மதுரையிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏர் இந்தியா விமான சேவையை தொடங்க வலியுறுத்தல்
திங்கள்கிழமை, ஏப்ரல் 30, 2012, 15:03 [IST]
டெல்லி: மதுரையில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏர் இந்தியா நிறுவனமானது விமான சேவைகளை இயக்க வேண்டும் என்று மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் அஜித்சிங்கிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. தமிழக நாடாளுமன்ற உறுப்பினர் ராம்பாபு தலைமையில் மதுரை டிராவல் கிளப் உறுப்பினர்கள் டெல்லியில் அஜித்சிங்கிடம் இதற்கான கோரிக்கை மனுவைக் கொடுத்தனர். அவர்கள் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: மதுரை புதிய விமான நிலையமானது 18 ஆயிரம் சதுரகிலோ மீட்டர் பரப்பளவில் 20 குடியேற்ற சோதனை மையங்கள், 16 நுழைவு வாயில்களுடன் பிரம்மாண்டமாக அமைகிறது. 375 கார்களும் 10 பேருந்துகளும் நிறுத்தவும் வசதி கொண்ட இந்த புதிய விமான நிலையமானது ஒரே நேரத்தில் 4 பெரிய விமானங்களைக் கையாளக் கூடியது. மதுரையிலிருந்து துபாய்க்கு நேரடியாக ஏர் இந்தியா விமானம் இயக்கப்படும் என்று கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஆனால் அது விசாகப்பட்டினத்துக்கு மாற்றப்பட்டது. மதுரையிலிருந்து வளைகுடா நாடுகளுக்கு விமான சேவைகளை இயக்குவதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். மேலும் தென்மாவட்டங்களில் இருந்து மட்டும் துபாய்க்கு 1,600 பயணிகளும், சிங்கப்பூருக்கு 1,100 பயணிகளும், மலேசியாவுக்கு 1,300 பயணிகளும், மஸ்கட்டுக்கு 1,000 பயணிகளும், கொழும்புக்கு 1,200 பயணிகளும், மாலேவுக்கு 400 பயணிகளும், ஐரோப்பிய நாடுகளுக்கு 200 பயணிகளும் பயணம் மேற்கொள்கின்றனர். இதனால் மதுரையிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏர் இந்தியா நிறுவனம் விமான சேவைகளை இயக்க வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்பட்டிருந்தது. இதற்குப் பதிலளித்த அஜித்சிங், மதுரையிலிருந்து கொழும்பு செல்வதற்காக ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது என்றார். இதேபோல் மதுரையிலிருந்து கன்னியாகுமரி, ராமேஸ்வரம், கொடைக்கானலுக்கு ஹெலிகாப்டர் சேவையை இயக்குவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். இந்தக் குழுவினர் ஏர் இந்தியாவின் தலைவர் ரோகித் நத்தனையும் சந்தித்து மனு கொடுத்தனர்.
http://tamil.oneindia.in/news/2012/04/30/business-operate-air-india-flight-from-madurai-aid0216.html
|