நெல்லையில் இன்று முதல் ஸ்பாட் பைன்!
நெல்லை: நெல்லை மாநகரத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு இன்று முதல் ஸ்பாட் பைன் விதிக்கப்படும் என மாநகர போலீஸ் கமிஷனர் கருணாசாகர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது, போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது உடனடியாக அபராதம வசூலிக்கும் ஸ்பாட் பைன் திட்டம் சென்னை, திருச்சி, கோவை மாநகர பகுதிகளில் மட்டும் ஏற்கனவே அமுலில் உள்ளது. தற்போது அனைத்து மாவட்டம் மற்றும் மாநகரங்களிலும் ஸ்பாட் பைன் விதிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஸ்பாட் பைனை மாவட்டத்தில் இன்ஸ்பெக்டர்களும், மாநகரத்தில் எஸ்.ஐ.க்களும் அதற்கு மேல் உள்ள அதிகாரிகளும் வசூலிக்கலாம். ஆனால் மற்ற போலீசார் வசூலிக்கக் கூடாது. இதற்கான கருவிகள் இன்னும் வரவில்லை. இதனால் ரசீது புத்தகம் மூலம் அபராதம் வசூலிக்கப்படும். செல்போன் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டுபவர்கள், ஹெல்மெட் அணியாமல் செல்வது, அதிவேகத்தில் வாகனத்தில் செல்வது, பஸ் நிறுத்தங்களில் இல்லாமல் கண்ட கண்ட இடங்களில் பஸ்களை நிறுத்துவது வழித்தடங்கள் மாறி வரும் தனியார் பஸ்கள் மற்றும் மினி பஸ்கள், போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு ஸ்பாட் பைன் விதிக்கப்படும். இதற்கான ரசீதை பொதுமக்கள் கண்டிப்பாக கேட்டுப் பெற வேண்டும். இத்திட்டம் நெல்லை மாநகரில் வரும் 13ம் தேதி(இன்று) முதல் அமுல்படுத்தப்படுகிறது. ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுபவர்களுக்கு ரூ.300 ஸ்பாட் பைன் வசூலிக்கப்படும். குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஸ்பாட் பைன் கிடையாது. ஏனெனில் அவர்கள் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு மருத்துவ சான்றிதழ் பெற்று நீதிமன்றத்துக்கு அழைத்து செல்லப்படுவர். அவர்களிடம் நீதிமன்றமே அபராதத் தொகையை வசூலிக்கும். பாளை லங்கர்கானா தெருவில் ஒருவழிப்பாதை தொடர்ந்து அமுல்படுத்தப்படும். அங்குள்ள மேடு, பள்ளங்களை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவிக்கப்படும். அரசு என்ஜினியரிங் கல்லூரி அருகே நடந்த கணவன், மனைவி கொலையில் விரைவில் துப்பு துலக்கப்படும். நெல்லை சந்திப்பில் உள்ள அரசு வங்கி லாக்கரில் காணாமல் போன நகைகள் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இதில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. எனவே இது குறித்து அவர்கள் அரசுக்கு முறையாக தெரிவித்து அதன் மூலம் சிபிஐ விசாரணை மேற்கொள்ளலாம் என்றார்.
http://tamil.oneindia.in/news/2012/02/13/tamilnadu-spot-fine-scheme-practice-tirunelveli-aid0175.html
|