Posted by Haja Mohideen
(Hajas) on 5/26/2011
|
|||
வேலை வாய்ப்பு பதிவு: மாணவர்கள் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் ஆசிரியர்கள் திணறல் பதிவு செய்த நாள் : மே 25,2011,22:45 IST சென்னை: பிளஸ் 2 மாணவர்களுக்கு நேற்று மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டதை அடுத்து, பள்ளிகளிலேயே இணையதளம் மூலம் வேலை வாய்ப்புக்கு பதிவு செய்தனர். 15 நாட்கள் வரை தமிழக அரசு கால அவகாசம் கொடுத்துள்ள போதும், வேலை வாய்ப்பு அலுவலக பதிவுக்காக நேற்றே அனைத்து மாணவர்களும் திரண்டு வந்ததால், மாணவர்கள் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் ஆசிரியர்கள் திணறினர். பள்ளி பொதுத் தேர்வு முடிக்கும் மாணவர்கள், உடனடியாக வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வர். இதனால், பொதுத் தேர்வு முடிவுக்குப் பின், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் மாணவர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத அளவிற்கு இருக்கும். ஒரே நேரத்தில், ஆயிரக்கணக்கான மாணவர்கள், வேலை வாய்ப்பு அலுவலகங்களை முற்றுகையிடுவதால், பதிவு செய்வதில் கால தாமதம் ஏற்படும். இந்நிலை, கடந்த ஆண்டு மாற்றப்பட்டது. பள்ளிகளிலேயே, இணையதளம் மூலம் பதிவு செய்ய, அப்போதைய அரசு நடவடிக்கை எடுத்தது. இத்திட்டம், இந்த ஆண்டும் தொடர்ந்து செயல்படுத்தப்படுகிறது. நேற்று முதல் 15 நாட்கள் வரை, பள்ளிகளிலேயே பதிவு செய்யலாம் என்றும், அனைத்து மாணவர்களுக்கும் ஒரே பதிவு மூப்பு நாள் கடைபிடிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேற்று காலை பள்ளிகளில் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதும், வேலை வாய்ப்புக்கு பதிவு செய்ய மாணவர்கள், பள்ளிகளுக்கு திரண்டு வந்தனர். சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், மதிப்பெண் சான்றிதழ்களை வாங்கிய கையுடன், வேலை வாய்ப்புக்கு பதிவு செய்ய மாணவர்கள் போட்டி போட்டனர். திருவல்லிக்கேணி, இந்து மேல்நிலைப்பள்ளியில் 225 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வெழுதினர். மதிப்பெண் சான்றிதழ் வாங்க வந்த மாணவர்களில், இணையதளம் மூலம் பதிவு செய்ய விருப்பம் தெரிவித்த மாணவர்களுக்கு மட்டும், படிவம் ஒன்றை ஆசிரியர்கள் வழங்கினர். அதில், மாணவர் பெயர், வகுப்பு, பாடம், மதிப்பெண், முகவரி உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் கேட்கப்பட்டிருந்தன. அதை மாணவர்கள் பூர்த்தி செய்து கொடுத்ததும், ஆசிரியர்களே இணையதளம் மூலம் பதிவு செய்தனர். பள்ளி உதவி தலைமை ஆசிரியர் மோகனதாஸ் கூறும் போது, "இணையதளம் மூலம் நடக்கும் பதிவுக்கு மாணவர்களை கட்டாயப்படுத்துவதில்லை. அதே நேரத்தில், விரும்பும் மாணவர்களுக்கு மட்டும் பதிவு செய்து கொடுக்குமாறு, அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இணையதளம் மூலம் பதிவு செய்கிறோம். அதிகமான மாணவர்கள், இந்த வகையிலான பதிவிற்கு தீவிர ஆர்வம் காட்டுகின்றனர். பதிவு செய்ததும், மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு பதிவெண் ஒதுக்கப்படும். அதை மாணவர்கள், "பிரின்ட்-அவுட்' எடுத்துக் கொள்ளலாம்' என்றார். எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும், 500க்கும் மேற்பட்ட மாணவியர் கூட்டமாக வந்திருந்தனர். தலைமை ஆசிரியை சூசன் எட்வர்ட் கூறும் போது, "15 நாட்களில் என்றைக்கு பதிவு செய்தாலும், இன்றைய தேதி தான் பதிவு தேதியாக கடைபிடிக்கப்படும். இதனால், மாணவியர் தினமும் வந்து பதிவு செய்து கொள்ளலாம். ஆனாலும், முதல் நாளே அவ்வளவு மாணவியரும் வந்திருப்பதால், உடனுக்குடன் பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது' என்றார். பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குனர் ராமேஸ்வர முருகன், மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில், இணையதளம் மூலம் பதிவு செய்யும் பணிகளை பார்வையிட்டார். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |