Posted by S Peer Mohamed
(peer) on 11/15/2011
|
|||
அனைத்துப் பள்ளி ஆசிரியர்களுக்கு தமிழக அரசு கிடுக்கிப்பிடி சென்னை : "பள்ளி ஆசிரியர்களுக்கு எஸ்.எம்.எஸ்., முறையில் வருகைப் பதிவேடு பராமரிக்கும் முறை, அனைத்து மாவட்டங்களிலும் அறிமுகப்படுத்தப்படும்' என்ற அறிவிப்பை, கலெக்டர்கள் மாநாட்டில் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். இதன் மூலம், பள்ளிக்கு ஆசிரியர்கள் வந்ததும், அவர்களது வருகைப் பதிவு குறித்த விவரங்கள், அந்தந்த வட்டார வள மையத்துக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்பப்படும். தமிழக மாவட்ட கலெக்டர்கள் இரண்டாம் நாள் மாநாடு, நேற்று காலை நடந்தது. பிற்பகலில், போலீஸ் எஸ்.பி.,க்கள் கலந்து கொண்ட மாநாடு நடந்தது. கலெக்டர்கள் மாநாட்டில், ஒவ்வொரு கலெக்டர்களிடமும் மாவட்டத்தில் உள்ள தேவை குறித்து கேட்டறிந்து, தனது இறுதி உரையில், அவற்றை அறிவிப்புகளாக முதல்வர் வெளியிட்டார்.
கலெக்டர்கள் மாநாட்டில் முதல்வர் ஜெயலலிதாவின் நிறைவுரை:நிர்வாகம் செய்யும் நடைமுறைகள், தற்போது சிக்கலாகிவிட்டன. மக்களின் எதிர்பார்ப்புகள் மிக அதிகமாக உள்ளன. அவற்றை நாம் நிறைவேற்ற வேண்டும். எனது அரசின் முக்கிய கவனம் வேளாண்மைத் துறை மீது தான். அனைத்துமே சீசனுக்குரியது. தேவை முடிந்த பின், உரங்களை வினியோகிப்பது, "கிரிமினல் வேஸ்ட்' ஆகும். எனவே, கலெக்டர்கள் அறிவுப்பூர்வமாக ஆய்வு செய்ய வேண்டும்.எனக்கு தனிப்பட்ட முறையில் விருப்பமானது குழந்தைகள் மற்றும் இளைஞர்கள். ஒவ்வொரு குழந்தைக்கும், கல்வி கற்க, நல்ல ஆரோக்கியத்தை அனுபவிக்க வாய்ப்பளித்து, சமூகத்துக்கு மிகவும் அர்த்தமுள்ள, மதிப்புமிக்க சொத்தாக மாற்ற வேண்டுமென விரும்புகிறேன். எனவே, பள்ளிகளின் சுற்றுச்சூழல், விடுதிகள் மற்றும் அவற்றில் வழங்கப்படும் உணவுகள் குறித்து, கலெக்டர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பல நலத்திட்டங்கள் உள்ளன. துறைகளுக்கு இடையேயான சிக்கல் ஏதும் ஏற்படாத வகையில், கலெக்டர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஆண்டுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவிடப்படுகின்றன. ஆனால், நாம் இலக்கை எட்ட முடியவில்லை.பெண்கள் சிறப்பு இலக்காக இருக்க வேண்டும். பெண்களின் ஆரோக்கியம், சுகாதாரம், கல்வி மற்றும் வருமான ஈட்டு திட்டங்களில், கலெக்டர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும். பெண்களின் பொருளாதார வளத்தைப் பெருக்கத் தான், கால்நடைகள் வழங்கப்படுகின்றன. மிக்சி, கிரைண்டர்களும், அவர்களது தினசரி சிரமத்தைக் குறைக்கவே வழங்கப்படுகின்றன. குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். வீட்டு வாசலுக்கு தண்ணீர் வராவிட்டாலும், அருகிலாவது கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
அரசு நிலங்களை பொறுத்தவரை, சமூக விரோதிகளால் ஆக்கிரமிக்கப்படுவது, முதலில் அரசு சொத்து தான். கோவில் நிலங்கள், உள்ளாட்சி நிலங்கள், மத்திய அரசின் புறம்போக்கு நிலங்கள் என அனைத்து வித நிலங்களும், கண்காணிப்பு மற்றும் உளவுக்கு உட்பட்டவை.கலெக்டர்கள் குழுவுடன், மாதந்தோறும் வீடியோ கான்பரன்ஸ் முறையில் கலந்தாய்வு செய்ய திட்டமிட்டுள்ளேன். அப்போது, மதிய உணவு மையங்கள், ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகள், மகளிர் சுகாதார வளாகங்கள், கிராமப்புற சாலைகள், ரேஷன் கடைகள் போன்றவற்றை, கலெக்டர்கள், வீடியோ முறையில் எனக்கு காண்பிக்க வேண்டும்.எஸ்.எம்.எஸ்., அடிப்படையிலான வருகைப் பதிவேடு முறை, அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி ஆசிரியர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
ஏற்கனவே, எஸ்.எம்.எஸ்., முறையில் வருகைப் பதிவேடு பராமரிக்கும் நடைமுறை, கடலூர் மாவட்டத்தில் உள்ளது. இதை அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுப்படுத்தப் போவதாக, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.இதன்படி, ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டதும், அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், அப்பகுதி வட்டார வள மையத்துக்கு, எத்தனை ஆசிரியர்கள் வந்துள்ளனர், யார், யார் வரவில்லை என்பது பற்றிய விவரத்தை, எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்ப வேண்டும். அதனடிப்படையில், பள்ளிக்கு வந்த ஆசிரியர்களுக்கு வருகைப் பதிவு பராமரிக்கப்படும்.
இதன் மூலம் பள்ளிக்கு வராமல் இருப்பது, ஒரு மணி நேரத்துக்கு பின் வருவது, விரைவாக புறப்பட்டுச் செல்வது போன்றவற்றை ஆசிரியர்கள் செய்ய முடியாது. குறிப்பாக, கிராமப்புறங்களில் உயரதிகாரிகளின் கண்காணிப்பு இல்லாத பள்ளிகளில், சரியாக பள்ளிக்கு வராமல் வேறு வேலையில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு, இந்த வருகைப் பதிவு முறை, கிடுக்கிப்பிடியாக அமைந்துள்ளது.
Source: http://www.dinamalar.com/News_Detail.asp?Id=349344
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |