Posted by Haja Mohideen
(Hajas) on 12/12/2011
|
|||
கேரள எல்லையை நோக்கி சாரை சாரையாக தமிழர்கள்.. மக்கள் எழுச்சி!!Viruvirupu, Monday 12 December 2011, 05:08 GMT
Kumily, India: As tension simmered, security was stepped up on the Tamil Nadu – Kerala border when villagers from Tamil Nadu marched towards Kerala protesting over the Mullaperiyar dam issue. Additional reinforcements were rushed to Lower Camp, a village in Tamil Nadu’s Theni district, and adjacent Kumily in Kerala when thousands of people took out the protest march.
இது ஒரு தனிப்பட்ட கட்சியின் பேரணியல்ல, தனிப்பட்ட அரசியல்வாதியின் அறைகூவலில் திரண்ட கூட்டமும் அல்ல. மக்கள் தன்னிச்சையாகவே வந்து குவிந்த காட்சி! குமுளியில் உள்ள கேரள எல்லையை நோக்கி 2-வது நாளாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) திரண்ட மக்களின் எண்ணிக்கை மலைக்க வைக்கும் அளவில் இருந்தது. முக்கால் லட்சத்தில் இருந்து ஒரு லட்சம் பேர் வரை நேற்று கேரள எல்லையில் திரண்டனர் என்று கணிக்கலாம்! நேற்று காலையில் இருந்தே கேரள எல்லையை நோக்கி மக்கள் உத்தமபாளையம், கூடலூர், சின்னமனூர், கம்பம், ஆகிய பகுதிகளில் இருந்துசாரை சாரையாக வந்து சேரத் தொடங்கினர். இந்த எல்லைப் பகுதியில் கடந்த இரு வாரங்களாகவே பதட்டம் நிலவி வருகின்றது. பதட்டம் அதிகமானதில், குமுளி, கம்பம்-மெட்டு, போடி-மெட்டு ஆகிய சாலைகள் வழியாக கேரளத்துக்குச் செல்லும் சகல போக்குவரத்தும் 5-ம் தேதி முதல் நிறுத்தப்பட்டுள்ளது. தேனியில் இருந்து இந்தப் மூன்று பாதைகள் வழியாகத்தான் கேரளா செல்லும் போக்குவரத்துகள் நடைபெற்று வந்தன. அதன் பின்னரும் பதட்டம் குறையாமல் ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்களும் இடம்பெற்றதில், பதட்டம் அதிகமுள்ள பகுதியாகக் கருதப்பட்டு உத்தமபாளையம் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த 7-ம் தேதி முதல் இப்பகுதியில் 144 அமலில் உள்ளது. அப்படியிருந்தும் பொதுமக்கள் திரண்டு போராட்டம் நடாத்துவதை காவல்துறையால் தடுத்து நிறுத்த முடியாத அளவில், மொத்த ஜனத்தொகையுமே கிளர்ச்சிகளில் குதித்துள்ளனர். நேற்று பெருமளவில் மக்கள் திரண்டு கிளர்ச்சியில் ஈடுபடுவதற்கு முன், நேற்று முன்தினமும் (சனிக்கிழமை) கிட்டத்தட்ட இதுபோன்ற பேரணி ஒன்று நடைபெற்றிருந்தது. ஆனால், அதில் சுமார் 10,000 மக்களே கலந்து கொண்டிருந்தனர். கம்பம், கூடலூர் ஆகிய பகுதிகளில் இருந்து வந்த மக்களே அவர்கள். அவர்கள் காவல் துறையின் தடையை மீறி கேரள எல்லையை நோக்கி பேரணி நடத்தினர். குமுளி அருகே தமிழக எல்லையில் நின்று, கேரள அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். சனிக்கிழமை கூட்டம் குறைவாக இருந்ததை அவதானித்த மக்கள், நேற்று ஞாயிற்றுக் கிழமை தன்னிச்சையாகவே பெருமளவில் வந்து குவியத் தொடங்கினர். இவர்களில் பெரும்பாலானோர், கிராம மக்கள். சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் உத்தமபாளையம், கூடலூர், சின்னமனூர், கம்பம் ஆகிய இடங்களை நோக்கி காலை 9 மணிக்கு வந்து சேர்ந்தனர். நேரம் அதிகமாக அதிகமாக மக்கள் கூட்டம் அதிகமாகத் தொடங்கியது. காலை 10.30-க்கு கூட்டம் கட்டுக்கடங்காத அளவில் திரண்டுவிட்டது. அதையடுத்து இந்த இடங்களில் இருந்து லோயர்-கேம்பை அடுத்துள்ள கேரள எல்லையை நோக்கி ஆயிரக்கணக்கான மக்கள் நடந்தும், வாகனங்கள் மூலமும் செல்லத் தொடங்கினர். 10.30-ல் இருந்து 11 மணிவரை பாதைகள் அனைத்திலும் மக்கள் வெள்ளமாக அசைவதைக் காணக்கூடியதாக இருந்தது. கூடலூருக்கும், லோயர்-கேம்ப்புக்கும் இடையே ஆற்றுப் பாலம் ஒன்று உள்ளது. குருவனூர் பாலம் என்று இதை அழைப்பார்கள். இந்த இடத்தில் பொதுமக்களுக்காக காத்திருந்தனர் காவல்துறையினர். பாலத்தைக் கடந்து செல்ல வேண்டாம் என்று தடுத்து நிறுத்தினர். இந்த ஒரு பாதையைத் தடுத்தால், அப்பகுதியிலேயே தலைமுறைகளாக வாழ்ந்துவரும் அப்பகுதி மக்களுக்கு வேறு பாதை தெரியாதா? காவல்துறை குருவனூர் பாலத்தை மறித்தபடி நின்றிருக்க, மக்கள் திசைமாறி, அந்த இடத்திலிருந்து சற்று தள்ளியிருந்த பழைய பாலம் ஒன்றின் வழியாக லோயர்-கேம்ப் பகுதியை நோக்கிச் செல்லத் தொடங்கிவிட்டனர். லோயர்-கேம்ப் பகுதியை அடைந்தபோது, மக்களின் ஒரு பகுதியினரிடம் வன்முறை லேசாக தலைகாட்டத் தொடங்கியது. இப்பகுதியில் கேரளா அரசின் சுற்றுலாத் துறை அலுவலகம் ஒன்று உள்ளது. உல்லாசப் பயணிகள் வந்தால், அவர்களை வனப் பகுதிக்குள் அழைத்துச் செல்ல கேரள அரசு இந்த அலுவலகத்தை நடாத்துகின்றது. கூட்டம் அதிகளவில் திரண்டு வருவதைக் கண்டவுடன், அலுவலகத்தில் பணிபுரிந்த ஓரிருவரும் அஙகிருந்து வெளியேறிவிட்டனர். இந்த அலுவலகத்துக்கு சொந்தமான இரு மாட்டுவண்டிகளை மக்கள் அடித்து நொருக்கினர். உல்லாசப் பயணிகளை காட்டுக்குள் அழைத்துச் செல்ல உபயோகிக்கப்படும் மாட்டு வண்டிகள் அவை. லோயர்-கேம்ப்பில் மீண்டும் காவல்துறையினர் பொதுமக்களுக்கு தடையை ஏற்படுத்தினர். மேலே செல்ல விடாமல் தடுக்க முயன்றனர். ஆனால் ஆயிரக் கணக்கில் நகர்ந்து வந்துகொண்டிருந்த மக்களை காவல்துறையால் தடுத்து நிறுத்த முடியவில்லை. மக்கள் வெள்ளம் காவல்துறையின் தடையை மீறி குமுழி சாலையில் நகரத் தொடங்கியது. சாலையில் நெரிசல் அதிகமாக இருக்கவே, பலர் காட்டுப் பகுதி ஊடாகவும் கேரள எல்லையை நோக்கிச் செல்லத் தொடங்கினர். பிற்பகல் 1 மணியளவில் கேரள எல்லையில் இருந்து வெறும் 100 மீட்டர் தொலைவு வரை மக்கள் சென்று விட்டனர். இந்த இடத்தில் அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனை ஒன்று உள்ளது. அதற்கருகே வைத்து பொதுமக்களை சந்தித்தனர், கலெக்டர் கே.எஸ்.பழனிசாமியும் தென் மண்டல ஐ.ஜி. ராஜேஷ்தாசும், இதற்குமேல் 100 மீட்டர் சென்றாலே தமிழக எல்லையை கடந்து விடுவீர்கள் என்று மக்களை எச்சரித்தனர். எல்லையைக் கடந்து செல்ல வேண்டாம் என்று மக்களைக் கேட்டுக் கொண்ட அவர்கள், அந்த இடத்தில் நின்றே கோஷம் போட விரும்பினால் போடுங்கள் என்றனர். பிற்பகல் 4.30-க்கு நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இப்பகுதிக்கு காரில் வந்து இறங்கினார். அதுவரை எந்த அரசியல்வாதியோ அரசியல் கட்சியோ இல்லாமல் எல்லாமே மக்கள் எழுச்சி என்ற வகையில் நடந்திருந்தது. அமைச்சர் காரில் இருந்து இறங்கி நடக்கத் தொடங்கியதுமே ஓரிரு கற்கள் வந்து விழத் தொடங்கின. உடனே உஷாரான போலீஸ் அந்த இடத்தில் தடியடி நடாத்த தொடங்கினர். சும்மா நின்றிருந்தவர்களுக்கும் அடி விழுந்தது. அமைச்சரைக் சூழ்ந்து கொண்ட போலீஸார், அவரை கார் வரை எஸ்கோர்ட் பண்ணி அழைத்துச் சென்று, அங்கிருந்து அனுப்பி வைத்தனர். தேவையற்ற இந்தத் தடியடிப் பிரயோகம், அங்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. காவல்துறையினரை எதிர்த்து மக்கள் கோஷம் எழுப்பப் தொடங்கினர். காவல்துறை மீதான மக்களின் கோபம் வெளிப்படத் தொடங்கியது. ஐ.ஜி. ராஜேஷ்தாஸ் நின்றிருந்த இடத்துக்கு அருகே காவல்துறைக்கு சொந்தமான பல வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மக்கள் அவற்றைத் தாக்கத் தொடங்கினர். சுமார் 15 காவல்துறை வாகனங்கள் சேதமாக்கப்பட்டன. மாலை 5 மணிவரை அங்கேயே நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பின்னர் கலைந்து சென்றனர். அப்போதும், கேரளாவுக்குச் செல்லும் வீதியில் மரக் கிளைகளையும் கற்களையும் போட்டு, அந்தப் பாதை வழியாக யாரும் கேரளா செல்ல முடியாதவாறு செய்துவிட்டே அங்கிருந்து அகன்றனர். நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல எந்தவொரு கட்சியாலும் தூண்டப்படாத மக்கள் எழுச்சி இது. நிலைமையை இப்படியே நீடிக்க விடுவது, இரு மாநிலங்களுக்கும் இடையிலான உறவை மிக மோசமாகப் பாதிக்கக்கூடியது.
http://viruvirupu.com/thousands-of-people-took-out-the-protest-march/tamil-news/12166/ |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |