவு தகர்ந்தது. தோல்வியில் துவளாமல், அடுத்து எம்.எஸ்சி., முதுநிலை முடித்து ஐடி துறையில் சேர்ந்தார். ஐடி துறையில் தனது திறமையின் மூலம் மிக உயரிய இடத்தை அடைந்தார். அந்த இளைஞன் வேறு யாருமல்ல, இன்போசிஸ் தலைவர் கிரிஸ் கோபாலகிருஷ்ணன்தான். ஒருவேளை கிரிஸ், மருத்துவ நுழைவுத் தேர்வில் தோல்வி அடையாமல் போயிருந்தால், தற்போது கேரளாவின் ஒரு குக் கிராமத்தில், மூக்கொழுகும் குழந்தைக்கு மருந்து எழுதிக் கொடுத்துக் கொண்டிருப்பார். தோல்வியின் காரணமாக உலகமறிந்த சா·ப்ட்வேர் நிறுவனத்தின் தலைவராகியுள்ளார். எனவே, மாணவர்களே, தோல்வி என்பது வெற்றியின் முதற்படி என்ற பழமொழி பொய்யல்ல. ஒரு வெற்றியை பெற்றவர்கள், அந்த படிகட்டிலேயே அமர்ந்துவிடுவார்கள். தோல்வியினால், அடுத்தடுத்த படிகட்டுகளை அடைந்து உச்சத்தை எட்டுபவர்கள்தான் அதிகமாக ஜெயிக்கிறார்கள். எந்த தோல்வியும், நிரந்தரமல்ல. ஒரு கதவு மூடினால், அதனருகில் இருக்கும் மற்றொரு கதவை பலம் கொண்டு திறவுங்கள். நீங்கள் பயணிக்கும் பாதை லட்சியத்தை எட்டுவதாக இருக்கும். தோல்வியைக் கண்டு துவளாதீர்கள். http://kalvimalar.dinamalar.com/tamil/NewsDetails.asp?id=9781 |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |