வள்ளியூர் : வள்ளியூர் பாத்திமா மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்2 மதிப்பெண் பட்டியல் பெற மாணவிகளிடம் பள்ளி நிர்வாகம் பணம் வசூல் செய்ததால் பெற்றோர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வள்ளியூர் தெற்கு மெயின் ரோட்டில் பாத்திமா மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. அரசு நிதி உதவி பெற்று இயங்கும் இப்பள்ளியில் வள்ளியூர் சுற்றுக் கிராம பகுதிகளை சேர்ந்த ஏராளமான ஏழை எளிய மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில் பிளஸ்2 மதிப்பெண் பட்டியல் நேற்று வழங்கப்பட்டது. இதனால் பள்ளிக்கு மாணவிகள் பெற்றோர்களுடன் வந்திருந்தனர்.
அப்போது மதிப்பெண் பட்டியல் பெற மாணவிகளிடமிருந்து பள்ளி நிர்வாகம் 300 ரூபாய் வசூல் செய்துள்ளனர். அந்த பணத்திற்கு பள்ளி நிர்வாகம் முறையாக ரசீதும் வழங்கவில்லை. இதனால் மதிப்பெண் பட்டியல் வாங்க வந்த மாணவிகள் பலர் பணம் இல்லாமல் திரும்பி வீட்டிற்கு சென்று பணம் எடுத்து வந்து மதிப்பெண் பட்டியலை வாங்கி சென்றனர். இதனால் பல மாணவிகளின் பெற்றோர்கள் பணம் வசூல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் அங்கு வந்த பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுப்பிரமணியனிடம் மாணவிகளின் பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர். அவர் உடனே பள்ளி அலுவலகத்தில் இதுகுறித்து கேட்டுள்ளார். அதற்கு அவர்கள், "பள்ளி நிர்வாகம் ஒவ்வொரு மாணவிக்கும் 300 ரூபாய் வசூல் செய்ய சொல்லியிருக்கிறார்கள். அதன்படி வசூல் செய்கிறோம்' என்று கூறியுள்ளனர். உடனே பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுப்பிரமணியன் மற்றும் பெற்றோர்கள் மாணவிகளுடன் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட பள்ளி முன் திரண்டனர். இதுகுறித்து தகவலறிந்த வள்ளியூர் போலீசார் பள்ளிக்கு வந்து பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்தோடு பேச்சுவார்தையில் ஈடுபட்டனர். அப்போது பள்ளி நிர்வாகத்தினர், "பள்ளியின் வளர்ச்சி பணிகளுக்காக மாணவிகளிடம் பணம் வசூல் செய்கிறோம், கட்டாயமில்லை, விருப்பமிருந்தால் கொடுக்கலாம்' என்று தெரிவித்தனர். இதனால் ஏற்கனவே கட்டாயப்படுத்தி பெற்றோர்கள் வசூல் செய்த 300 ரூபாயை திரும்ப கொடுக்க வேண்டும் என்று கேட்டனர். அதன்படி பெற்றோர்களிடம் வசூல் செய்த பணத்தை பள்ளி நிர்வாகத்தினர் திரும்ப அளித்தனர். இதனால் வெகுநேரம் நடந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு மாணவிகள் பணம் கொடுக்காமல் மதிப்பெண் பட்டியலை வாங்கி சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Thanks: Dinamalar
http://www.dinamalar.com/district_detail.asp?id=246871
|