முல்லைப் பெரியாறு அணைக்கு நிலநடுக்கத்தால் ஒரு பாதிப்பும் இல்லை- நிபுணர் குழு: கேரள வாதம் தூள் தூள்!
English summary
The Empowered Committee on Mullaiperiyar dam row, headed by former CJI Justice A S Anand, is scheduled to hold its meeting in Delhi today.
டெல்லி: முல்லைப் பெரியாறு அணைக்கு நிலநடுக்கத்தால் ஒரு பாதிப்பும் ஏற்படாது என்று நிபுணர் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் ஐந்து பேர் கொண்ட உயர் மட்டக் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. அந்தக் குழு பல்வேறு நிபுணர்களின் ஆய்வறிக்கைகள் மற்றும் நேரடிய ஆய்வு முடிவுகளை வைத்து விசாரித்து வருகிறது. முல்லைப் பெரியாறு அணை நிலநடுக்கத்தால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக கேரள அரசு புகார் கூறியதைத் தொடர்ந்து சமீபத்தில் தத்தே, தத்தா ஆகிய நிபுணர்களைக் கொண்ட குழுவை இந்த ஐவர் குழு அணைக்கு நேரடியாக அனுப்பி ஆய்வு செய்தது. அப்போது தங்களது இஷ்டத்திற்கு நடக்குமாறு குழுவினரை கேரளத் தரப்பு வலியுறுத்தியது. ஆனால் அதை நிபுணர் குழு நிராகரித்து விட்டது. இதனால் கடும் வாக்குவாதம் நடைபெற்றது. இந்தநிலையில் இன்று ஐவர் குழு கூடியது. அப்போது குழு உறுப்பினர்களுடன் தமிழக, கேரள வக்கீல்களும் ஆஜராகினர். அப்போது தத்தே, மேத்தா ஆகியோர் அடங்கிய நிபுணர் குழு தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில் தாங்கள் சமீபத்தில் அணைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தியது குறித்த விவரங்களையும், முடிவுகளையும் இரு நிபுணர்களும் தெரிவித்திருந்தனர். அதில், முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் நிலநடுக்கம் மிக மிக சிறிய அளவிலேயே ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதால், அணைக்கு நிலநடுக்கத்தால் எந்தப் பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை என்று கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே தமிழகமும் இதைத்தான் கூறி வருகிறது. சமீபத்தில் நாடாளுமன்றத்தில் இதுகுறித்துக் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த மத்திய அரசும் கூட, முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் மிக மிக குறைந்தஅளவிலான நிலநடுக்கமே ஏற்பட்டதாகவும், அவை கூட பதிவாகவில்லை என்றும் விளக்கியிருந்தது நினைவிருக்கலாம். ஆனால் கேரள அரசுதான் பிடிவாதமாக நிலநடுக்கத்தால் அணை உடையும் என்று கிளிப்பிள்ளை போல சொன்னதையே திரும்பத் திரும்பச்சொல்லி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
http://tamil.oneindia.in/news/2012/01/02/india-5-member-empowered-committee-on-mullaperiyar-dam-aid0091.html
|