Posted by Haja Mohideen
(Hajas) on 11/9/2011
|
|||
வள்ளியூரில் கடையை உடைத்து ரூ.40 லட்சம் நகைகள் கொள்ளை
நவம்பர் 10,2011,01:10 IST வள்ளியூர் : வள்ளியூரில் நகைக் கடையில் பின்புற கதவை உடைத்து லாக்கரில் வைத்திருந்த 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், வெள்ளி சாமான்களை கொள்ளையடித்த கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வள்ளியூர் முருகன்பாதை தெருவை சேர்ந்தவர் சக்திவேல் ஆசாரி மகன் ராஜ் (46). இவர் வள்ளியூரில் ராதாபுரம் மெயின்ரோட்டில் நகைக்கடை நடத்தி வருகிறார். வழக்கம் போல் இரவு 9 மணிக்கு நகைக்கடை சோக்கேசில் வைத்துள்ள நகைகளை லாக்கரில் எடுத்து வைத்துவிட்டு கடையை பூட்டிவிட்டு நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு சென்றுவிட்டார்.
அதன்பின் வழக்கம்போல் நேற்று காலை 8 மணியளவில் கடையை திறந்த ராஜ் கடையின் பின்புற கதவு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து லாக்கரை சென்று பார்த்துள்ளார். இரும்பு லாக்கரும் கம்பியால் உடைக்கப்பட்டு அதன் உள்ளேயிருந்த தங்க நகைகள், வெள்ளி சாமான்கள் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து ராஜ் வள்ளியூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது கொள்ளை சம்பவத்தில் கடை லாக்கரில் இருந்த தங்க கம்மல், சிமிக்கி, காதுமாட்டி, மோதிரம், வளையல் போன்ற தங்க நகைகள் 520 கிராமும், உருக்கிய தங்கம் 100 கிராமும் ஆக மொத்தம் 620 கிராம் தங்க நகைகளும், சுமார் 35 கிலோ வெள்ளியிலான நகைகளும் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.
இதன் மதிப்பு சுமார் 40 லட்ச ரூபாய் ஆகும். சம்பவ இடத்திற்கு எஸ்.பி. விஜேயேந்திரபிதரி, வள்ளியூர் டிஎஸ்பி பொறுப்பு கோவிந்தராஜ் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கொள்ளை சம்பவத்தில் கொள்ளையர்கள் குறித்து துப்பு துலக்குவதற்காக கைரேகை நிபுணர் கண்ணன் கைரேகைகளை பதிவு செய்தார். கொள்ளையர்கள் குறித்த மேலும் தகவல் கிடைப்பதற்கு போலீஸ் மோப்ப நாய் ரிக்கி வரவழைக்கப்பட்டது.
கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு தேடி வருகின்றனர். கொள்ளை சம்பவம் நடந்த கடை போக்குவரத்து அதிகம் உள்ள மெயின்ரோட்டில் அமைந்திருந்தபோதும் கடைக்கு பின்புறவாசல் ஒன்றும் உள்ளது. கடையின் பின்புறம் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் காலியாக முட்செடிகள் வளர்ந்த பகுதியாக காணப்படுகிறது. கான்கிரீட் கட்டடம் கொண்ட கடையின் பின்புறம் ஆஸ்பெட்டாஸ் மேற்கூரை கொண்ட ஒரு ரூமும் உள்ளது. அந்த ஆஸ்பெட்டாஸ் கூரையை பிரித்துவிட்டு கான்கிரீட் போட வேலை செய்து வந்துள்ளனர்.
அதற்காக பின்புற சுவரில் வாசல் போன்ற அமைப்பையும் கடைக்காரர் ஏற்படுத்தி வைத்திருந்தனர். இதனை பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர்கள் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பின்புறம் வழியாக வந்து கடையின் இரும்பு கதவு மற்றும் மரக்கதவை கம்பியால் உடைத்து உள்ளே புகுந்து இரும்பு லாக்கரையும் உடைத்து அதன் உள்ளே இருந்த தங்க நகைகளையும், வெள்ளி சாமான்களையும் கெள்ளையடித்து சென்றுள்ளனர்.
கடந்த சில மாதங்களாகவே வள்ளியூர் பகுதியில் பல்வேறு திருட்டு கொள்ளை சம்பவங்கள் நடந்தேறி வந்துள்ளது. ஆனால் இதுவரையும் அந்த திருட்டு சம்பவங்களில் தொடர்புடையவர்களை போலீசார் கைது செய்யவில்லை. இந்நிலையில் பூட்டிய நகைக் கடைக்குள் சுமார் 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க, வெள்ளி சாமான்கள் கொள்ளைபோன சம்பவம் வள்ளியூர் மக்களை பெரும் பரபரப்புக்குள்ளாக்கி பீதியடைய செய்துள்ளது.
கொள்ளை சம்பவங்களில் தொடர்புடையவர்களை விரைவில் கைது செய்யக் கோரியும், இரவு நேரங்களில் வள்ளியூர் பகுதிகளில் கூடுதலாக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட நடவடிக்கை எடுக்குமாறும் எஸ்.பி. விஜேயேந்திரபிதரியிடம் வள்ளியூர் வியாபாரிகள் சங்க தலைவர் சின்னத்துரை, செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் முருகன் மற்றும் நிர்வாகிகள் நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்துள்ளனர். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |