Posted by Haja Mohideen
(Hajas) on 10/27/2011
|
|||
வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்புவோரே உஷார்: அளவை குறைத்து மோசடி அக்டோபர் 27,2011,01:00 IST
கோவை :கோவையிலுள்ள சில "பங்க்'களில் பெட்ரோல், டீசல் வினியோகத்தில் முறைகேடுகள் நடப்பதாக வாடிக்கையாளர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். "சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து கொள்ளலாம்' என, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் கடந்த 2010, ஜூன் 26ல் அனுமதித்தது. எனினும், விலை உயர்வுக்கு முன், மத்திய அரசிடம் ஒப்புதல் பெறவேண்டும் எனவும் கூறியுள்ளது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை அவ்வப்போது உயர்த்தப்படுகிறது. முன்பு 67.32 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல், கடந்த மாதம் 16ம் தேதி முதல் ரூ.3.34 உயர்த்தப்பட்டு தற்போது 70.66 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்நிலையில், கோவையிலுள்ள சில "பங்க்'களில் வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் வினியோகிப்பதிலும் முறைகேடுகள் நடப்பதாக புகார் எழுந்துள்ளது.வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பச் செல்வோரில் பலரும் 100, 200 ரூபாயை கொடுத்து அதற்கேற்ப பெட்ரோல் நிரப்புமாறு கூறுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறு கூறும்போது, பெட்ரோல் பம்ப் மீட்டரில், எடுத்தவுடன் 28 பாயின்ட்டில் துவங்கி 38, 80, 96 பாயின்ட் வரை ஓட்டி, அதன் பின் 100 வரை சிங்கள் பாயின்ட்டில் பெட்ரோல் நிரப்புகின்றனர். அசுர வேகத்தில் மீட்டர் இயக்கப்படும்போது, செலுத்தும் தொகைக்கு ஏற்ப பெட்ரோல் நிரப்புவதில் அளவு குறைகிறது. இதையறிந்து ஒரு சில வாடிக்கையாளர்கள், "பம்ப் மீட்டரை அசுர வேகத்தில் ஓட்டாதீர்கள்; சிங்கிள் பாயின்ட்டில் ஓட்டி பெட்ரோல் நிரப்புங்கள்' எனக்கூறினால், பங்க் ஊழியர்கள் மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.
கேள்வி எழுப்பாமல் பெட்ரோல் பிடித்துச் செல்வோருக்கு "அளவு குறைவு விவரம்' தெரிவதில்லை. வாகனத்தின் மைலேஜ் குறையும்போது, இன்ஜினில் கோளாறு இருப்பதாக நினைத்து மெக்கானிக்கிடம் விட்டு நிறைய செலவும் செய்கின்றனர். ஆனால், உண்மையில் பெட்ரோல் பிடிப்பதில் ஏற்படும் குறைபாடே, மைலேஜ் சரிய காரணம் என்பது பலருக்கும் புரிவதில்லை. இவ்விஷயத்தில், வாடிக்கையாளர்கள் விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியம் என்கின்றனர், விபரமறிந்த டூ வீலர் மெக்கானிக்குகள்.
இப்பிரச்னை குறித்து, கோவை மாவட்ட பெட்ரோல் பங்க் டீலர்கள் சங்கத் தலைவர் செல்வராஜ்வேலுசாமி கூறுகையில், ""பெட்ரோல், டீசல் விற்பனையில் முறைகேட்டை தவிர்க்க, பங்க்களில் பெட்ரோல் நிரப்புவதற்கான கால அவகாசம் குறித்து விதிகளை மத்திய அரசு வகுத்துள்ளது. இதன்படி, ஒரு வாகனத்துக்கு 5 லி., பெட்ரோல் நிரப்ப 30 விநாடிகள் எடுத்து கொள்ள வேண்டும். நிர்ணயித்த நேரத்தை விட குறைந்த நேரத்தில் அசுரவேகத்தில் மீட்டரை இயக்கினால் நிரப்பப்படும் பெட்ரோல் அளவு நிச்சயம் குறையும்,'' என்றார்.
கோவையிலுள்ள ஒரு சில பெட்ரோல் பங்க்குகளில் நடக்கும் இதுபோன்ற முறைகேடுகளை தடுக்க ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனங்களும், மாவட்ட நிர்வாகமும் கடும் நடவடிக்கை மேற்கொள்வது அவசியம். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |