குளு, குளு வசதியுடன் நவீன மெட்ரோ ரயில் பெட்டிகள்- டிசம்பரில் சென்னைக்கு வரும்!
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்காக உலக தரத்திலான குளு, குளு வசதியுடன் கூடிய ரயில் பெட்டிகள் பிரேசில் நாட்டில் தயாராகி வருகின்றன. இந்த ரயில் பெட்டிகள் சென்னைக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைத்து, மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் 2 வழித்தடங்களில் 45 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ ரயில் திட்டம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றது. ரூ.14,600 கோடி செலவில் நடந்து வரும் இத்திட்டத்தில், சுரங்கம் மற்றும் பறக்கும் பாதையில் ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகின்றது. இத்திட்டத்திற்காக பல்வேறு கம்பெனிகளுக்கு 22 டெண்டர்கள் விடப்பட்டுள்ளன. சுரங்க பாதை அமைப்பதற்காக சீனாவில் இருந்து 4 ராட்ஷ டிரிலிங் இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இவை வண்ணாரப்பேட்டை மற்றும் ஷெனாய் நகர் பகுதிகளில் இருந்து சுரங்கப் பாதை அமைக்கும் பணிகளை இன்னும் 2 மாதங்களில் தொடங்க உள்ளது. சுரங்கப் பாதை பணிகளுக்காக சீனாவில் இருந்து மேலும் 7 இயந்திரங்கள் கப்பலில் வந்து கொண்டிருப்பதாக மெட்ரோ ரயில் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மெட்ரோ ரயில் நிர்வாக அலுவலகம்: மெட்ரோ ரயில்களை இயக்க தேவையான அதிநவீன கட்டுப்பாட்டு மையம், ரயில்களை நிறுத்துவதற்கான இடம், பராமரிப்பு பணிமனை, நிர்வாக அலுவலகம் ஆகியவை கோயம்பேட்டில் அமைக்கப்பட்டு வருகின்றது. இதற்காக 68 ஏக்கர் இடத்தில் 7 மாடிகள் கொண்ட அலுவலகம் அமைக்கும் பணி துரிதகதியில் நடைபெற்று வருகின்றது. பிரேசிலில் தயாராகும் ரயில் பெட்டிகள்: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்காக குளு, குளு வசதியை கொண்ட ரயில் பெட்டிகள் பிரேசில் நாட்டில் தயாராகி வருகின்றது. இதற்கான பணியில் 'அல்ஸ்டம் டிரான்ஸ்போர்ட்' என்ற பிரேசில் நாட்டு நிறுவனம் ஈடுபட்டுள்ளது. ரயில் பெட்டிகள் வடிவமைப்பு, சோதனை ஓட்டம், இயக்கம் குறித்த பயிற்சி ஆகிய பணிகளை அந்நிறுவன பணியாளர்கள் ஈடுபடுவர். பிரேசில் நாட்டு நிறுவனம் செட்டுக்கு 4 ரயில் பெட்டிகள் வீதம் மொத்தம் 42 செட்களை தயாரித்து அளிக்க உள்ளது. இதற்காக ரூ.1471 கோடியே 39 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு(2013) இறுதியில் கோயம்பேட்டில் இருந்து பரங்கிமலை வரை பறக்கும் பாதையில் மெட்ரோ ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு இறுதிக்குள் பிரேசில் நாட்டு நிறுவனம் ரயில் பெட்டிகளை சென்னைக்கு அனுப்பி வைக்கும் என்று தெரிகின்றது.
http://tamil.oneindia.in/news/2012/02/18/tamilnadu-chennai-metro-rail-boogies-may-this-year-aid0180.html
|