Posted by Haja Mohideen
(Hajas) on 5/18/2011
|
|||
அ.தி.மு.க., அடிபொடிகளின் அலப்பற: ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் அபாயம் பதிவு செய்த நாள் : மே 18,2011,23:33 IST சேலம்: தி.மு.க., அரசு அகற்றப்பட்டு, அ.தி.மு.க., ஆட்சியை கைப்பற்றி உள்ளது. அது வரை அமைதி காத்த அ.தி.மு.க.,வினர், கரைவேஷ்டி சகிதமாக அரசுத்துறை அலுவலகங்களுக்கு படையெடுக்க துவங்கியுள்ளனர். அதிகாரிகளை மிரட்டி, உருட்டி வருதால், துவக்கத்திலேயே அ.தி.மு.க., ஆட்சிக்கு அவப்பெயர் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டு கால தி.மு.க., ஆட்சியில், அமைச்சர், எம்.எல்.ஏ., மாவட்டம், நகரம், ஒன்றியம் ஆதரவாளர் என, கூறிக்கொண்டு பலர் அரசுத்துறைகளை வட்டமிட்டு வந்தனர். கரைவேட்டியில் புரோக்கர்களாக செயல்பட்டு, அரசு திட்டங்கள் மூலம் கொள்ளை லாபம் பார்த்தனர். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வினரின் அட்டகாசத்தால், 234 தொகுதிகளில், 23 தொகுதிகளில் மட்டுமே தி.மு.க., வெற்றி பெற முடிந்தது. அ.தி.மு.க., 146 இடங்களை கைப்பற்றி ஆட்சியை அமைத்தது. சோர்ந்து கிடந்த அ.தி.மு.க.,வினர் கரைவேஷ்டி, கட்சி துண்டுடன் அரசு அலுவலகங்களுக்கு வந்து அதிகாரிகளிடம் அறிமுகப்படுத்தி வருகின்றனர். இதில் நகர, ஒன்றிய செயலாளர் பதவிக்கு கீழ் உள்ளவர்கள், பேரவையை சேர்ந்தவர்கள், படை பரிவாரங்களுடன் வந்து, அதிகாரிகளை மிரட்ட துவங்கி உள்ளனர். அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள, முன்னாள் முதல்வர் படங்களை எடுத்து விட்டு, உடனடியாக ஜெயலலிதா படங்களை வைக்க வேண்டும்; இல்லையென்றால் உங்களை தூக்கியடிப்போம் என்று மிரட்டுகின்றனர். தற்போது வரை முதல்வர் ஜெயலலிதாவின், அதிகாரப்பூர்வமான படம் வரவில்லை. எந்த படம் வைக்கவேண்டும் என, தெரிவிக்கப்பட்டால், மாற்றி வைக்க அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர்.
அதற்கு முன் கட்சி பிரமுகர்களின் தொண்டர் படை என கூறப்படும் பலர் அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு, சத்தம் போடுவது அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முதியோர் உதவித்தொகை, இலவச அரிசி திட்டம் போன்றவற்றால், புரோக்கர்கள் காட்டில் அடைமழை பொழிகிறது. சேலம் மாவட்டம் மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களில், கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்களில், நெற்றி விபூதி பட்டை போல் கட்சி கரைவேஷ்டிகளை கட்டிக்கொண்டு, உதவித்தொகையை பெற்றுத்தருகிறேன், என, ஆள் பிடிக்கும் முயற்சியில் அ.தி.மு.க.,வினர் போர்வையில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். தி.மு.க., ஆட்சிக்கு வந்தபோது, கட்சியினரின் அட்டகாசம் அவ்வளவாக இல்லையென்றாலும், காலப்போக்கில் அதிகப்படியானது. ஆனால், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடனே கட்சியினர் தங்களது துஷ்பிரயோகத்தை காட்ட துவங்கியுள்ளதால், ஆட்சிக்கு வந்தவுடனேயே, ஆட்சிக்கும், முதல்வருக்கும் கெட்டப்பெயர் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மாவட்ட செயலாளர்களும், கட்சி நிர்வாகிகளும், அடாடியில் ஈடுபடும் கட்சியினரை கண்டித்தால், அ.தி.மு.க., ஆட்சி சிறப்பாக அமையும். இல்லையென்றால் தி.மு.க., ஆட்சியின் போது ஏற்பட்டது போன்ற கெட்ட பெயர் அ.தி.மு.க.,வுக்கும் ஏற்படும். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |