ஜகார்தா: இந்தோனேசியாவில் 2004ம் ஆண்டு ஏற்பட்ட அதி பயங்கர நிலநடுக்கத்திற்கும், நேற்று ஏற்பட்ட பூகம்பத்திற்கும் இடையே நிறைய ஒற்றுமைகளும், ஓரிரு வித்தியாசங்களும் உள்ளன என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
2004ம் ஆண்டு ஏற்பட்ட மிக பயங்கர நிலநடுக்கமானது பெரும் சுனாமி பேரலைகளை கொண்டு வந்து இந்தியப் பெருங்கடல் நாடுகளை சீரழித்து விட்டுப் போனது. ஆனால் நேற்றைய பூகம்பமானது நல்ல வேளையாக பெரும் சேதத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் இரண்டு பூகம்பங்களுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன.
2004ல் ஏற்பட்ட பூகம்பமும், நேற்று ஏற்பட்ட பூகம்பமும், சுமத்ராவின் மேற்குக் கடல் பகுதியில்தான் ஏற்பட்டன. அதாவது இரண்டுமே ஒரே பகுதியில்தான் ஏற்பட்டுள்ளன.
2004ம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தின் அளவு முதலில் 8.9 ரி்க்டர் என கூறப்பட்டது. பின்னர் இது 9.1 ரிக்டராக திருத்தப்பட்டது. நேற்று ஏற்பட்ட பூகம்பமானது முதலில் 8.9 ஆக கூறப்பட்டது. பின்னர் இது 8.7 என குறைக்கப்பட்டது.
2004ம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பமானது, கடலுக்கு அடியில் 33 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. நேற்றைய பூகம்பமானது 30 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. இரண்டுக்கும் வித்தியாசம் வெறும் 3 கிலோமீட்டர் ஆழம்தான். ஆனால் இரண்டும் ஏற்படுத்திய விளைவுகள் மிகப் பெரியவை, மாறுபட்டவை.
2004ல் ஏற்பட்ட பூகம்பத்தால் பெரிய அளவில் சுனாமி பேரலைகள் எழுந்தன. இதனால் 14 நாடுகளைச் சேர்ந்த 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பல லட்சம் பேர் வீடு, வாசல், உறவுகளை இழந்தனர்.
இந்த அளவுக்கு சேதம் ஏற்பட முக்கியக் காரணம், சுனாமிதான். 2004 பூகம்பத்தின்போது டெக்ட்ரானிக் பிளேட் எனப்படும் பாறைத் தட்டுக்கள் மேலும் கீழுமாக செங்குத்து திசையில் நகர்ந்ததே இந்த அபாயகரமான சுனாமிக்குக் காரணம். அதேசமயம், நேற்று ஏற்பட்ட பூகம்பத்தின்போது பாறைத் தட்டுக்கள் பக்கவாட்டில் நகர்ந்துள்ளன. இதனால்தான் பெரிதாக வந்த பூகம்பம் புஸ்வானமாகிப் போய் விட்டது.