விலை உயர்வால் கசக்கும் தீபாவளி அசைவ விருந்து! சென்னை: தீபாவளி நோன்புக்கு ஒரு நாள் முன்பாக தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளித்து, புத்துணர்ச்சியோடு ஆட்டுக்கறி அல்லது கோழிக்கறி விருந்து சாப்பிடுவது தமிழர் வழக்கம்.
இதனால் தீபாவளிக்கு ஒரு நாள் முன்பாகவே, அசைவ விற்பனை படுஜோராக இருக்கும். அதற்கேற்றமாதிரி ஆண்டுதோறும் கறி விலையை ஏகத்துக்கும் உயர்த்துவது கறிக்கடைகாரர்கள் வழக்கம்.
கடந்த ஆண்டு தீபாவளியின்போது ஆட்டுக் கறி விலை திடுமென்று 100 ரூபாய் வரை கிலோவுக்கு உயர்த்தப்பட்டது.
இந்த ஆண்டும் இதே நிலைதான்.
ஆட்டுக்கறிவிலை கிலோ ரூ 450 வரை விற்கப்படுகிறது. சென்னையைத் தாண்டிய புறநகர் பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களில் ரூ 400 வரை விற்பனையாகிறது.
அதோ போல கோழிக்கறியின் விலையும் கிலோ ரூ 150 ஆகிவிட்டது.
புரட்டாசி மாதம் என்பதால் பலர் கறி சாப்பிடாமல் தவிர்த்துவந்தனர். இதனால் கிலோ ரூ 320 லிருந்து ரூ 350 வரை ஆட்டுக்கறி விற்பனையானது. ஆனால் இன்று சடாரென கிலோவுக்கு ரூ 100 உயர்ந்துள்ளது அசைவப் பிரியர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
வழக்கமாக சென்னைக்கு ஆந்திர மாநிலத்தில் இருந்து ஆடுகள் கொண்டு வரப்படும். தேவையான அளவிற்கு ஆடுகள் கிடைக்காததே இந்த விலை உயர்வுக்கு காரணம் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
10 நாட்கள் முன்பு வரை கறிக்கோழி விலை ரூ.100 ஆக இருந்தது. புரட்டாசி முடிந்ததும் கிலோ ரூ.120, ரூ.130 என படிப்படியாக உயர்ந்து தற்போது ரூ.150-க்கு விற்கப்படுகிறது.
அமாவாசை தினத்தில் தீபாவளி பண்டிகை வருகிறது. ஆனாலும் கறிக்கோழி விலை குறைய வாய்ப்பு இல்லை. சென்னையில் உயிருடன் கோழி ரூ.110, கறிக்கோழி ரூ.150 ஆக சில்லறை கடைகளில் விற்கப்படுகிறது.
இதேபோல மீன் விலையும் உயர்ந்து உள்ளது. வெள்ளை வவ்வால் மீன் கிலோ ரூ.300-400, கருப்பு வவ்வால் ரூ.160-200, வஞ்ஜிரம் ரூ.400-500 வரை விற்கப்படுகிறது.
விலையைச் சமாளிக்க கிராம மக்கள் டெக்னிக்
தீபாவளியின்போது கிராமப்புறங்களில் கறிவிருந்து கட்டாய சமாச்சாரம். ஆனால் கிலோ ரூ 450-500 வரை கொடுத்து வாங்க அவர்கள் தயாராக இல்லை. எனவே கூட்டாக சேர்ந்து ஆடுகளை வாங்கி வெட்டி, பகிர்ந்து கொள்கின்றனர்.
கிராமங்களில் வெள்ளாடு தவிர செம்மறி ஆடுகளும் அதிகமாகக் கிடைப்பதால், 15-20 கிலோ எடை கொண்ட ஆடுகளை ரூ 3000- 4000 க்கு வாங்கி வெட்டி பகிர்ந்து கொள்கின்றனர்.
கோழிக் கறி விலை பொதுவாகவே கிராமப் புறங்களில் குறைவு. பெரும்பாலும் ஒவ்வொரு வீட்டிலும் நிறைய கோழிகள் வளர்க்கப்படுவதால், அவற்றையே தீபாவளி விருந்துக்குப் பயன்படுத்துவது தொடர்கிறது. http://thatstamil.oneindia.in/news/2011/10/25/diwali-meat-price-up-in-tamilnadu-aid0136.html
|