தேனி: கேரளாவில் உள்ள குமுளிக்குள் அத்துமீறி நுழையும் தமிழக போராட்டக்காரர்களை கண்டதும் சுட இடுக்கி மாவட்ட எஸ்.பி. ஜார்ஜ் வர்க்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.
நேற்று தேனி மாவட்டம் கம்பம், கூடலூர், சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி மற்றும் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 50,000க்கும் மேற்பட்டவர்கள் முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை குறி்த்து கேரள அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த குமுளிக்கு சென்றனர். அவர்கள் தமிழக போலீசார் தடுத்து நிறுத்தியும் அவர்கள் குமுளிக்குள் செல்ல முயன்றனர்.
குமுளியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே சுமார் 4,000 பேர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அப்போது அவர்கள் மீது கேரளாவைச் சேர்ந்த சிலர் கல் வீசித் தாக்கினர்.
இந்நிலையில் தமிழக அரசு போக்குவரத்து கழக பணிமனையின் உள்ளே பலர் நுழைந்தனர். அவர்களில் 10 பேர் மலைப்பாதை வழியாக கேரளாவுக்குள் நுழைய ரோசாப்பூ கண்டம் பகுதிக்குள் புகுந்து அங்குள்ள ஒரு கேரள மாநிலத்தவர் வீட்டை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டதும் அப்பகுதி மக்கள் திரண்டு வந்து அந்த 10 பேரையும் தாக்க துரத்தினர். அவர்களில் 6 பேர் தப்பி தமிழகத்திற்கு வந்துவிட்டனர். சிக்கிய 4 பேரை அப்பகுதி மக்கள் கேரள போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
தப்பி ஓடிவந்த 6 பேர்களில் ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டிருந்ததையடுத்து அவர் சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதையடுத்து குமுளிக்குள் அத்துமீறி நுழையும் ஆர்ப்பாட்டக்காரர்களை கண்டதும் சுட இடுக்கி இடுக்கி மாவட்ட எஸ்.பி. ஜார்ஜ் வர்க்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.
இதனால் எல்லையில் குவிந்த தமிழக மக்கள் யாரும் குமுளிக்குள் செல்ல வேண்டாம் என்று போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். எல்லையில் குவிந்த கிராம மக்களை அவரவர் ஊர்களுக்கு திருப்பி அனுப்ப சிறப்பு பேருந்துக்கு போலீசார் ஏற்பாடு செய்தனர்.