Posted by Haja Mohideen
(Hajas) on 1/16/2012
|
|||
ரூ. 6,654 கோடியில் பிரமாண்ட நகர்ப்புற வளர்ச்சித் திட்டம்: ஜெயலலிதா அறிவிப்புதிங்கள்கிழமை, ஜனவரி 16, 2012, 15:32 [IST]
சென்னை: வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டம் என்ற திட்டம் ரூ.6,654 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வளர்ந்து வரும் நகர்ப்புற மக்கட்தொகை மற்றும் தொடர்புடைய வணிக நடவடிக்கைகளுக்கு ஏற்ப நகரக் கட்டமைப்புகளை அதிகப்படுத்துவதிலும், மேம்படுத்து வதிலும், முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. 2011ம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் 48.45 சதவீத மக்கள் நகர்புறங்களில் வசித்து வருகின்றனர். இது வரும் 20 ஆண்டுகளில், அதாவது 2030ம் ஆண்டில் 67 சதவீதமாக உயர வாய்ப்புள்ளது. மக்கள் வேலைவாய்ப்புக்காக அருகிலுள்ள நகரங்களுக்கு அதிக அளவு இடம் பெயர்வதாலும், நகரங்கள் அதிவேக வளர்ச்சியடைந்து வருவதாலும், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டியது அவசியமாகின்றது. இதனைக் கருத்தில் கொண்டு, முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு “ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டம்” என்ற ஒரு திட்டத்தினை துவக்க முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தின்படி, நகர்பகுதிகளில் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவு நீர் அகற்றல், சுகாதாரம், மழைநீர் வடிகால், சாலைகள், தெருக்கள், திடக் கழிவு மேலாண்மை மற்றும் வாகன நிறுத்துமிடம், பேருந்து நிலையம், பூங்காக்கள் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்த மாநகர் மற்றும் நகராட்சிப் பகுதிகளுக்கு 5,890.12 கோடி ரூபாயும், பேரூராட்சிப் பகுதிகளுக்கு 763.91 கோடி ரூபாயும் என மொத்தம் 6,654.03 கோடி ரூபாய் அளவுக்கு பணிகள் மேற்கொள்ளப்பட முதல்வர் ஆணையிட்டுள்ளார். மாநகராட்சி, நகராட்சிகளில்: இதன் முதற்கட்டமாக, மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில், - பாதாள சாக்கடை அமைக்க 30 கோடியே 50 லட்சம் ரூபாய், - குடிநீர் திட்டத்திற்காக 58 கோடியே 80 லட்சம் ரூபாய், - தற்போதுள்ள சாலைகளை செப்பனிட மற்றும் புதிய சாலைகள் அமைக்க 145 கோடியே 11 லட்சம் ரூபாய், - மழைநீர் வடிகால்கள் அமைக்க 88 கோடியே 96 லட்சம் ரூபாய், - சுற்றுப்புறச் சூழலை காக்கும் வகையில் திடக்கழிவு மேலாண்மைக்காக 124 கோடியே 54 லட்சம் ரூபாய், - தெரு விளக்கு வசதி மற்றும் இதர பணிகளுக்காக 58 கோடியே 57 லட்சம் ரூபாய் என மொத்தம் 506 கோடியே 48 லட்சம் ரூபாயும்; பேரூராட்சிப் பகுதிகளில்: பேரூராட்சிப் பகுதிகளில், - பாதாள சாக்கடை அமைக்க 9 கோடியே 67 லட்சம் ரூபாய், - குடிநீர் திட்டத்திற்காக 34 கோடியே 92 லட்சம் ரூபாய், - சாலைகள் செப்பனிட மற்றும் புதிய சாலைகள் அமைக்க 108 கோடியே 15 லட்சம் ரூபாய், - மழைநீர் வடிகால் அமைக்க 45 கோடியே 69 லட்சம் ரூபாய், - சுற்றுப்புறச் சூழலை காக்க திடக்கழிவு மேலாண்மை மற்றும் இதர பணிகளுக்காக 52 கோடியே 37 லட்சம் ரூபாய் என மொத்தம் 250 கோடியே 80 லட்சம் ரூபாயும்; ஆக மொத்தத்தில் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டில் 757 கோடியே 28 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை குடிநீர்: சென்னை மாநகரின் குடிநீர் தேவையினை கருத்தில் கொண்டு, குடிநீர் வழங்கலை அதிகரிக்கும் பொருட்டு, செம்பரம்பாக்கத்தில் அமைந்துள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து நிர்ணயிக்கப்பட்ட முழு அளவான நாளொன்றுக்கு 530 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை சென்னைக்கு கொண்டு வருவதற்காக 2,000 மில்லி மீட்டர் விட்டமுள்ள இரண்டாவது இணை குடிநீர் குழாய்கள் 41 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 6.5 கிலோ மீட்டர் நீளத்திற்கு செம்பரம்பாக்கத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை சந்திப்பு வரையில் அமைக்கும் பணிக்கு 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேற்கூறிய அரசின் நடவடிக்கைகளினால், தமிழகத்திலுள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளிலும் வாழும் மக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்கப் பெறும் என்று அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |