Posted by Haja Mohideen
(Hajas) on 10/19/2011
|
|||
இடிந்தகரையில் உண்ணாவிரதம் மீண்டும் தொடக்கம்
First Published : 19 Oct 2011 11:08:28 AM IST வள்ளியூர், அக். 18: கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூட வலியுறுத்தி, 3-ம் கட்ட உண்ணாவிரதப் போராட்டம் இடிந்தகரையில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி, செப்டம்பர் 11-ம் தேதி தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது. 127 பேர் உண்ணாவிரதம் இருந்து வந்தனர். பின்னர், மக்களின் அச்சத்தை தீர்க்கும்வரை அணு மின் நிலைய பணிகளை நிறுத்திவைக்க வேண்டும் என்ற தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தை அடுத்து உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.
இந்நிலையில், மத்திய அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை திருப்தி அளிக்காததால், போராட்டக் குழுவினர் 2-ம் கட்ட போராட்டத்தை இடிந்தகரையில் அக்டோபர் 9-ம் தேதி தொடங்கினர். இந்தத் தொடர் உண்ணாவிரதத்தில் 106 பேர் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டம் தீவிரமடைந்து அணு மின் நிலையத்துக்குச் செல்லும் சாலைகளில் போராட்டக்காரர்கள் தர்னாவில் ஈடுபட்டனர். மேலும், அணுமின் நிலையத்துக்கு வேலைக்குச் சென்ற ஒப்பந்தத் தொழிலாளர்களைத் தடுத்து நிறுத்தினர். இதனால், அணு மின் நிலையத்தில் பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தர்னாவை போராட்டக் குழுவினர் கைவிட்டனர். மேலும், உள்ளாட்சித் தேர்தலுக்காக இடிந்தகரையில் நடைபெற்று வந்த தொடர் உண்ணாவிரதத்தை திங்கள்கிழமை மட்டும் நிறுத்திவைத்தனர்.
இந்நிலையில், 3-ம் கட்ட உண்ணாவிரதப் போராட்டம் இடிந்தகரையில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதில் தினம் ஒரு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி, செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதத்தில் இடிந்தகரை மக்கள் கலந்துகொண்டனர்.
இவர்களுக்கு ஆதரவாக கூடங்குளம் மக்களும், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேங்காய்ப்பட்டினத்தைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர். இந்தப் போராட்டத்தில் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி. உதயகுமார், உறுப்பினர்கள் புஷ்பராயன், வழக்குரைஞர் சிவசுப்பிரமணியன், முகிலன், பங்குதந்தை ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மத்திய அரசுக்கான ஆதரவை திமுக வாபஸ் பெற வேண்டும்
கூடங்குளம் பிரச்னையை முன்வைத்து, மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திமுக வாபஸ் பெற வேண்டும் என போராட்டக் குழு வலியுறுத்தியுள்ளது. கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூட வலியுறுத்தி, 3-ம் கட்ட உண்ணாவிரதம் இடிந்தகரையில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதில் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி. உதயகுமார் பேசியது:
அணுமின் நிலையம் தொடர்பாக அணுசக்தித் துறையினர் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாகப் பேசி வருகின்றனர். அணு மின் நிலையத்தில் டிசம்பரில் மின் உற்பத்தி தொடங்கும் என அணுமின் நிலைய அதிகாரிகள் முன்னர் கூறினர். இப்போது நவம்பரில் மின் உற்பத்தி தொடங்கும் என, அணுசக்தி ஆணைய தலைவர் ஸ்ரீகுமார் பானர்ஜி கூறுகிறார். அணு மின் நிலையம் தொடர்பாக தெளிவான நிலையில் மத்திய அரசும் இல்லை; அணு மின் நிலைய அதிகாரிகளும் இல்லை. மக்களின் உயிர்ப் போராட்டம் தொடர்பான பிரச்னையில் பொறுப்பற்ற முறையில் பேசுவது வேதனைக்குரியது.
இந்நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையையும், பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தையும் நாங்கள் வரவேற்கிறோம். எங்களை முதல்வர் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
கூடங்குளம் அணு மின் நிலைய பிரச்னை தொடர்பாக ஆய்வு செய்ய ஒரு குழு ஏற்படுத்தப்படும் என குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் கூறியிருக்கிறார். அவரது குழுவை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. அணுசக்திக்கு ஆதரவானவர்கள் எப்படி மக்கள் நலன் குறித்து நினைப்பார்கள் என்றார் உதயகுமார்.
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |