Posted by Haja Mohideen
(Hajas) on 11/24/2011
|
|||
பஸ் கட்டண உயர்வால் மின் ரயில்களில் பயணிகள் அதிகரிப்பு நவம்பர் 24,2011,23:36 IST சென்னை: பஸ் கட்டண உயர்வால், புறநகர் மின்சார ரயில்களில், பயணிகள் போக்குவரத்து 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. கூட்டம் அதிகம் உள்ளதால், காலை, மாலை வேளைகளில், கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும், ரயில் நிலையங்களில் கூடுதல் டிக்கெட் கவுன்டர்கள் திறக்க வேண்டும் என்று, பயணிகள் கூறுகின்றனர். பஸ் கட்டண உயர்வால், சென்னையில் புறநகர் மின்சார ரயில்களில், பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. சென்னை பீச்-தாம்பரம்-செங்கல்பட்டு திருமால்பூர் இடையே இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்களில், மற்ற புறநகர் மின்சார ரயில்களைவிட, கூட்டம் அதிகம் உள்ளது. தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், கிண்டி, மாம்பலம் நுங்கம்பாக்கம் ரயில் நிலையங்களில், டிக்கெட் எடுப்பதற்கு, 30 நிமிடங்கள் வரை டிக்கெட் கவுன்டர்களில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அரக்கோணம்-சென்னை சென்ட்ரல் இடையே, புறநகர் மின்சார ரயில்களில் காலை, மாலை வேளைகளில், திருவள்ளூர், திருநின்றவூர், இந்து கல்லூரி, ஆவடி, அம்பத்தூர், பெரம்பூர். வில்லிவாக்கம் நிலையங்களிலும், கும்மிடிப்பூண்டி-சென்ட்ரல் இடையே, திருவொற்றியூர், எண்ணூர், மீஞ்சூர், பொன்னேரி நிலையங்களிலும், ரயில் டிக்கெட் எடுப்பதற்கு, 20 நிமிடங்களிலிருந்து 30 நிமிடங்கள் வரை, பயணிகள் காத்திருக்க வேண்டியுள்ளது. பீச்-வேளச்சேரி இடையே, காலை, மாலை வேளைகளில், வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்துள்ளது. நிலையங்களில், டிக்கெட் கவுன்டர்களில் காத்திருப்பதை தவிர்க்கவும், கூடுதல் செலவை தவிர்க்கவும் நினைக்கும் பயணிகள், சீசன் டிக்கெட் வாங்கி பயணம் செய்வது அதிகரித்துள்ளது. புறநகர் மின்சார ரயில்களில், பயணிகள் அதிகரிப்பு குறித்து, ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை விமான நிலையம்-வண்ணாரப்பேட்டை, சென்ட்ரல்-கோயம்பேடு-பரங்கிமலை இடையே, மெட்ரோ ரயில் பாதைப் பணி நடப்பதால், இந்த வழி சாலை போக்குவரத்தில், காலை, மாலை வேளைகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், தாம்பரத்திலிருந்து பீச் மற்றும் கோயம்பேடு பகுதிகளுக்கு செல்பவர்கள், மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையால், ஏராளமானோர் சாலை பயணத்தை தவிர்த்து, ரயிலில் பயணம் செய்ய வருவதால், தாம்பரம்-பீச் இடையே, புறநகர் மின்சார ரயில்களில், வழக்கத்தை விட, கடந்த நான்கு மாதங்களாக, கூட்டம் அதிகம் உள்ளது. தற்போது, பஸ் கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகு, இந்த ரயில்களில் கூட்ட நெருக்கடி, மேலும் அதிகரித்துள்ளது. இதனால், சென்னை பீச்-தாம்பரம் இடையே, வழக்கமான பயணிகளை விட, நேற்று வரை 20 சதவீதமும், சென்னை சென்ட்ரல்-அரக்கோணம், சென்னை சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி இடையேயும், சென்னை பீச்-வேளச்சேரி இடையே 18 சதவீதமும், பயணிகள் போக்குவரத்து அதிகரித்துள்ளது. புறநகர் மின்சார ரயில்களில், நேற்று வரை சராசரியாக, சீசன் டிக்கெட் விற்பனை 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இன்னும் ஒரு மாதத்தில், அதிகபட்சமாக 40 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளது. ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகம் உள்ளதால், முக்கிய நிலையங்களில், கூடுதல் டிக்கெட் கவுன்ட்டர்கள் திறக்கப்பட வேண்டும். காலை, மாலை வேளைகளில், கூடுதல் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்றும், பயணிகள் கூறி வருகின்றனர். இது குறித்து, அதிகாரிகள் மட்டத்தில், ஆலோசனை நடந்து வருகிறது. இவ்வாறு, அதிகாரி தெரிவித்தார். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |