பெரும் கஷ்டத்தில் 3ல் ஒரு இந்தியர்!
திங்கள்கிழமை, ஏப்ரல் 30, 2012, 17:59 [IST]
டெல்லி: இந்தியாவின் மந்தமான பொருளாதார வளர்ச்சியும் பணவீக்கமும் மக்களை பெரும் பாடுபடுத்தி வருவதாக கேலப் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. கேலப் பைனான்சியல் வெல்பீயிங் இன்டெக்ஸ் (Gallup's Financial Wellbeing Index) எனப்படும் மக்களின் மனநிலையை வெளிப்படுத்தும் குறியீட்டு எண் தொடர்பான கருத்துக் கணிப்பில் 3ல் ஒரு இந்தியர் விலைவாசி உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டு, கடுப்பில் உள்ளது தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் தங்களது பொருளாதாக நிலை மோசமாகியுள்ளதாக 31 சதவீத இந்தியர்கள் தெரிவித்துள்ளனர். எதிர்காலமும் இதே போல இருக்கப் போகிறது என்றும் அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டில் இவ்வாறு கருத்துத் தெரிவித்தவர்கள் எண்ணிக்கை 24 சதவீதமாக இருந்தது. அதாவது 2011ம் ஆண்டில் 4ல் ஒருவர் கஷ்டத்தில் இருப்பதாகக் கூறியிருந்தார். இப்போது அது 3ல் ஒருவர் என்ற அளவுக்கு மோசமாகியுள்ளது. அதே போல கடந்த ஆண்டு 'நல்லா இருக்கேன் சார்' என்று பதில் சொன்னவர்கள் எண்ணிக்கை 21 சதவீதமாக இருந்தது. அது இந்த ஆண்டு 13 சதவீதமாகக் குறைந்துவிட்டது. அதாவது போன வருடம் 5ல் ஒரு இந்தியர் சந்தோஷமாக இருந்தார். அது இந்த ஆண்டு 8ல் ஒரு இந்தியர் தான் மகிழ்ச்சியாக இருக்கிறார். அதிலும் கிராமப் புறங்களில் தான் நிலைமை மிக மோசமாக உள்ளது. கிராமப் பகுதிகளில் 36 சதவீதம் பேர் கஷ்டத்தில் இருப்பதாகக் கூற, நகர்ப் பகுதிகளில் இது 21 சதவீதமாக உள்ளது. பொருளாதார மந்தம், உயர்ந்து போன வட்டி விகிதம், கைக்கு எட்டாத அளவுக்கு போன வங்கிக் கடன்கள், பல புதிய திட்டங்களை ஒத்திப் போட்டுவிட்ட நிறுவனங்கள், இதனால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாவதில் முடக்கம் என எல்லா பக்கமுமே நிலைமை நல்லாயில்லை. இந்த விஷயத்தில் இந்தியாவை விட சீனாவும், பிரேசிலும் பரவாயில்லை என்கிறது கேலப் கருத்துக் கணிப்பு.
http://tamil.oneindia.in/news/2012/04/30/business-inflation-takes-away-feel-good-factor-one-third-indians-aid0090.html
|