மத்திய அரசின் அதிரடியான நடவடிக்கையால் இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகப் பெரிய நல்லது நடந்துள்ளது.
புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர் உள ரீதியாக பாதிக்கப்படுகின்றனர். அது தவிர அதிகம் செலவு செய்வது மருந்து மாத்திரைகளையும் வாங்க வேண்டியுள்ளது. அவர்களின் சிரமத்தினை குறைக்க அதிக விலையிலான புற்று நோய் மாத்திரைகளை மிக மிக குறைந்த விலைக்குக் கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இது சாதாரணமான விஷயம் இல்லை. காரணம், இது நாள் வரை ரூ. 2.84 லட்சத்திற்கு விற்று வந்த மருந்துகளை இனிமேல் ரூ. 8880க்கே வாங்கலாம் என்பதால் மத்திய அரசின் இந்த நடவடிக்கை மிகப் பெரிய விஷயம்.
இந்த மருந்தின் பெயர் sorafenib tosylate ஆகும். இதன் பிராண்ட் பெயர் Nexavar ஆகும். 120 மாத்திரைகளைக் கொண்ட ஒரு பாக்கெட்டின் விலை தற்போது ரூ. 2.84 லட்சமாகும். இதனால் புற்றுநோயாளிகள் பெரும் பாதிப்பை சந்தித்து வந்தனர். தற்போது மத்திய அரசு அவர்களுக்கு பேருதவி புரிந்துள்ளது.
இந்த மருந்துக்கான காப்புரிமை தற்போது ஜெர்மனியைச் சேர்ந்த பேயர் நிறுவனத்திடம் உள்ளது. ஆனால் புற்றுநோயாளிகளுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கச் செய்யவேண்டும் என்பதற்காக இந்திய அரசு, சர்வதேச காப்புரிமை சட்டத்தைப் பிரயோகித்து, ஹைதராபாத்தில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனமான நேட்கோ விற்கு ஒப்பந்த அடிப்படையில் புற்றுநோய் மருந்துகளை உற்பத்தி செய்ய கட்டாயமாக லைசென்ஸ் வழங்குமாறு பேயருக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்திய காப்புரிமைச் சட்டம் 84 ன் கீழ் நேட்கோவிற்கு இந்த லைசென்ஸ் கிடைத்துள்ளது. இந்த மருந்துகள் முற்றிய நிலையில் உள்ள சிறுநீரக, கல்லீரல் புற்றுநோயை கட்டுப்படுத்தும் வல்லமை படைத்தது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதன் மூலம் நோயாளிகளின் வாழ்நாள் அதிகரிக்கும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இருப்பினும் நேட்கோ பார்மா நிறுவனம் இந்த மருந்துகளை தயாரிக்க ஜெர்மன் நிறுவனத்திற்கு ராயல்டி வழங்கும். இந்த மருந்துகளை தயாரிக்க 2020 ஆம் ஆண்டுவரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
|