Posted by Haja Mohideen
(Hajas) on 12/28/2011
|
|||
மீனவர்கள் தொடர்புகொள்ள தனி அதிகாரி - ஞானதேசிகன் புதன், 28 டிசம்பர் 2011( 11:58 IST )
அவசர காலங்களில் தொடர்புகொள்ள மீனவர்களுக்காக மத்திய அரசில் தனி அதிகாரியை நியமிக்க வேண்டும் என்ற காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனின் கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இதுகுறித்து ஞானதேசிகன் வெளியிட்ட செய்தி: நாகப்பட்டிணம் முதல் ராமேஸ்வரம் வரை உள்ள நமது மீனவ சகோதரர்கள் அவர்களது மீன்பிடித் தொழிலில் பல்வேறு துன்பங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். பல நேரங்களில் அவர்கள் இலங்கை கடற்படையினரால் கொடுமையான தாக்குதலுக்கு ஆளாவதும், கடல் எல்லைத் தாண்டி வந்ததாக இலங்கை காவல்துறையினரால் கைது செய்யப்படும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இது சம்பந்தமாக தமிழகக் கடலோர விசைப்படகு மீனவர்கள் நலச்சங்கத் தலைவர் எஸ். வேணுகோபால், பொதுச்செயலாளர் என்.ஜே. போஸ், சங்க நிர்வாகிகள் என். தேவதாஸ், எம். கஜநாதன், டி. லோகநாதன், ஏ. அருளாளனந்தம், பாதிரியார் டாக்டர் மைக்கேல்ராஜ், மகத்துவம் ஆகியோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் அண்மையில் எனது முன்னிலையில் நடைபெற்றது. தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் அனுபவித்து வரும் இன்னல்களை போக்கும் நடவடிக்கைகள் குறித்து அக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதற்கிடையில் ஐந்து ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் ஒரு குறிப்பிட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டனர். தகவல் அறிந்ததும் நான் இந்திய வெளிவிவகாரத்துறை அதிகாரிகளுடனும், சென்னையிலுள்ள இலங்கை தூதரக துணை கமிஷனருடனும் தொடர்பு கொண்டு பேசினேன். மேலும் பிரதமர் மன்மோகன்சிங் சென்னை வந்திருந்தபோது மேற்கண்ட தமிழகக் கடலோர விசைப்படகு மீனவர்கள் நலச் சங்கப் பிரதிநிதிகள் பிரதமர் அவர்களை நேரில் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி நடைபெற்ற அச்சந்திப்பின்போது பிரதமர் அவர்களோடு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன் அவர்களும் உடன் இருந்தார். அவர்களிடம் தமிழக மீனவப் பிரதிநிதிகள் மீனவர்களுக்கு கடலில் ஏற்பட்டு வரும் இன்னல்களை போக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அளித்தனர். இலங்கையில் காவலில் உள்ள 5 தமிழக மீனவர்களுக்கு அந்நாட்டிலுள்ள இந்திய தூதரகம் மூலம் வழக்கறிஞர் நியமனம் முதல் அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளது என்றும், மீண்டும் அது தொடர்பாக அந்நாட்டு அரசுடன் பேசப் போவதாகவும் சிவசங்கர மேனன் கூறினார். ஏற்கனவே இலங்கை மீனவப் பிரதிநிதிகளும், தமிழக மீனவச் சங்கப் பிரதிநிதிகளும் இரண்டுமுறை சந்தித்து பேசியிருக்கிறார்கள். அச்சந்திப்பில் இலங்கை மற்றும் தமிழக மீன்வளத்துறைகளின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். தற்போது இலங்கை ஜாப்னா பகுதியில் அமைதி திரும்பியிருக்கிறது. அங்கு இலங்கை தமிழ் மீனவர்கள் மீன்பிடிக்கிறார்கள். 72 மீன்பிடி நாட்களில் இலங்கை கடற்பகுதியில் இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொள்ளலாம் என்றும், இலங்கை மீனவர்கள் இந்தியக் கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொள்ளலாம் என்றும் அக்கூட்டங்களில் முடிவு எடுக்கப்பட்டது. இதை அமுல்படுத்த இலங்கை அரசோடு இந்திய அரசு பேச வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அம்மனுவில் கச்சத்தீவை மீண்டும் பெறுவது வரை அத்தீவை குத்தகைக்கு எடுக்கலாம் என்ற ஆலோசனையையும் தமிழக மீனவர் சங்கப் பிரதிநிதிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவசர காலங்களில் தமிழக மீனவர்கள் தொடர்பு கொள்ள தனியாக ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்ற எனது வேண்டுகோளை சிவசங்கர மேனன் ஏற்றுக் கொண்டார். விரைவில் அதற்கான தனி அதிகாரி நியமிக்கப்படுவார் என்றும், அவர் யார் என்பதை தெரிவிப்பதாகவும் அவர் என்னிடம் கூறினார். எனவே தமிழக மீனவர்கள் பிரச்னை விரைவில் தீரும் என்று நம்புகிறேன். தமிழ்நாடு காங்கிரஸ் தொடர்ந்து மீனவர்கள் நலன்காக்க நடவடிக்கை எடுக்குமென்று உறுதியளிக்கிறேன்.
http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1112/28/1111228009_1.htm |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |