Posted by Haja Mohideen
(Hajas) on 11/22/2011
|
|||
பஸ் கட்டண உயர்வு: பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு First Published : 23 Nov 2011 01:16:38 AM IST
சென்னை, நவ.22: பஸ் கட்டணத்தை உயர்த்தியது ஏன் என்பது பற்றி தமிழக அரசு 3 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மனித உரிமை ஆர்வலர் வழக்குரைஞர் பி. புகழேந்தி, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஆகியோர் தனித்தனியாக பொதுநல மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்படுகிறது என்று இம்மாதம் 17-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அறிவிக்கப்பட்டதைவிட அதிகமாகவே பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சென்னை மாநகரில் ரூ.5 கொடுத்து ஒரு குறிப்பிட்ட தூரம் பயணித்த பொதுமக்கள், இப்போது அதே பஸ்ஸில், அதே தூரத்தை ரூ.11 கொடுத்து பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
மோட்டார் வாகனச் சட்ட விதிகளின்படி, பேருந்து கட்டண உயர்வு குறித்து பொதுமக்களுக்கு முன்னரே தெரியப்படுத்தப்பட வேண்டும். அறிவிப்பு வெளியான பிறகு குறைந்தபட்சம் 30 நாள்களுக்குப் பின்னரே கட்டண உயர்வை அமல்படுத்த வேண்டும். ஆனால் இப்போது கட்டண உயர்வு குறித்து அறிவிக்கப்பட்ட அன்று நள்ளிரவே, இந்த அறிவிப்பு அமலுக்கு வந்துவிட்டது. எனவே பஸ் கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசின் அறிவிப்புக்குத் தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுக்களில் வலியுறுத்தப்பட்டுள்ளன.
இந்த மனுக்கள் தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வு முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் ஏ. நவநீதகிருஷ்ணன், பத்தாண்டுகளுக்குப் பிறகே பஸ் கட்டணத்தை அரசு உயர்த்தியுள்ளதாகவும், பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்ந்துள்ள நிலையில், இந்த பஸ் கட்டண உயர்வு சரியானதே என்றும் வாதிட்டார். இதனைத் தொடர்ந்து இந்தப் பொதுநல மனுக்கள் தொடர்பாக மூன்று வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |