உங்கள் குழந்தை பிச்சை எடுக்க வாடகைக்கு விடப்பட்டுள்ளத ?
பெங்களூர்: குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்காக வேலைக்கு நியமிக்கப்பட்ட பெண், அந்தக் குழந்தையை பிச்சை எடுக்க வாடகைக்கு விட்ட கொடுமை பெங்களூரில் நடந்துள்ளது.
கைக்குழந்தையுடன் இருக்கும், கணவன், மனைவி இருவரும் வேலை பார்க்கும் நிலையில் உள்ள குடும்பத்திற்கு இந்த செய்தி நிச்சயம் ஒரு உஷார் பாடம்...
பெங்களூரைச் சேர்ந்தவர் அனாமிகா. எம்.பி.ஏ. படித்துள்ளார். தனியார் நிறுவனம் ஒன்றில் உயர் பதவியில் இருக்கிறார். இவருடைய கணவரும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
அனாமிகா தம்பதிக்கு 7 மாதமே ஆன கைக்குழந்தை உள்ளது. கணவன், மனைவி இருவரும் வேலைக்குப் போய் விடுவதால் குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்காக ஒரு வேலைக்காரப் பெண்ணை அமர்த்தியிருந்தனர்.
காலையில் வீட்டுக்கு வருவார் இந்தப் பெண். பின்னர் அனாமிகாவும், அவரது கணவரும், மாலையில் வீடு திரும்பும் வரை குழந்தையும், வீடும் இந்தப் பெண்ணின் பொறுப்பில்தான் இருக்கும்.
2 நாட்களுக்கு முன்பு வழக்கம் போல அனாமிகாவும், கணவரும் வேலைக்குப் போய் விட்டனர். அன்று வழக்கத்திற்கு விரோதமாக சற்று முன்பே வீடு திரும்பி விட்டார் அனாமிகா. வீட்டுக்கு வந்தபோது, குழந்தை அங்கு இல்லை. வேலைக்காரப் பெண் மட்டும் ஜாலியாக டிவி பார்த்துக் கொண்டிருந்தார்.
குழந்தை குறித்து கேட்டபோது வேலைக்காரப் பெண் மழுப்பியுள்ளார். இதையடுத்து அவரிடம் அனாமிகா கடுமையாக கேட்டபோது உண்மையை கொட்டியுள்ளார்.
பிச்சைக்காரர்கள் பிச்சை எடுப்பதற்காக குழந்தையை வாடகைக்குக் கேட்டேன். அதற்கு தினசரி ரூ. 100 தருவதாக கூறினார்கள். இதனால் குழந்தையை வாடகைக்கு விட்டுவிட்டேன் என்று அந்தப் பெண் கூறியதும் அனாமிகா பெரும் அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக கணவருக்குப் போன் செய்து வரவழைத்து நடந்ததைக் கூறி அழுதுள்ளார். அனாமிகாவின் கணவரும் இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அந்த வேலைக்காரப் பெண்ணை அழைத்துக் கொண்டு குழந்தையை வைத்திருந்த பிச்சைக்காரர்களை அணுகி குழந்தையை மீட்டுள்ளனர்.
தினசரி காலை அனாமிகாவும், அவரது கணவரும் வேலைக்குப் போன பின்னர் வாடகைக்கு எடுத்த பிச்சைக்கார கும்பல் வீட்டுக்கு வந்து வேலைக்காரப் பெண்ணிடமிருந்து குழந்தையைப் பெற்றுக் கொள்ளுமாம். பின்னர் அனாமிகா தம்பதியினர் திரும்பி வருவதற்குள் குழந்தையை ஒப்படைத்து விடுவார்களாம். கிட்டத்தட்ட ஒரு மாதமாக இது நடந்துள்ளது.
மீட்கப்பட்ட குழந்தையுடன் மருத்துவமனைக்கு விரைந்தனர் அனாமிகாவும், கணவரும். குழந்தையைப் பரிசோதித்துப் பார்த்த டாக்டர்கள், குழந்தையின் உடலில் காயம் ஏதும் இல்லை, எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கூறியுள்ளனர். ஆனால் பிச்சை எடுப்பதற்காக குழந்தையை அதிக அளவில் அழ வைத்திருந்தது தெரிய வந்தது.
இந்த கொடுமை குறித்து அனாமிகா போலீஸில் புகார் கொடுக்க விரும்பவில்லை. எனது குழந்தை பத்திரமாக கிடைத்ததே போதும். இதை நான் போலீஸாரிடம் கொண்டு செல்ல விரும்பவில்லை. இந்த நிலைக்கு மீண்டும் எனது குழந்தையை நான் கொண்டு செல்ல மாட்டேன் என்று கூறி கதறி அழுகிறார் அனாமிகா.
http://tamil.oneindia.in/news/2009/11/05/india-maid-rents-house-owner-s-kid-beg.html
|