Posted by Haja Mohideen
(Hajas) on 12/1/2011
|
|||
மின்சாரம் இல்லையா? புகார் கொடுங்க! ரூ.50 பெறுங்கள்! டிசம்பர் 01,2011,23:28 IST ""மின்சாரம் தடைபடும் ஒவ்வொரு ஆறு மணி நேரத்திற்கும், 50 ரூபாய் வீதம் நுகர்வோருக்கு, மின் வாரியம் நிவாரணம் தர வேண்டும்,'' என, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. மின் நுகர்வோருக்கான உரிமைகள் மற்றும் நுகர்வோரின் குறை தீர்ப்புக்கான காலக்கெடு குறித்த, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவு விவரம்: மின் நுகர்வோர், தங்களது குறைகள் தொடர்பான அனைத்து முறையீடுகளையும், மின் பகிர்மான கழகத்தின் பிரிவு அலுவலகங்களில் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ தரலாம். பிரிவு அலுவலர்கள் அல்லது அவர்களால் அதிகாரம் அளிக்கப்பட்ட நபர்கள், மனுக்களை பெற்று, எழுத்து மூலம் ஒப்புகை தர வேண்டும். இதற்காக, பிரிவு அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களிலும், பதிவேடு பராமரிக்க வேண்டும். இணைப்பை இடமாற்றுதல், மின்சார தடை, பெயர் மாற்றம், கட்டணப் பிரிவு மாற்றம், கட்டணப் பிரச்னை, தற்காலிக இணைப்பு, வோல்டேஜ் பிரச்னை, வைப்பு நிதி திரும்பப் பெறுதல் மற்றும் அனைத்து வகை மின் நுகர்வு பிரச்னைகளுக்கு மனுக்கள் தரலாம். நிவர்த்தி செய்வதற்கான காலக்கெடு: நீட்டிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணி இல்லாத குறை: தாழ்வழுத்தம் 30 நாட்களில், உயரழுத்தம் 60 நாட்கள்; டிரான்ஸ்பார்மர் அல்லாத நீட்டிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணி: தாழ்வழுத்தம் 90 நாட்கள், உயரழுத்தம் 120 நாட்கள்; டிரான்ஸ்பார்மருடன் கூடிய நீட்டிப்பு, மேம்பாட்டு பணி: தாழ்வழுத்தம் 90 நாட்கள், உயரழுத்தம் 180 நாட்கள். மீட்டர் அல்லது இணைப்பு இடமாற்றம்: 25 நாட்கள்; மின்தடம் மாற்றுதல்: 60 நாட்கள்; டிரான்ஸ்பார்மர் இடமாற்றம்: 90 நாட்கள்; மீட்டர் புதுப்பித்தல்: 30 நாட்கள்; கட்டண வகை மாற்றம்: 7 நாட்கள்; பெயர் மாற்றம்: 7 நாட்கள்; கட்டண கணக்கு பிழை திருத்தம்: பணம் செலுத்தும் இறுதி நாட்களுக்குள், குறைகளை தீர்க்க வேண்டும். இவ்வாறு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மின்வெட்டுக்கு நிவாரணம்: மேலும், அறிவிக்கப்படாத மின்வெட்டு, மின்தடை பிரச்னைகளை தீர்க்க, மணிக்கணக்கில் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட கெடுக்குள் குறைகளை தீர்க்கத் தவறினால், மின்வாரியத்தில் இருந்து, நுகர்வோருக்கு நிவாரணம் தர வேண்டும். பிரிவு அலுவலகங்கள், குறைகளை தீர்க்க தவறும்போதும், நிவாரணத்திலும் திருப்தி அடையாத நுகர்வோர், அந்தந்த பகுதி மின் வாரிய கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் உள்ள குறைதீர்ப்பு மையத்தில் முறையிடலாம். இந்த மையங்கள் குறித்து அலுவலக முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் (இ-மெயில்) உள்ளிட்ட விவரங்களை, மின்வாரிய இணையதளத்தில் வெளியிட வேண்டும். குறை தீர்ப்பகத்தின் உத்தரவை மேல்முறையீடு செய்ய விரும்புவோர், சென்னை எழும்பூரில் உள்ள, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் குறை தீர்ப்பாயத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. - ஹெச்.ஷேக் மைதீன் - |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |