Posted by S Peer Mohamed
(peer) on 1/18/2012
|
|||
இணைய உலகில் கறுப்புக் கொடி போராட்டம்! -சைபர்சிம்மன் இணைய சுதந்திரத்தை மிகவும் பாதிக்ககூடிய சோபா (SOPA) சட்டத்தை எதிர்த்து இன்று ஒரு நாள் முழுவதும் விக்கிபீடியாவின் ஆங்கிலப் பக்கங்கள் முழுமையாக மூடப்பட்டது. அதாவது, இன்று முழுவதும் ஆங்கில விக்கிபீடியா (http://en.wikipedia.org/) ஆன்லைனில் இல்லை. அதில் கட்டுரைகளை பார்க்கவும் முடியாது, படிக்கவும் முடியாது. இப்படி பகிரங்கமான போராட்டத்தில் விக்கிபிடியா ஈடுபடுவது இதுவே முதல் முறை. சோபா சட்டத்துக்கான எதிர்ப்பை தெரிவிக்க, விக்கிபீடியா இந்த முடிவை எடுத்துள்ளது. சோபா சட்டத்துக்கு எதிராக ஏற்கனவே இணைய உலகில் தீவிர போராட்டம் நடைபெற்று வருகிறது. அந்தப் போராட்டத்தை பற்றி பார்ப்பதற்கு முன் சோபா சட்டம் பற்றியும் அதனை ஏன் எதிர்க்கின்றனர் என்பதையும் பார்ப்பது மிகவும் அவசியம். குறிப்பாக, அந்த அமெரிக்க சட்டம் பற்றி அகில உலகமும் ஏன் கவலைப்பட வேண்டும் என்பதையும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். இணைய திருட்டை தடுப்பதற்கான சட்டம். இதுதான் சோபாவின் முழு விரிவாக்கம். ஆங்கிலத்தில் ஸ்டாப் ஆன்லைன் பைரசி ஆக்ட் (Stop Online Piracy Act - SOPA). அதாவது, அனுமதி இல்லாமல் பாடல்களை டவுண்லோடு செய்வது உள்ளிட்ட இணைய திருட்டுகளுக்கு முற்றுபுள்ளி வைப்பது தான் இந்தச் சட்டத்தின் நோக்கம். நோக்கத்தில் ஒன்றும் தவறு இருப்பதாக தோன்ற வாய்ப்பில்லை. மேலோட்டமாக பார்க்கும்போது இப்படித்தான் நினைக்கத்தோன்றும் என்கின்றனர், இதன் எதிர்ப்பாளர்கள். ஆனால், உண்மையில் இந்தச் சட்டம் இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரித்து விடக்கூடியது என்றே எச்சரிக்கின்றனர். இந்தச் சட்டத்தின் நோக்கம் இணைய திருட்டை தடுப்பதாக இருந்தாலும், அதற்காக முன் வைக்கப்படும் வழி இன்டர்நெட்டையே முடங்கிப் போகச் செய்யக்கூடியது என்கின்றனர். காப்புரிமை மீறல் என்பது மிகவும் பொதுவான வார்த்தை. சட்டத்தை பிரயோகிக்க நினைப்பவர்கள் எதை வேண்டுமானாலும் காப்புரிமை மீறல் என கருதி புகார் தெரிவிக்கலாம். அந்தப் புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட இணையதளத்தின் முகவரி முடக்கப்படலாம். உள்ளபடியே இணையத் திருட்டில் ஈடுபட்ட இணையதளம் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம். தப்பில்லை. ஆனால், இந்தச் சட்டத்தின்படி இணைய திருட்டில் ஈடுபடவே வேண்டாம்; ஏதாவது ஒரு வகையில் இணைய திருட்டுக்கு துணை போவதாக கருதப்பட்டால் கூட தொடர்புடைய தளத்தை முடக்கி விடலாம். திருட்டுக்கு துணை போக வேண்டும் என்று கூட இல்லை; அது தொடர்பான கட்டுரை இடம்பெற்றிருந்தால் கூட, அப்படி துணை போனதாக கருதப்படலாம். உதாரணத்துக்கு 'பாடல்களை டவுண்லோடு செய்வது சரியா?' என்று விவாதிக்கும் கட்டுரை கூட இவ்விதமாக கருதப்படலாம். கட்டுரை என்றில்லை பதிவுகள், பின்னூட்டங்களும் இதில் அடங்கும். ஒரு நியாயமான கட்டுரையை படித்த வாசகர்கள் பாடல் அல்லது திரைப்பட டவுண்லோடு சரியானதே என ஆதரித்து கருத்து தெரிவித்திருந்தாலும், அது தொடர்பாக வழக்கு தொடுக்கலாம். ஃபேஸ்புக்கில் யாராவது சிலர் டவுன்லோடு தவறில்லை என்று சொன்னாலே போதும் அதனை சாக்காக வைத்து ஃபேஸ்புக்குக்கு நோட்டீஸ் அனுப்பிவிடலாம் எனும் அளவுக்கு விபரீதத்தின் எல்லைக்கு செல்லகூடியது இந்தச் சட்டம் என்கின்றனர். இந்த வழக்கை எதிர்த்து நீதிமன்றத்தில் போராடலாம் தான். ஆனால் வழக்கு என்று வந்துவிட்டால் நீண்ட நெடிய போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டிவரலாம். எத்தனை நிறுவனங்களுக்கு இது சாத்தியம். குறிப்பாக சிறிய நிறுவங்கள் வழக்கு என்று அலைவதைவிட சர்ச்சைக்குரிய சங்கதியை நீக்கிவிட ஒப்புக்கொள்ளலாம். இப்படி சில நிறுவனங்கள் பயந்து பின்வாங்கினால் போதும் அதையே சாக்காக வைத்து பொழுதுபோக்கு துறையினர் எதை வேண்டுமானாலும் காப்புரிமை மீறல் என கருதி மிரட்டலாம். அதோடு இணைய சுதந்திரம் அதோகதிதான்! அனுமதி இல்லாமல் பாடல்களும் படங்களும் கோப்புகளும் டவுண்லோடு செய்யப்பட்டு பரிமாரிக்கொள்ளப்படுவதை தடுக்க முடியாமல் ஹாலிவுட்டும் இசை உலகமும் திணறி வரும் வேளையில் அவற்றின் காப்புரிமையை காக்கும் வகையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அறிமுக நிலையிலே இந்த சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. இணைய திருட்டு என்று சொல்லப்படுவதை தடுக்கவோ தண்டிக்கவோ நடவடிக்கை எடுப்பதை யாரும் எதிர்க்கவில்லை. ஆனால் இந்தச் சட்டம் முன்வைக்கும் தீர்வு.. அது தீர்க்க முற்படும் பிரச்னையை விட படுமோசமாக இருப்பதாக, இணையம் எப்போதுமே சுதந்திரமானதாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அது மட்டும் அல்ல, உலக முழுவதும் ஏதாவது ஒரு விதத்தில் இணையத்தை கட்டுபாட்டில் கொண்டு வரும் முயற்சியில் அரசுகள் ஈடுப்பட்டிருக்கும் நிலையில், இந்தச் சட்டம் அத்தகைய முயற்சிக்கு வலு சேர்ப்பதாக அமையும் என்றும் அஞ்சப்படுகிறது. தப்பித்தவறி இந்தச் சட்டம் அமெரிக்காவில் நிறைவேறினால், மற்ற நாடுகளிலும் இதே போன்ற சட்டங்கள் கொண்டுவரப்பட்டு எதிர்ப்புக் குரலுக்காக இன்டர்நெட்டை பயன்படுத்துபவர்கள் மீது பிரயோகிக்கப்படலாம். எனவே, 'அமெரிக்க சட்டம் தானே' என அலட்சியப்படுத்துவதற்கில்லை. பைரசி என்று சொல்லப்படும் இணையத் திருட்டை சாக்காக வைத்து, எல்லையில்லா அதிகாரத்தை பொழுதுபோக்குத் துறைக்கு வழங்கி, இணையத்தை முடங்கச் செய்யும் இந்தச் சட்டத்தை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என இணைய ஆர்வலர்கள் நினைப்பதில் வியப்பில்லை. எனவே தான் இந்தச் சட்டம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் முன்பே அது எந்த அளவுக்கு ஆபத்தானது என புரிய வைத்து இணையவாசிகள் மத்தியில் விழிப்பு உணர்வை ஏற்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்கள் மன்றத்தில் எதிர்ப்பு இருந்தால் எந்தச் சட்டம் தான் நிறைவேறும்? இத்தகைய விழிப்பு உணர்வுக்காகவே எதிர்ப்புக் குரலும் தீவிரமாக எழுப்பப்பட்டு வருகின்றன. பிரபலமான திரட்டியான ரெடிட் (reddit) தனது முகப்புப் பக்கத்திலேயே இந்தச் சட்டத்தின் தீமைகளை குறிப்பிட்டு, தனது பயனாளிகளை எதிர்ப்புக் குரல் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டது. டிவிட்டர் பயனாளிகள் இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெர்விக்க விரும்பினால், ஸ்டாப் சோபா என்னும் வாசகம் தாங்கிய லோகோவை தங்கள் டிவிட்டர் பக்கத்தின் பின்னணியில் இடம் பெற வழி செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 'இணையதளங்களின் கறுப்புக் கொடி போராட்டம்' என்று வைத்து கொள்ளுங்களேன். இந்தப் போராட்டத்தின்போது சட்டையில் கறுப்புக் கொடி குத்தி எதிர்ப்பு தெரிவிப்பது போல டிவிட்டர் பயனாளிகளும் தங்கள் பக்கத்தில் கறுப்புக் கொடியை பறக்க விடலாம். இதற்காக என்றே பிளாகவுட் சோபா என்னும் இணையதளமும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தளத்தில் இந்த எதிர்ப்பு பட்டியை பயன்படுத்தும் வழிமுறை சொல்லப்பட்டிருப்பதோடு, இதுவரை எத்தனை பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்ற புள்ளிவிவரமும் கொடுக்கப்பட்டு வருகிறது. அதோடு இதுவரை ஆதரித்துள்ள டிவிட்டர் பிரபலங்களின் பட்டியலும் இடம்பெறுகிறது. சட்டத்தின் தீவரத்தையும் தீமையையும் புரிந்துகொள்ள உதவும் முக்கியத் தளங்களின் பட்டியலும் கொடுக்கப்பட்டுள்ளது. ஃபேஸ்புக், கூகுள் போன்ற இணைய ஜாம்பவான்களும் இதேபோன்ற விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. இந்தப் பின்னணியில் தான் மக்கள் களஞ்சியமான விக்கிபீடியா, சோபா சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒரு நாள் முழு அடைப்பை மேற்கொண்டுள்ளது. இது விக்கிபீடியா ஆசிரியர் குழுவினர் அதன் தீவிர உறுப்பினர்களோடு கலந்தாலோசித்து எடுத்துள்ள முடிவு. அதன் நிறுவனர் ஜிம்மி வேல்ஸ் இந்த முடிவை ஆதரித்துள்ளார். சோபா சட்டத்தை முன்வைப்பவர்கள், இதனை எதிர்ப்பவர்கள், இணைய திருட்டை ஆதரிப்பவர்கள் என்று கூறி வந்தாலும் இந்தச் சட்டத்தின் வரம்புகள் எல்லையில்லாதவை மற்றும் இணைய திருட்டுடன் தொடர்பு இல்லாத விஷயங்களுக்கும் வேட்டு வைக்க கூடியது என்று ஜிம்மி வேல்ஸ் கூறியுள்ளார். இதனிடையே, இந்த சட்டத்தின் எதிர்ப்பாளர்களுக்கு ஆதார்வாக அமெரிக்க அதிபர் மாளிகை கருத்து தெரிவித்துள்ளது. காப்புரிமை மீறலை ஊக்குவிக்கும் அந்நிய தளங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டியவை என்ற போதிலும், இணைய சதந்திரத்தை பறிக்கும் ஒரு சட்டத்தை ஆதரிக்க மாட்டோம் என்று வெள்ளை மாளிகை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்தச் சட்டம், அதிபர் ஒபாமாவால் நிராகரிக்கப்படும் வாய்ப்புள்ளது. எனினும் இதேபோன்ற மற்றொரு சட்டம் பிபா (PIPA - PROTECT IP Act - புரடக்ட் இன்டல்க்சுவல் பிராபர்டி ரைட்ஸ் - அறிவு சொத்துரிமை பாதுகாப்பு சட்டம்) அமெரிகக செனட்டில் கொண்டு வரப்பட்டிருப்பதால், இணைய சுதந்திரத்துக்கு சரியான சோதனை என்றே சொல்ல வேண்டும். இந்த இரண்டு சட்டங்களுமே இணைய சுதந்திரத்தை அச்சுறுத்தும் மிகப்பெரிய பிரச்னையின் அறிகுறிகளே என்று விக்கிபீடியா கூறியுள்ளது. அதற்காகவே போராட்டத்திலும் குதித்துள்ளது. இந்தியாவிலும் அண்மைக் காலத்தில் இணையக் கட்டுபாடு மற்றும் சமூக வலைப்பின்னல் தளங்கள் மீதான விமர்சனம் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், இணைய சுதந்திரத்துக்கு விடப்பட்டுள்ள சவாலை இணையவாசிகள் புரிந்து கொள்ள வேண்டும். துனீசியா, எகிப்து போன்ற நாடுகளில் எல்லாம் சர்வாதிகாரத்தை எதிர்த்து மக்கள் போராட இன்டர்நெட் துணை நின்றுள்ளது. ஆனால், காப்புரிமையை காக்கும் பெயரில் அதன் ஆதார பலமான சுதந்திரம் மற்றும் கட்டற்ற தன்மைக்கே வேட்டு வைப்பது மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துவது போல தான். எனவே தான் இணையத்தில் கறுப்புக் கொடி காட்டுவதற்கு நிகரான போராட்டம் நடைபெறுகிறது. விக்கிபீடியாவும் கறுப்புக் கொடி காட்ட தீர்மானித்து, போராட்டத் தளத்தில் இறங்கியுள்ளது. பிரபல வலைப்பதிவு சேவைத்தளமான வேர்ட்பிரசும் (Wordpress) இதேபோல கறுப்புக் கொடி காட்டுகிறது. அதன் சேவை தொடர்கிறது என்றபோதிலும் எல்லாம் கறுப்பு மயமாக காட்சி தருகிறது! * (இணையம், தொழில்நுட்பம் பற்றி எழுதிவரும் கட்டுரையாளரின் அதிகாரப்பூர்வ வலைத்தளம்: http://cybersimman.wordpress.com/)
Thanks: M S Jawahar |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |