ஒசாமாவின் ‘படுகொலை’யும் - உலக அமைதியும்? -- தமிமுன் அன்சாரி
ஒசாமா பின்லேடன் 2.5.2011 அன்று விடிகாலை கொல்லப்பட்டார் என்ற செய்தி உலகை பரபரப்பாக்கியது. நீதி நிலை நாட்டப்பட்டது என அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார். அமெரிக்கா வெள்ளை மாளி...கை முன்பு ஏராளமான அமெரிக்கர்கள் கூடிநின்று அமெரிக்கா வாழ்க என முழக்கமிட்ட காட்சிகள் ஊடகங்கள் வழியே வெளிக்காட்டப்பட்டது. உண்மையில் ஒசாமா கொல்லப்பட்டாரா என்பது உறுதியாக தெரியவில்லை. வாதத்திற்காக ஒபாமா அறிவித்துள்ளதை நம்பி ‘உலக பயங்கரவாதி கொல்லப்பட்டார்’ என ஏகாதிபத்திய நாடுகளின் தலைவர்களும், அவர்களை ஆதரிக்கும் செய்தி ஊடகங்களும் பூரிப்படைகின்றன. உலகின் சரிபாதி மக்களிடம் இதற்கு நேர்மாறான உணர்வுகள் பிரதிபலிப்பதை அவர்கள் ஏனோ வெளிக்காட்டவில்லை. இடதுசாரி போராளி சேகுவேரா, அர்ஜென்டினாவின் காடுகளில், அமெரிக்க கூலிப்படைகளால் கொல்லப்பட்டபோது நிலவிய ஒரு இறுக்கம் இப்போது உலக மக்களில் சரிபாதியினரிடம் நிலவுவதை ஒத்துக் கொள்ள வேண்டும். சேகுவேராவும், ஒசாமாவும் ஒன்றா? என்ற கேள்விக்குள் நாம் செல்லவில்லை. ஆனாலும், இருவரும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்த போராளிகள் என்பதை மறுக்கவில்லை. ஒசாமா யார்? ஏன் ஒரு கலகக்காரராக உருவானார்? அவரை அந்த நிலைக்கு தள்ளிய அரசியல் கொள்கைகள் என்ன என்பது குறித்து திறந்த மனதோடு யாரும் விவாதிக்காதது கவலைக்குரியது. பழைய சோவியத் யூனியனின் நாடுபிடிக்கும் காலணியாதிக்கத்திற்கு எதிராகப் புறப்பட்டு, பின்னர் தனக்கு உதவிய அமெரிக்க காலணியாதிக்கத்திற்கும் எதிராக களமாடியவர்தான் ஒசாமா. இஸ்ரேலின் ரவுடிதனத்திற்கு எதிராக வெடித்தெழுந்த அவர்; மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் போராட்டக்காரராக உருவெடுத்தார். அமெரிக்க & இஸ்ரேலின் அரச பயங்கரவாதங் களை, ஆக்கிரமிப்புகளை எதிர்த்த ஒரே காரணத்திற்காக சர்வதேச தீவிரவாதியாக சித்தரிக்கப்பட்டார், அமெரிக்காவுக்கு மட்டும் பணிந்து போயிருந்தால் அவர் விடுதலைப் போராட்ட வீரராக தோற்றம் காட்டப்பட்டி ருப்பார். செப்&11, 2001&ல் அமெரிக்காவின் இரு கட்டிடங்களை தாக்கியதற்கு ஒசாமாதான் காரணம் என அமெரிக்காவும், அதன் பாஸிஸ &நேச நாடுகளும் விசாரணையே இன்றி குற்றம் சாட்டிய பிறகுதான் அவர் குறிவைக்கப்பட்டார். ‘எனக்கும், அதற்கும் சம்மந்தமில்லை’ என ஒசாமா பலமுறை மறுத்தும் அவர் குரலை&கருத்தைக் கேட்க நாதியில்லை. அவர் சொன்னது உண்மை தான். பல்வேறு அமெரிக்க எதிர்ப்பு தாக்குதல்களில் ஒசாமா பங்கு பெற்றிருந்தார். ஆனால், அவருக்கும் இரட்டைக் கோபுர தாக்குதலுக்கும் சம்மந்தம் இல்லை என்பது பலராலும் ஒத்துக் கொள்ளப்படுகிறது. இதை புரிய சற்று பின்னோக்கி வரலாற்றைப் படிக்க வேண்டும். போன நூற்றாண்டில் கியூபா விலிருந்து ஸ்பெயினை வெளியேற்ற முன்பு அமெரிக்கா ஒரு தந்திரம் செய்தது. அமெரிக்க போர்க்கப்பல் ஒன்று க்யூபா அருகே தகர்க்கப்பட்டு அதில் பல அமெரிக்க கப்பல் படையினர் கொல்லப்பட்டனர். ஸ்பெயின் தான் அதற்கு காரணம் என கூறி க்யூபாவை ஆக்ரமித்திருந்த ஸ்பெயின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி ஸ்பெயினை விரட்டியது. உடனே ஸ்பெயின் இருந்த இடத்தில் அமெரிக்கா உட்கார்ந்து கொண்டது. வெகு காலத்திற்கு பிறகுதான் அமெரிக்க கப்பலை வெடி வைத்து தகர்த்தது அமெரிக்க உளவுத்துறை தான் என்பதும், க்யூபாவை ஆக்ரமிக்க; ஸ்பெயினை துரத்த நடத்தப்பட்ட ஒரு நாடகம்தான் எது என்பதும் தெரியவந்தது. இதற்கு பின்னணி க்யூபாவின் சர்க்கரை வளம்தான்! இதற்காக, தனது சொந்த நாட்டு வீரர்களையே கொலை செய்யும் பயங்கரவாதத்தை அமெரிக்கா செய்தது கண்டு உலகமே அரண்டது. பின்னால் உலகம் அதை மறந்து போனது. அதே யுக்திதான் செப்&11, 2011 சம்பவத்திற்குப் பின்னாலும் உள்ளது. அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பின்னால் அமெரிக்க&இஸ்ரேலிய உளவு அமைப்புகளின் சதித்திட்டம் இருக்கிறது. சோவியத் யூனியன் உடைந்த பிறகு உலகில் பனிப்போர் முடிவுக்கு வந்தது. உலகம் அமைதியை சுவாசித்தது. ஆனால், அதை அமெரிக்கா விரும்பவில்லை. பனிப்போர் நின்றதால் அமெரிக்கா மிகப்பெரும் இழப்பு களை சந்தித்தது. கம்யூனிஸ நாடான சோவியத்தை, உலகின் எதிரியாக சித்தரித்து, அதன் வழியாக தன் ஆயுத உற்பத்தியை அதிகரித்து, வளரும் நாடுகளின் தலையில் அவற்றை சுமக்கச் செய்த அமெரிக்காவுக்கு வியாபாரம் சரிந்தது. பனிப்போர் நின்றதால் அமெரிக்காவின் முதன்மையான தொழிலான ஆயுத தொழிற் சாலைகள் மூடப்பட்டன. வேலை இல்லாத் திண்டாட்டம் பெருகியது. அன்னிய வருவாய் குறைந்தது. அப்போது தான் அமெரிக்க வல்லுனர்களும், அரசியல்வாதிகளும், ராணுவ நிபுணர்களும் நிமிர்ந்து உட்கார்ந்து யோசித்தனர். அமெரிக்காவின் அரசியலையும், பொருளாதாரத்தையும் காப்பாற்ற வேண்டுமெனில், உலக நாடுகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டுமெனில் முன்பு சோவியத் யூனியனை உலகின் எதிரியாக சித்தரித்து வைத்தது போல், தங்களுக்கு ஒரு எதிரி தேவை என்பது குறித்து சிந்தித்தார்கள். அவர்கள் கண்டுபிடித்த கருத்தியல் மாயைதான் இஸ்லாமிய பயங்கரவாதம்! அவர்களின் விருப்பமான எதிரி அல்&குவைதா! உலகை தன் பக்கம் இழுக்க வசதியான ஒரு சக்தி ஒசாமா! இதன் பின்னணியில் உருவான அமெரிக்க & இஸ்ரேலிய சதிதான் செப்11, 2011 சம்பவம் . அதனைத் தொடர்ந்து சொல்லி வைத்தது போல ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது அமெரிக்க கூட்டு கூலிப்படை! அதற்கு செல்லப் பெயர் நேட்டோ படை! அமெரிக்கா தான் உருவாக்கிய தாலிபான்களையே ஆப்கானிய ஆட்சியிலிருந்து அகற்றியது. உஸாமாவை தேடுவதாகக் கூறி அமெரிக்கா ஆப்கானில் முகாமிட்டது. இப்போது, முந்தைய க்யூபா&ஸ்பெ யின்&அமெரிக்க கதையை மீண்டும் நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டும். உலகின் மிக முக்கியமான புவியியல் பிரதேசமான ஆப்கான் இப்போது அமெரிக்க கட்டுப்பாட்டில்! அதன் எண்ணெய் வளங்கள்& இயற்கை வளங்களும் அப்படியே! மிக முக்கியமாக, அமெரிக்கா விரும்பாத இரண்டு வல்லரசு தேசங்களான ரஷ்யா மற்றும் சீனாவுக்கு அருகில் இப்போது அமெரிக்க படைகள் நிலை கொண்டிருக்க ஒரு அரசியல் களமாகவும் ஆப்கான் மாற்றப்பட்டிருக்கிறது. இப்போது மீண்டும் ஒசாமாவின் மரணத்திற்கும், சமகால நிகழ்வுக்கும் வருவோம். ஒசாமா தீவிரவாதி என்றால், அவரை விசாரிக்கும் பொறுப்பை ஐ.நா.வின் கீழ் இயங்கும் சர்வதேச நீதிமன்றம் தான் ஏற்க வேண்டும். அதன் தீர்ப்பின் படியே நடவடிக்கைகள் இருக்க வேண்டும். ஆனால், அமெரிக்க சர்வதேச கட்டப்பஞ்சாயத்து தேசமாக இருப்பதால் யாரும் கேள்வி கேட்க முடியாது. ஒசாமா தீவிரவாதியென்றால், அதற்காக அவர் கொல்லப்பட வேண்டுமென்றால், இரண்டாம் உலகப்போர் தொடங்கி கடந்த ஜார்ஜ் புஷ்ஷின் காலம்வரை பதவி வகித்த அனைத்து அமெரிக்க அதிபர்களும், போர் குற்றவாளிகள் தான். அவர்கள், உலகின் பல்வேறு நாடுகளில் உள்நாட்டு கலகங்களைத் தூண்டி, பல்வேறு ஜனநாயக அரசுகளை கவிழ்த்தவர்கள். பல நாட்டு அதிபர்கள் கொல்லப்பட்ட பின்னணியில் இருந்தவர்கள். பாலஸ்தீனம், பிலிப்பைன்ஸ், ஆப்கான், ஈராக், சூடான், சோமாலியா, லிபியா, பனாமா, என பல நாடுகளில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்கு தலைமையேற்ற வகையில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி வகித்த அமெரிக்க அதிபர்கள் அனைவருமே சர்வதேச பயங்கரவாதிகள் தான். மத்திய கிழக்கு நாடுகளில் ராணுவ ரவுடியாக வலம் வரும் இஸ்ரேலின் ஒவ்வொரு அதிபரும் அதிபயங்கரவாதிகள்தான். லட்சத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன, லெபனான் மக்களை கொன்ற படுபாவிகள் அவர்கள். இந்த சர்வதேச பயங்கரவாதிகளின் எதிர் வடிவம்தான் ஒசாமா. அவர்களின் முடிவில்லாத குற்றங்கள் தான் ஒசாமா பின்லேடனையும், அல்குவைதாவையும் உருவாக்கியது. ஒசாமாவின் மரணத்தில் மகிழ்பவர்கள் எமது கருத்துகளை ஆழமுடன்&நடுநிலையுடன் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒசாமாவின் நடவடிக்கைகளை, அல்குவைதாவின் தாக்குதல்களை ஐ.நாவின் கீழுள்ள சர்வதேச நீதிமன்றம்தான் விசாரிக்க வேண்டுமே ஒழிய வேறு யாரோ அல்ல! காரணம் ஒசாமா முன் வைத்த பிரச்சனைகள் யாவும் சர்வதேச பிரச்சனைகள்; இன்று ஒசாமா கொல்லப்பட்டதால் உலகில் அமைதி திரும்புவது போல பேசுவதும், கருதுவதும், எழுதுவதும் பைத்தியக்காரத்தனமானவை. காரணம் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளும், ஆசிய&ஆப்பிரிக்க& தென்அமெரிக்க நாடுகளின் மீதான அதன் ராணுவ செயல்பாடுகளும், பாலஸ்தீன பிரச்சனையும் தீராதவரை உலக அமைதி என்பது கானல் நீரே! இஸ்ரேலின் அராஜகங்கள் தடுக்கப்படாதவரை உலக அமைதி என்பது கற்பனையே! ஒசாமாவை தீவிரவாதி, பயங்கரவாதி என எழுதுபவர்களுக்கு ஒரு செய்தியை சொல்ல விரும்புகிறோம். நாடுகளின் எல்லைக் கோடுகள் பார்க்காமல், போராடும் போராட்டவாதிகள் சமகாலத்தில் தீவிரவாதியாக சித்தரிக்கப்படலாம். ஆனால், எதிர்கால வரலாறும், அரசியல் ஆய்வாளர்களும் தான் ஒருவரை தீவிரவாதியா? உரிமைப் போராளியா? என்பதை தீர்மானிக்கும் சக்திகள் என்பதை காலம் உணர்த்தியிருக்கிறது. அதற்கு ஒர் உதாரணம் சே&கு&வேரா! இப்போது அமெரிக்காவின் கருத்துக்களை மட்டுமே வெளியிடும், ஆதரிக்கும் ஊடகங் களும், எழுத்தாளர்களும் நடுநிலை குறித்து பேச தகுதியற்றவர்கள். இவர்களை வரலாறு கேள்வி கேட்கும்.