கூடங்குளம் பிரச்சனை: அப்துல் கலாம் மத்தியஸ்தஸ்தை ஏற்க போராட்டக் குழு மறுப்பு கூடங்குளம்: கூடங்குளம் அணு மின் நிலைய பிரச்சனையில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆய்வு மேற்கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அணு உலை எதிர்ப்பு இயக்கம் அறிவித்துள்ளது.
இந்த அணு உலைக்கு எதிராக நடந்து வரும் தொடர் உண்ணாவிரதத்தில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு வருகின்றனர். இந் நிலையில் இந்த விவகாரத்தில் மக்களை சமரசம் செய்ய அப்துல் கலாமின் உதவியை மத்திய அரசு நாடியுள்ளது.
இதையடுத்து இந்த விவகாரத்தில் போராட்டம் நடத்தும் மக்களுடன் பேச்சு நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு முன் இந்தத் திட்டம் குறித்து ஆய்வு நடத்தவுள்ளதாகவும் அப்துல் கலாம் தெரிவித்திருந்தார்.
இந் நிலையில் இடிந்தகரை புனித லூர்து அன்னை ஆலய வளாகத்தில் நடந்து வரும் உண்ணாவிரதத்தில் பேசிய அணு மின் நிலைய எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமார்,
அப்துல் கலாம் இந்திய அரசு சார்ந்த விஞ்ஞானி. இந்திய- அமெரிக்க அணு ஒப்பந்தத்தின்போது, கம்யூனிஸ்ட் கட்சிகள் மன்மோகன் சிங் அரசுக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் வாங்கினர். அப்போது மன்மோகன் சிங் அரசு கவிழாமல் இருப்பதற்காக அமர் சிங், முலாயம் சிங் ஆகியோரிடம் பேசி சமரசத்துக்கு ஏற்பாடு செய்தவர் அப்துல் கலாம்.
அப்படிப்பட்டவர், இன்று கூடங்குளம் வந்து ஆய்வு செய்தால், அவரது முடிவு அரசு சார்ந்த முடிவாகத் தான் இருக்கும். எனவே அவர் கூடங்குளம் வந்து ஆய்வு செய்வதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அவர் ஆய்வு செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார். http://thatstamil.oneindia.in/news/2011/10/27/kudankulam-nuclear-power-plant-standoff-kalam-aid0090.html
|