வாடகைதாரர்களின் விவரங்களை போலீசிடம் தெரிவிக்க உத்தரவு
சென்னை: சென்னையில் கொலை, கொள்ளையை கட்டுப்படுத்த வாடகைக்கு குடியிருப்பவர்களின் விவரத்தை, புகைப்படத்துடன் உடனே தெரிவிக்க வேண்டும் என்று, வீட்டு உரிமையாளர்களுக்கு சென்னை மாநகர காவல்துறை ஆணையாளர் திரிபாதி உத்தரவிட்டு இருக்கிறார். முன்பெல்லாம் திருமணம் ஆகாத வாலிபர்களுக்கு வீடு வாடகைக்கு விட தயங்கும் வீட்டு உரிமையாளர்கள் இப்போது அதை எல்லாம் பார்ப்பது கிடையாது. வாடகை அதிகமாக கிடைக்கிறதா? என்பதைத்தான் பார்க்கிறார்கள். ஒரு குடும்பத்திற்கு வாடகைக்கு விட்டால் குறைந்த வாடகைதான் கிடைக்கும். அதே வீட்டை நான்கைந்து இளைஞர்களுக்கு வாடகைக்கு விட்டால் வாடகையை அள்ளிவிடலாம் என்பதற்காக முன்பின் தெரியாத நபர்களுக்குக்கூட சர்வ சாதாரணமாக வீட்டை வாடகைக்கு விட்டுவிடுகிறார்கள். தங்கள் வீட்டிற்கு வாடகைக்கு வரும் அவர்கள் யார்? என்ன செய்கிறார்கள்? அவர்களுடைய பின்னணி என்ன? என்பது ஒன்றும் உரிமையாளர்களுக்கு தெரியாது. இந்த நிலையில், சென்னையில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, வீட்டு உரிமையாளர்கள் தங்கள் வீடுகளை வாடகைக்கு விடுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இது தொடர்பாக சென்னை மாநகர காவல்துறை அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகரில் உள்ள பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் வாடகைதாரர்கள் என்ற பெயரில் சமூக விரோதிகள் குடியிருந்து வருவதாகவும், அவர்களால் பொது ஒழுங்கு மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படலாம் என்றும் தெரிய வருகிறது. மேலும், சென்னை மாநகரில் குடியிருப்பு பகுதிகளில் வாடகைதாரர்கள் என்ற பெயரில் தீவிரவாதிகள் மற்றும் சமூக விரோதிகளும் புகலிடம் தேடி குடியேற வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, சென்னை மாநகர குடியிருப்பு பகுதிகளில் உள்ள வாடகைதாரர்கள் குறித்து அவர்களுடைய பெயர் மற்றும் முகவரி போன்ற விவரங்களை சேகரிக்க வேண்டிய அவசியம் காவல்துறைக்கு ஏற்பட்டு உள்ளது. 1973-ம் ஆண்டு குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 144-ன் கீழ், மாவட்ட கூடுதல் நீதிபதி என்ற பொறுப்பின் அடிப்படையில் போலீஸ் கமிஷனரால் பின்வரும் ஆணை பிறப்பிக்கப்படுகிறது. சென்னை மாநகரில் குடியிருப்பு உரிமையாளர்கள், நிலச்சொந்தக்காரர்கள் ஆகியோர் தங்களுக்கு சொந்தமான குடியிருப்புகளில் வாடகைக்கு குடியிருப்பவர்கள் குறித்த விவரம் மற்றும் வேறு நபர் தங்குவதற்கு அனுமதி வழங்கியிருந்தால் அதன் விவரத்தை வாடகைதாரர் புகைப்படத்துடன் சம்பந்தப்பட்ட காவல்நிலைய அதிகாரிக்கு உரிய படிவத்தில் (இதற்கென தனி படிவம் அச்சிடப்பட்டு இருக்கிறது) தெரியப்படுத்த வேண்டும். மேற்கண்ட ஆணைக்கு எதிராக செயல்படுபவர்கள் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 188-இன் கீழ் தண்டனைக்கு உள்ளாவார்கள். இந்த ஆணையானது ஒவ்வொரு தனி நபருக்கும் தனித்தனியே வழங்க இயலாது என்பதால் ஊடகங்கள் வாயிலாகவும், அனைத்து மாவட்ட காவல்துறை துணை கமிஷனர்கள் மற்றும் உதவி கமிஷனர்களின் அலுவலகங்கள், அனைத்து காவல்நிலையங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள அறிவிப்பு பலகைகள் மூலமாகவும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆணை, 3.3.2012 (நேற்று) முதல் அமலுக்கு வருகிறது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் பொது அமைதியை பேணிப்பாதுகாக்கும் பொருட்டு பிறப்பிக்கப்பட்டு உள்ள இந்த ஆணைக்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. படிவத்தில் இடம்பெற்றிருப்பவை வாடகைதாரர்கள் பற்றிய விவரங்களை தெரிவிக்க தகவல் படிவம் அச்சடிக்கப்பட்டு இருக்கிறது. அதில், வீட்டு உரிமையாளர் பெயர், தொழில் விவரம், வீட்டு முகவரி, வாடகைக்கு விட்டுள்ள வீட்டில் குடியிருப்பவரின் பெயர், தந்தை பெயர், நிரந்தர முகவரி, தொழில்விவரங்கள், அருகே குடியிருப்பவர்களின் விவரங்கள், இதற்கு முன் குடியிருந்த வீட்டின் முகவரி, அந்த வீட்டை காலி செய்த தேதி ஆகிய விவரங்கள் கேட்கப்பட்டு இருக்கின்றன. மேலும், படிவத்தில் வாடகைதாரரின் புகைப்படத்தையும் ஒட்ட வேண்டும். அத்துடன் வாடகைதாரரின் ஏதாவது ஒரு புகைப்பட அடையாள அட்டையின் (பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், ஆயுத உரிமம், ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு) நகலையும் படிவத்துடன் இணைக்க வேண்டும். படிவத்தின் கீழே இடதுபுறம் வீட்டு உரிமையாளரும், வலதுபுறம் வாடகைதாரரும் கையெழுத்திட வேண்டும். தகவல் படிவத்தை காவல் நிலைய அதிகாரியிடம் சமர்ப்பித்ததும் அந்த அதிகாரி கையெழுத்து மற்றும் காவல்நிலைய முத்திரையிட்டு ஒரு நகலை வீட்டு உரிமையாளரிடம் வழங்குவார். சென்னை மாநகரில் உள்ள வீட்டு உரிமையாளர்கள் வாடகைதாரர்கள் பற்றிய விவரங்களை உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும், அதற்கு எவ்வித காலக்கெடுவும் நிர்ணயிக்கப்படவில்லை.
http://tamil.oneindia.in/news/2012/03/04/tamilnadu-house-owners-told-give-details-tenants-to-police-aid0216.html
|