Posted by Haja Mohideen
(Hajas) on 11/28/2011
|
|||
போதை எனும் அரக்கன் கையில் சிக்கி சீரழிந்து வரும் இளைஞர் சமுதாயம் நவம்பர் 28,2011,01:54 IST சிகரெட், பீடி, கஞ்சா, மது, புகையிலை என பல்வேறு தீய பழக்க வழங்கங்கள் சிறுவர்கள் மத்தியிலும், மாணவர்கள் மத்தியிலும் தற்போது விரைவாக பரவி வருகிறது. மதுகுடிப்பது மற்றும் தீய பழக்கவழக்கங்கள் கடைபிடிப்பது என்பது தவறு அல்ல ஜாலியான பொழுதுபோக்கு தான் என்ற தவறான எண்ணமும் நிலவி வருகிறது. சில நேரங்களில் இவர்களின் பெற்றோர்களே குடிப்பதை ஊக்குவிக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. செங்கோட்டையில் ஒரு பள்ளியில் படிக்கும் ஒரு மாணவன் புத்தக பையில் மதுபாட்டில் வைத்திருந்தான். இதை தலைமையாசிரியர் கண்டுபிடித்தவுடன் சம்பந்தப்பட்ட மாணவனின் பெற்றோரை அழைத்து எச்சரித்து "டிசி' (மாற்று சான்றிதழ்) கொடுத்து அனுப்பி வைக்கப்பட்டது. அதே பள்ளியில் பான்பராக் போட்ட மாணவன், கத்தியை கொண்டு வந்து கோஷ்டி மோதலில் ஈடுபட்ட மாணவனின் பெற்றோர்களை அழைத்து எச்சரித்து மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கி அனுப்பி வைக்கப்பட்டனர். சமீபத்தில் 4 மாணவர்கள் சேர்ந்து மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒரு பெண் போலீசை செல்போனில் தொடர்பு கொண்டு பலான சம்பவத்திற்கு அழைத்ததை கண்டுபிடித்து மாணவர்கள் என்பதால் அவர்கள் மீது ஈவ்டீசிங் வழக்கு மட்டும் பதிவு செய்து அனுப்பிய சம்பவமும் நடந்துள்ளது. வட மாவட்டத்தில் தவறான வழிக்கு வர மறுத்த மாணவனை பிற மாணவர்கள் சேர்ந்து கொலை செய்த சம்பவமும் அரங்கேறியது. மேலும் இதுபோன்ற சம்பவங்களும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. சிட்டி பகுதியில் வீடுகளில் கணவன், மனைவி இரண்டு பேருமே வேலைக்கு செல்கின்றனர். பிள்ளைகளுக்கு பாக்கெட் மணியாக அதிக தொகை கொடுக்கின்றனர். தனது மகன் பள்ளிக்கு செல்கிறானா, இல்லை ஊர் சுற்றுகிறானா என்பதை கண்காணிக்க முடியாத நிலையும், போதிய அன்பும், அரவணைப்பும் இல்லாத நிலையில் அவர்கள் மது, பீடி, சிகரெட், பான்பராக், புகையிலை, சூதாட்டம் போன்றவற்றில் ஈடுபட்டு தங்களது வாழ்வை சீரழிக்கும் நிலையும் ஏற்படுகிறது. மேலும் சைக்கிள்களுக்கு பஞ்சர் ஒட்ட பயன்படும் "சொலிஷன்' என்ற வேதிப்பொருள், வாட்டர் பாக்கெட் வாங்கி கலந்து நுகர்ந்து பார்த்து எவ்வித வாய் நாற்றமுமின்றி இப்படியும் ஒரு போதையை கையாள்கின்றனர். சுமார் 14 முதல் 24 வயதுக்குட்பட்டோர் அதிகளவில் குடிக்க தொடங்கிவிட்டதாகவும் மற்றொரு ஆய்வு மூலம் தெரிய வருகிறது. உலக சுகாதார நிறுவன ஆய்வின்படி 25 பேரில் ஒருவர் நிரந்தர குடிகாரரராக மாறிவிடும் நிலை உருவாகி வருவதாக கூறப்படுகிறது. குடிக்கு அடிமையானவர்கள் 50 முதல் 100 சதவீதம் வரை தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதும், தற்கொலை செய்வதும் வாடிக்கையாக நிகழ்ந்து வருகிறது. உறவினர்களே மதுவை ஊற்றிக் கொடுத்து குடிகாரர்களாக மாணவர்களை உருவாக்கி வருகிறார்கள் என்று பிரியாஸ் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது. ஒருசில ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் வீட்டில் மதுவை வாங்கி மகன்களும் சேர்ந்து குடிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் நாகர்கோவில் வடசேரி பஸ்ஸ்டாண்டில் மாணவ, மாணவிகளுக்கு சப்ளை செய்ய இருந்த போதை ஊசிகளுடன் 2 பேர் பிடிபட்டனர். இப்படியே மாணவ, மாணவிகளை குறி வைத்து மாணவ சமுதாயத்தையே சீரழிக்கும் கும்பலும் அதிகரித்து வருகிறது. இது மேலும் கவலைப்பட வேண்டிய விஷயமாக உள்ளது. மேலும் வீட்டில் குழந்தைகள் முன் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது போன்ற செயல்களால் தீய பழக்கவழக்கங்களை செய்ய தூண்டுகிறது. குழந்தைகள் முன் பெற்றோர் செய்யும் தவறே அவர்களது ஆழ்மனதிலும் வேர்விட்டு விடுகிறது. கூட்டுக் குடும்பமாக இருந்தால் கணவன், மனைவி வேலைக்கு சென்றால் பேரக் குழந்தைகளை வயதான தாத்தா, பாட்டி கவனித்து கொள்வார்கள். ஆனால் இன்று அப்படி நிலை இல்லை. இதனால் படிக்க முடியாமலும், தீய நண்பர்களின் சேர்க்கையாலும், தீய பழக்கவழங்கங்களை மேற்கொண்டு கூலி வேலைக்கு செல்லும் நிலை, வீட்டை விட்டு ஓடிப்போகும் நிலையும் ஏற்படுகிறது. இந்தியாவில் 1 கோடியே 30 லட்சம் குழந்தைகள் அபாயகரமான வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும் மற்றொரு சர்வே விபரம் கூறுகிறது. எனவே குழந்தைகள் மீது உரிய பாசம் செலுத்தி மன உறுதியை வளர்க்க வேண்டும். குழந்தைகள் தவறு செய்யும்போது அன்பாக சுட்டிக் காட்ட வேண்டும். அவர்கள் நல்ல செயல்கள் செய்யும்போது பாராட்ட வேண்டும். அப்போது தான் குழந்தைகள், மாணவர்கள் அறிவுத்திறன் வெளிப்படும். நல்ல பெற்றோர்களாக இருந்து உங்கள் மழலை செல்வங்களை டாக்டர்களாகவோ, இன்ஜினியர்களாகவோ, விஞ்ஞானிகளாகவோ மாற்றும் மந்திரக்கோல் உங்களின் கையில் தான் இருக்கிறது. கே. செல்லப்பெருமாள்.
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |