Posted by Haja Mohideen
(Hajas) on 11/16/2011
|
|||
பொறியியல் கல்லூரிகள் நன்கொடை கட்டணம் வசூலித்தால் ரூ.1 கோடி அபராதம் நவம்பர் 16,2011,23:35 IST பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளுக்கு கடிவாளம் போட மத்திய அரசு தயாராகி விட்டது. விதிமுறைகளை மீறும், பெரிய அளவில் சேர்க்கை கட்டணம் வசூலிக்கும், பேராசிரியர்களுக்கு குறைந்த சம்பளம் வழங்கும் தொழிற்கல்வி நிறுவனங்களுக்கு கிடுக்கிப்பிடி போட, புதிய சட்டம் ஒன்று பார்லிமென்டின் குளிர்காலக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட உள்ளது. இதன்படி, நன்கொடை கட்டணம் வசூலிக்கும் கல்வி நிறுவனங்களுக்கு, ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். நாடு முழுவதும் ஏராளமான பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. எங்கு பார்த்தாலும் புற்றீசல் போல கிளம்பிக் கொண்டே இருக்கும், இந்த பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் மீது, மக்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தி நிலவுகிறது. இந்த கல்லூரிகளில், மாணவர்கள் சேர்க்கையின் போது, நன்கொடை மற்றும் சேர்க்கை கட்டணம் என்ற பெயரில், கொள்ளை லாபம் பார்க்கின்றனர் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.ஒவ்வொரு சீட்டுகளுமே, பல லட்சங்களில் விற்கப்படுகின்றன என்பதில் ஆரம்பித்து, எண்ணற்ற குற்றச்சாட்டுகள் வாசிக்கப்படுவது வழக்கமாகி விட்டது. இந்த கல்லூரிகளில் வேலைபார்க்கும் பேராசிரியர்களுக்கு குறைந்த அளவிலேயே சம்பளம் வழங்கப்படுகிறது என்றும், அந்தச் சம்பளமும் காலதாமதமாக இழுத்தடிக்கப்பட்டு தரப்படுகிறது என்ற புகாரும் உள்ளது. கல்லூரி துவங்குவதற்கான அனுமதியை பெறும்போது, விதிக்கப்பட்ட நிபந்தனைகள் பெரும்பாலும் மீறப்படுகின்றன என்றும், பல கல்லூரிகளில் மாணவர்கள் மீது அத்துமீறல்கள் நடைபெறுவதாகவும் அவ்வப்போது செய்திகள் வருகின்றன.இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்ற கோரிக்கை, பொதுமக்கள் மத்தியில் நீண்ட காலமாக உள்ளது. தவிர, உயர்கல்வித் துறையில் எண்ணற்ற அட்டூழியங்கள் நடைபெறுகின்றன, அவற்றை தடுத்து நிறுத்துங்கள் என்று சுப்ரீம் கோர்ட்டும், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள ஐகோர்ட்டுகளும் பல சமயங்களில் உத்தரவிட்டுள்ளன. இந்த முறைகேடுகளை கட்டுப்படுத்த மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டுமென்றும் கேட்டிருந்தன.இதையடுத்து, இதற்கான மசோதா தயார் செய்யப்பட்டது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் தயார் செய்யப்பட்ட இந்த மசோதா, 2010 மார்ச் மாதம் லோக்சபாவில் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர், பார்லிமென்ட் நிலைக்குழுவின் பார்வைக்கு அனுப்பப்பட்டது. அந்தக் குழு, மசோதாவை முழுவதுமாக ஆராய்ந்து சில திருத்தங்களுடன் இறுதி வடிவம் கொடுத்து, மே மாதம் தன் பரிந்துரைகளை சமர்ப்பித்தது.அந்த மசோதா நேற்று டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் வைக்கப்பட்டது. உயர்கல்வி நிறுவனங்களில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வகை செய்யும், "தொழிற்கல்வி நிறுவனங்கள், மருத்துவக் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழக மசோதா 2010' என்ற அந்த சட்டத்திற்கு, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. தங்களுக்கு அரசால் வழங்கப்பட்ட தன்னாட்சி சுதந்திரத்தை, உயர்கல்வி நிறுவனங்கள் தவறாக பயன்படுத்தி வருவதை தடுக்க வகைசெய்யும் இந்த சட்டம், பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படவுள்ளது.கல்லூரிகளில் வேலைபார்க்கும் ஆசிரியர்களின் நிலைமை, அவர்களின் சம் பளம், பணிச்சூழல், அவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியில் உள்ளனரா என்பது உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் இந்த சட்டம் கண்காணிக்கும். இந்த முறைகேடுகள், குளறுபடிகள் அனைத்தையுமே ஒரு வழிக்கு கொண்டு வருவதற்கென்றே ஒவ்வொரு கல்லூரியிலும் குறை தீர்ப்பு வழிமுறை செயல்திட்டம் ஏற்படுத்தப்பட்டு, அதன் அடிப்படையில் அனைத்திற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தீர்வும் காணப்படும்.உயர்கல்வி நிறுவனங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க, மாநில அளவில் ஏற்கனவே சட்டங்கள் இருக்கின்றன. அவை ஒருபுறம் இருந்த போதிலும், மத்திய அரசு கொண்டு வரும் இந்த சட்டம், முழுமையாக உயர்கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்தும். மேலும், தொழிற்கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடம் இருந்து நன்கொடை கட்டணம் வசூலித்தால், அதற்கு ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.விவசாய ஆராய்ச்சி கல்லூரிகளை தவிர, ஏனைய பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் என, உயர்கல்வி கல்லூரிகள் அனைத்துமே இந்த சட்டத்திற்குள் வரும். இதர பிற்பட்ட வகுப்பினர் பட்டியலில் திருத்தம்:*பிரதமர் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருக்கும் நிதியான, ரூ.250 கோடியை, ரூ.381 கோடியாக உயர்த்தி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது. *அதேபோல, ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ஏற்கனவே ஒதுக்கப்படுவதாக திட்டமிடப்பட்டிருந்த, ரூ. 4 லட்சத்து 735 கோடி நிதி ஒதுக்கீட்டிற்கும் ஒப்புதல் தரப்பட்டது. இந்தப் புதிய நிதிஒதுக்கீடுகளால், ஒரு லட்சத்து 73 ஆயிரம் பேர் வரை பயன்பெறுவர். *20 மாநிலங்களில் உள்ள 48க்கும் மேற்பட்ட ஜாதியினர், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், இடஒதுக்கீட்டுப் பலனைப் பெறும் வகையில், இதர பிற்பட்ட வகுப்பினருக்கான மத்திய பட்டியலை திருத்தவும் அமைச்சரவை ஒப்புதல் தந்தது. பிற்பட்ட வகுப்பினருக்கான தேசிய கமிஷன், 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 70க்கும் மேற்பட்ட ஜாதிகளை, இதர பிற்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என, பரிந்துரை செய்திருந்தது. அதற்கேற்ற வகையில், மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. மத்திய பட்டியலை திருத்துவது தொடர்பான அறிவிக்கையை விரைவில், மத்திய சமூக நீதி அமைச்சகம் வெளியிடும். இந்த முடிவால், தமிழகத்தைச் சேர்ந்த பல ஜாதியினரும் பயன் அடைவர். *ஓய்வூதிய நிதி கட்டுப்பாட்டு மற்றும் மேம்பாட்டு ஆணையம் (பி.எப்.ஆர்.டி.ஏ.,) மசோதா 2011ல் திருத்தங்கள் செய்யவும் மத்திய அமைச்சரவை சம்மதம் தெரிவித்தது. இதன்மூலம் ஓய்வூதியத் துறையில், 26 சதவீத அன்னிய முதலீட்டிற்கு அனுமதி தரப்பட்டுள்ளது. ண ஏற்றுமதி, இறக்குமதி வங்கி தொடர்பான சட்டத்தில் திருத்தம் செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டது. இதன்மூலம், இந்த வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனம், 2 ஆயிரம் கோடி ரூபாயிலிருந்து 10 ஆயிரம் கோடி ரூபாயாக உயரும். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |