கிராமங்களில் 4 மணிநேரம், புறநகரில் 2 மணி நேரம் பவர் கட் - தொழிற்சாலைகளுக்கு 1 நாள் மின் விடுமுறை!
சனிக்கிழமை, பிப்ரவரி 25, 2012, 17:49 [IST]
சென்னை: வரும் திங்கள்கிழமை (பிப்ரவரி 27 ) முதல் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் 2 மணிநேரம் மின்தடை அமலுக்கு வருகிறது.
ஊரகப் பகுதிகளில் இது 4 மணி நேரமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான மின்தட்டுப்பாடு காரணமாக சென்னை தவிர மாநிலத்தின் பிறபகுதிகளில் கடந்த ஆண்டின் துவகத்திலிருந்தே மின்தடை நிலவி வருகிறது. மாநிலம் முழுக்க மின் தேவை 12500 மெவா ஆகவும், கிடைப்பது 8500 மெவா ஆகவும் உள்ளது. இதனால் ஆரம்பத்தில் 4 மணி நேரமாக இருந்த மின்தடை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு தற்போது 8 மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கிறது. மழைக்காலங்களிலும் கடுமையாக மின்வெட்டு நிலவியது அநேகமாக இந்த ஆண்டாகத்தான் இருக்கும். கோவை, திருப்பூரில் 12 மணி நேரம் வரை மின்சாரமில்லாத நிலை நிலவுகிறது. கிராமப்புறங்களின் இத்தகைய மின்தடை நேரத்தை குறைக்க, சென்னையிலும் மின்தடை அமலுக்கு வருவதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டு இருந்தது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பிப். 27 முதல் தினமும் 2 மணி நேரம் மின் தடையும், மார்ச் 1 முதல் தொழிற்சாலைகளுக்கு வாரத்துக்கு ஒருநாள் மின் விடுமுறையும் அமலுக்கு வருகின்றன. இதனால் சென்னை தவிர தமிழகத்தின் மற்ற பகுதிகளில் பிப். 27 முதல் மின்தடை நேரம் ஓரளவு குறையலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த அறிவிப்பு கிராமப்புறங்களில் எந்த மாற்றத்தையும் கொண்டுவரப் போவதில்லை. வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் ஏற்கெனவே 10 மணி நேரங்களுக்கு மேல் நிலவும் மின்வெட்டு, எந்த அளவு குறையும் என்று கணிக்க முடியாத நிலையே உள்ளது.
http://tamil.oneindia.in/news/2012/02/25/tamilnadu-tn-announces-new-power-cut-schedule-aid0136.html
|