Posted by Haja Mohideen
(Hajas) on 10/31/2011
|
|||
தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவது யார்? அக்டோபர் 31,2011,00:37 IST திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய தென் கோடி மாவட்டங்கள் தொழில் ரீதியில் மிகவும் பின்தங்கியுள்ளன. இந்த மாவட்டங்களின் வளர்ச்சிக்கு எப்போதாவது மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் முயற்சிக்கும் சிலர் திட்டமிட்டு முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர். இதனால், இந்த மாவட்ட மக்கள் தொடர்ந்து பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர்.
இந்தியாவின் 10 பெரிய துறைமுகங்களில் ஒன்றான தூத்துக்குடி துறைமுகத்தை மையமாக கொண்டு, தூத்துக்குடியை சுற்றியுள்ள பகுதிகளில் பெரிய தொழில் நிறுவனங்களைத் துவக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. தொழில் வளர்ச்சிக்கு உதவும் வகையில் இந்த மூன்று மாவட்ட எல்லைகளை ஒட்டியுள்ள கூடங்குளத்தில் 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் பிரமாண்ட அணு மின் நிலையம் கட்டப்பட்டுள்ளது.எல்லா பணிகளும் முடிந்து கிட்டத்தட்ட உற்பத்தியைத் துவக்கும் நேரத்தில் இந்த அணுமின்நிலையத்திற்கு எதிராக இந்த பகுதியைச் சேர்ந்த சிலர் இப்போது போர்க்கொடி தூக்கியுள்ளனர்.சில ஆண்டுகளுக்கு முன்பு இதே பகுதியில் பிரபல டாடா நிறுவனம் மிகப்பெரிய தொழிற்சாலை ஒன்றை உருவாக்க முன் வந்தது. அந்த தொழிற்சாலையையும் வர விடாமல் இந்த பகுதியைச் சேர்ந்த சிலர், மக்களைத் தூண்டி விட்டு போராட்டம் நடத்தினர். தொழிற்சாலைக்கு யாரும் நிலம் தர மாட்டோம் என கூறினர். எனவே, வேறுவழியின்றி அந்த தொழிற்சாலையை அமைக்கும் திட்டத்தையே டாடா நிறுவனம் கை விட்டு விட்டது.
வானம் பார்த்த பூமியாக விளங்கும் இந்த பகுதி, மிகவும் பின் தங்கிய பகுதி. இந்த பகுதியில் வசிக்கும் மக்களும் அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி சொற்ப வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் சில்லரை வர்த்தகத்தில் ஈடுபடும் குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்கள் இங்கு அதிக அளவு வசித்து வருகின்றனர். அவர்கள் பொருளாதார ரீதியில் முன்னேறி விடக்கூடாது என்ற நோக்கத்தில் சிலர் திட்டமிட்டே இது போன்ற எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த பகுதியில் பெரிய தொழிற்சாலைகள், அரசு நிறுவனங்கள் வந்தால் இந்த பகுதியின் நில மதிப்பு அதிகமாகி விடும். மக்களின் அடிப்படை வசதிகளான நல்ல ரோடு, போக்குவரத்து, குடிநீர், மின்சாரம் போன்றவை கிடைக்கும்.இதன் மூலம் அவர்கள் வாழ்க்கைத்தரம் உயரும். நகரங்களில் பெரிய கடைகளில் கூலி வேலைக்கு வராமல், உள்ளூரிலேயே நல்ல கல்வி கற்கும் சூழ்நிலை உருவாகும். இவ்வாறெல்லாம் யாரும் முன்னேறி விடக்கூடாது என்பதற்காகவே, சிலர் திட்டமிட்டு இந்த பகுதிமக்களை தூண்டி, அடிக்கடி போராட்டம், உண்ணாவிரதம் போன்றவற்றை நடத்துகின்றனரோ என்ற சந்தேகம் எழுகிறது.
உலகிலேயே மிகவும் பாதுகாப்பானது கூடங்குளம் அணுமின் நிலையம் என்கின்றனர் நிபுணர்கள். அந்த அணுமின்நிலையம் செயல்படத்துவங்கினால், தமிழகத்திற்கு கூடுதலாகஆயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.தென் மாவட்டங்கள் அதிக வளர்ச்சி அடையும். பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை திருவான்மியூரில் இருந்து மகாபலிபுரம் செல்லும் பழைய மகாபலிபுரம் சாலை மிகவும் பின் தங்கிய பகுதியாக இருந்தது.ஆள் நடமாட்டமே இல்லாமல் இருந்த இந்த பகுதியில், இப்போது ஐ.டி., நிறுவனங்கள் வந்து விட்டன. ஏக்கர் சில ஆயிரம் ரூபாய்க்கு விலை போன இந்த பகுதியில் இப்போது ஒரு கிரவுன்ட் நிலம் ஒரு கோடி ரூபாய். அந்த அளவிற்கு கொடுத்தாலும் நிலம் கிடைப்பது மிகவும் அரிது. இந்த அளவிற்கு நிலத்தின் மதிப்பு அங்கு கூடியதற்கு அந்த பகுதியில் வந்த நிறுவனங்கள் தான்.
அதுமட்டுமின்றி, மகாபலிபுரம் வரை பிரமாண்ட ரோடு, மின்சாரம், குடிநீர் வசதி, என
எல்லா அடிப்படை வசதிகளும் வந்து விட்டன. இந்த பகுதியில் சிறிய அளவு நிலம், வீடு
வைத்திருந்தவர்கள் இன்று கோடீஸ்வரர்களாகி விட்டனர்.
சேது சமுத்திர திட்டமும் அம்போ!தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான இன்னொரு திட்டம் சேது சமுத்திர திட்டம். இந்த திட்டம் நிறைவேறினால், தூத்துக்குடி துறைமுகம் சர்வதேச அந்தஸ்தைப் பெறும். இதன் மூலம் பல மாவட்டங்கள் வளம் பெறும். மதுரை - தூத்துக்குடி சாலை, நெல்லை - தூத்துக்குடி சாலையில் மிகப்பெரும் தொழில் நிறுவனங்கள் உருவாகும். இந்த திட்டத்தையும் நிறைவேற்ற முடியாமல் சிலர் முட்டுக்கட்டை போட்டு விட்டனர்.மக்களின் மத, இன, ஜாதி ரீதியிலான உணர்வுகளை சிலர் தூண்டி விட்டு, இது போன்ற பெரிய திட்டங்கள் வர விடாமல் செய்கின்றனர். இதன் மூலம் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள் தான். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |