இப்படியெல்லாமா ரயில் பயணிகளை மோசடி செய்வது?..புரோக்கர்களாக மாறும் ரயில்வே போலீஸ்!
வெள்ளிக்கிழமை, மே 18, 2012, 8:37 [IST]
சென்னை: சென்னை அண்ணா சாலையில் அமெரிக்க தூதரக நேர்காணலுக்கு செல்வதற்காக முதல்நாள் இரவே நடுத்தெருவில் படுத்துறங்கிய பட்டதாரிகள் பலரும் உண்டு.. இப்படி இடம்பிடித்து தங்களது வாழ்க்கைத் தொடங்கிய தொழிலதிபர்களும்கூட நம்மில் உண்டு... காலம் மாறிப்போய்விட்ட காலத்திலும் தட்கல் ரயில் டிக்கெட் எடுக்கவும் இப்படி ஒரு நிலைமை உருவாகிக் கிடக்கிறது..ஆனால் இங்கே புரோக்கர்களாக செயல்படுவது பயணிகளுக்கு பாதுகாப்பு தர வேண்டிய ரயில்வே பாதுகாப்புப் படையினர்தான் என்பது கொடுமையிலும் கொடுமை! எப்படி நடக்கிறது? ரயில்வே பாதுகாப்புப் படையினர் ரொம்பவும் நல்லவர்கள் போல முதல் நாள் இரவே வந்து முகாமிட்டுவிடும் பயணிகளிடம் ஒரு தாளில் பெயரை எழுதச் சொல்லிவிடுகின்றனர். இப்படித்தான் ரூபன் என்கிற பயணியும் நேற்று தாம்பரம் ரயில் நிலையம் சென்று பாதுகாப்புப் படையினர் கொடுத்த தாளில் பெயரைப் பதிவு செய்தார். அவரது பெயர் 6-வது இடத்தில் இருந்தது. பின்னர் அங்கேயே காத்திருக்கவும் செய்தார். அப்போது இரவு நேரத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் மளமளவென்று ரூபனின் பதிவு செய்திருந்த தாளில் மேலிருந்து கீழாக 10-15 பேரை எழுதத் தொடங்கிவிட்டனர். அவர்கள் யார் என்று பாதுகாப்புப் படையினர் கேட்க ரயில் நிலையத்தில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்கள் பலரையும் அழைத்து வந்து இவர்கள்தான் என்று கூறியிருக்கின்றனர். அப்போதுதான் ரூபனுக்கு விஷயமே புரிந்திருக்கிறது.. தட்கல் டிக்கெட்டுகளை கவுண்ட்டரில் இருந்து ரயில்வே பாதுகாப்புப் படையினரே ஒட்டுமொத்தமாக வாங்கி வைத்துக் கொண்டு தரகு வேலை பார்க்கின்றனர். கிடைக்கும் பணத்தை அனைவரும் பங்கு போட்டுக் கொள்கின்றனர்.. இதை ரூபனும் மற்றவர்களும் தட்டிக் கேட்க.. சென்ட்ரல் கவர்மெண்ட் ஸ்டாப்.. எங்களையே தட்டிக் கேட்கிறீங்களா? ஆள் மாறாட்ட டிக்கெட் வாங்கின குற்றத்துக்கு ஜெயிலுக்குப் போங்கள் என்று தாக்கி இழுத்துச் சென்றிருக்கின்றனர். பயணிகளைப் பாதுகாக்க வேண்டிய கடமைக்குரிய மனிதர்களே புரோக்கர்களாக மாறிப்போன கொடுமைக்கு முடிவில்லையோ?
http://tamil.oneindia.in/news/2012/05/18/tamilnadu-railway-protection-force-turns-tatkal-brokers-154165.html
|