Posted by Mohamed Rafiq
(namaduoor) on 5/8/2012
|
|||
புதுடில்லி: "ஹஜ் பயணத்துக்காக வழங்கப்படும் மானியத்தை, படிப்படியாக குறைத்து, பத்து ஆண்டுகளுக்குள் முழுமையாக ரத்து செய்ய வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஹஜ் பயணத்தில் தனியார் பயண ஏற்பாட்டாளர்களை அனுமதிப்பது தொடர்பாக, மும்பை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, மத்திய அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள் அல்தாமஸ் கபீர், ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ஹஜ் பயணத்துக்கு வழங்கப்படும் மானியத்தை படிப்படியாக குறைத்து, பத்து ஆண்டுகளுக்குள் முழுமையாக ரத்து செய்ய வேண்டும். அதேபோல், இந்த பயணத்தில், பிரதமரின் நல்லெண்ண தூதுக்குழுவில் செல்வோரின் எண்ணிக்கையையும், தற்போதுள்ள 30லிருந்து, இரண்டாக குறைக்க வேண்டும். இந்திய ஹஜ் கமிட்டியின் செயல்பாடு குறித்தும், புனித யாத்திரைக்கு செல்வோரை தேர்வு செய்யும் முறை குறித்தும், ஆய்வு செய்யப்படும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அரசின் பதில் மனு: முன்னதாக, இதுகுறித்து அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில்,"ஹஜ் பயணம் தொடர்பாக புதிய வழிகாட்டி குறிப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதன்படி, இதுவரை வாழ்வில் ஒருமுறை கூட, ஹஜ் பயணம் செய்யாதவர்கள், பயணிப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்'என, தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனாலும், இந்தாண்டு ஹஜ் பயணத்துக்கான செலவு குறித்த தகவல்களை அரசு தாக்கல் செய்யவில்லை. ஹஜ் பயணம் முடிந்து, யாத்ரீகர்கள் நாடு திரும்பிய பின்னரே, இந்த தொகை பற்றிய விவரங்கள் தெரிய வரும் என, தெரிவிக்கப்பட்டு இருந்தது.
முஸ்லிம் எம்.பி.,க்கள் வரவேற்பு: சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை வரவேற்றுள்ள, ஆந்திராவைச் சேர்ந்த எம்.ஐ.எம்., கட்சி எம்.பி., அசாதுதீன் ஓவைசி கூறுகையில்,"ஹஜ் பயணத்துக்காக மானியமாக வழங்கப்படுவதாக கூறப்படும், 600 கோடி ரூபாய், ஏர்- இந்தியா விமான நிறுவனத்துக்கு வழங்கப்படுகிறதே தவிர, யாத்ரீகர்களுக்கு வழங்கப்படுவது இல்லை'என்றார். காங்கிரஸ் எம்.பி., சய்புதீன் ஜோசும், சுப்ரீம் கோர்ட் உத்தரவை வரவேற்றுள்ளார். மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறுகையில்,"சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை வரவேற்கிறேன். இது தொடர்பாக, கடந்த நான்கு ஆண்டுகளாகவே, அரசும் ஆலோசித்து வந்தது'என்றார். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |