தமிழக கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு லேப்டாப் வழங்க ஜெ. உத்தரவு சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள 12,500 கிராம நிர்வாக அதிகாரிகளுக்கும் இலவசமாக லேப்டாப் வழங்குமாறு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.
அரசின் நலத் திட்டப் பயனாளிகளைத் தேர்வு செய்வது, சான்றிதழ்கள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை விஏஓ எனப்படும் கிராம நிர்வாக அதிகாரிகள் செய்து வருகின்றனர். மழை, வெள்ளக் காலங்களில் தத்தமது பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அரசுக்கு இவர்கள்தான் அறிக்கை கொடுப்பார்கள்.
தற்போது விஏஓக்கள் பற்றாக்குறை நிலவுவதால் சமீபத்தில் பெய்த மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட சேத பாதிப்புகள் குறித்து முழுமையான விவரங்களை விஏஓக்கள் அனுப்ப முடியவில்லை. இதுகுறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
மேலும் நேற்று முடிவடைந்த ஆட்சித் தலைவர்கள் மாநாட்டின்போது விஏஓக்களுக்கு லேப்டாப் கொடுத்தால் அவர்களது பணி சுலபமாகும் என்று கலெக்டர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டதாக தெரிகிறது.
இதையடுத்து, லேப்டாப் கொடுக்கலாம், அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கூறி உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறு சம்பநத்ப்பட்ட துறைகளை அவர் கேட்டுக் கொண்டாராம். இதையடுத்து விரைவில் லேப்டாப் வழங்குவது தொடர்பான அறிவிப்பை வருவாய்த்துறை விரைவில் வெளியிடவுள்ளது.
இதன் மூலம் தமிழக கிராம நிர்வாக அதிகாரிகள் விரைவில் லேப்டாப்புடன் தங்களது பணியை தொடரவுள்ளனர்.
இதற்கிடையே, கடந்த திமுக ஆட்சிக்காலத்தின்போது டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலம் தேர்வு செய்யப்பட்டு, தற்போதைய ஆட்சி மாற்றத்தால் பணி நியமனம் வழங்கப்படாமல் உள்ள கிட்டத்தட்ட 3000 விஏஓக்களுக்கு எப்போது பணி நியமனம் வழங்கப்படும் என்பது தொடர்ந்து கேள்விக்குறியாகவே உள்ளது. http://tamil.oneindia.in/news/2011/11/15/jaya-orders-distribute-laptops-vaos-aid0091.html
|