Posted by S Peer Mohamed
(peer) on 5/24/2012
|
|||
ஒரு ஆண்டுக்கும் மேலாக டிவி பார்க்காமல், உறவினர்கள் வீட்டு சுக, துக்க நிகழ்ச்சிகளுக்கு போகாமல், சினிமா பார்க்காமல், இரவு பகலாக படித்து, அந்த உழைப்பின் பயனாக இன்று வெற்றிக் கனியை சுவைத்துக் கொண்டிருக்கும் பிளஸ்2 மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துக்கள். தவிர்க்க முடியாத காரணங்களால் இக்கனியை தவறவிட்டவர்கள் 3 மாதத்தில் வரப்போகும் துணை பொதுத் தேர்வில் வெற்றி பெற அட்வான்ஸ் வாழ்த்துக்கள். உங்களுக்கு பிடித்த, உங்கள் மனம் கவர்ந்த சாதனையாளர்கள், வெற்றியாளர்கள் யார்? முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், தாமஸ் ஆல்வா எடிசன், பில்கேட்ஸ், ஒபாமா.. பட்டியல் நீளும். இந்த சாதனை அவர்கள் ஒரே நாளில் படைத்தது அல்ல. ஏகப்பட்ட தடைகள், சிரமங்கள், தோல்விகளை தாண்டியே அவர்கள் இந்த சிகரத்தை எட்டிப் பிடித்திருக்கிறார்கள். வீழ்வது தவறல்ல. எழாமல் விழுந்து கிடப்பதுதான் தவறு. அதை சரியாக புரிந்துகொண்டதுதான் அவர்களை சாதனையின் உச்சத்துக்கு கொண்டு வந்திருக்கிறது. இன்று வெற்றிக்கனியை பறிக்க முடியாத மாணவர்களும், முக்கியமாக பெற்றோரும் இதை உணர வேண்டும். கேபிளை துண்டித்து டிவியை பரணில் போட்டு, ராப்பகலாக விழித்து பிள்ளைக்கு டீ போட்டுக் கொடுத்த அப்பா, அம்மாவுக்கு பிள்ளை பாஸ் ஆகவில்லையே என்ற வருத்தம் இருக்கத்தான் செய்யும். பணம் கொடுத்தாவது இன்ஜினியரிங், மெடிக்கல் சீட் வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தவர்களுக்கு பிள்ளையின் நெகட்டிவ் ரிசல்ட் சற்று கோபம், அதிர்ச்சியை ஏற்படுத்துவதும் இயல்புதான். ‘பையன்/பொண்ணு என்ன மார்க்?’ என்று கேட்பவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்ற கவலையும் இருக்கும். ஆனால், இதைவிட அதிக வருத்தமும், மனஉளைச்சலும் உங்கள் பிள்ளைக்கும் இருக்கும் என்பதை உணருங்கள். ‘பக்கத்து வீட்டு பையனை பார்.. பிரெண்டை பார்’ என்று ஒப்பிட்டு, அவர்களை மேலும் வருந்த, துவளச் செய்யாதீர்கள். ‘‘ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை. உன் கவலை எங்களை மிகவும் பாதிக்கும். அதனால், நடந்ததை நினைத்து வருத்தப்படாதே. இன்னும் 3 மாதம் இருக்கிறது. இப்போது விட்டதை துணை பொதுத் தேர்வில் கட்டாயம் பிடித்துவிடலாம்’’ என்று ஆறுதலாக அரவணைத்து, உற்சாகப்படுத்துங்கள். உங்களது உயர்கல்வி எது என்பதை மட்டுமே பிளஸ்2 மார்க் தீர்மானிக்கிறது.. வாழ்க்கையை அல்ல. வாழ்க்கை என்பது வெறும் 1200 மார்க்குகளில் அடங்கிவிடுவது அல்ல. நீங்கள் நினைத்தால் எதுவும் வசப்படும். மார்க் என்ன ஜுஜூபி!
சிறப்பு துணைத் தேர்வுக்கு இன்றுமுதல் விண்ணப்பம்
பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான சிறப்பு துணைத் தேர்வுக்கு புதன்கிழமை (மே 23) முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு அனைத்துப் பாடங்களிலும் தோல்வியடைந்த மாணவர்களும் சிறப்பு துணைத் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். சிறப்புத் துணைத்தேர்வு எழுத ஒரு பாடத்துக்கு ரூ.85-ம் கூடுதலாக எழுதும் ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.50 சேர்த்துக் கட்ட வேண்டும். பள்ளி மாணவர்கள், இந்த மேல்நிலை சிறப்புத் துணைத்தேர்வுக்கு "நஏ' என்று குறிப்பிடப்பட்ட விண்ணப்பங்களை அவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே மே 23 முதல் மே 28 வரைபெறலாம். மே 28-க்குள் அந்தந்த பள்ளிகளிலேயே விண்ணப்பங்களை ஒப்படைக்க வேண்டும். தேர்வுக் கட்டணத்தைப் பணமாக பள்ளியில் செலுத்த வேண்டும். தனித்தேர்வர்களாக எழுதும் மாணவர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்களில் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
மனம் விட்டுப் பேசினால் மன அழுத்தம் நீங்கும்!
பிளஸ் 2 தேர்வில் மதிப்பெண் என்னவாக இருந்தாலும் மாணவர்கள் பக்குவத்துடன் எடுத்துக் கொள்ள வேண்டும். தோல்வியோ, மதிப்பெண் குறைவோ மனம் விட்டுப் பேசினால் மன அழுத்தம் நீங்கும் என்று தன்னார்வத் தொண்டு அமைப்பு ஆலோசனை கூறியுள்ளது. ஸ்நேகா அமைப்பைச் சேர்ந்த பி.வி. சங்கர் கூறியதாவது: தேர்வு முடிவுகள் என்னவாக இருந்தாலும் அதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என பெற்றோர்கள் மாணவர்களுக்கு நம்பிக்கையளிக்க வேண்டும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மதிப்பெண்ணை வேறு குழந்தைகளோடு ஒப்பிடக்கூடாது. படிப்பது வாழக்கையின் ஒரு பகுதி மட்டுமே. படிப்பே வாழ்க்கையல்ல. அதிக மதிப்பெண் பெறுவது வாழ்க்கையில் முன்னேறுவதற்கு ஒரு வழி மட்டுமே. மதிப்பெண் குறைந்தாலும் ஏராளமான படிப்புகள் உள்ளன. தங்களது மதிப்பெண்ணுக்கு ஏற்ற வகையில் ஏதேனும் ஒரு கல்லூரியையோ, படிப்பையோ மாணவர்கள் தேர்ந்தெடுத்து அதில் விருப்பத்தை வளர்த்துக்கொள்ளலாம். தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காதபோது எதிர்மறையான எண்ணங்கள் ஏற்படுவது சகஜம்தான். தங்களது பெற்றோரிடமோ, நண்பர்களிடமோ மனம் விட்டுப் பேச வேண்டும். மனம் விட்டுப் பேசினால் மனதில் உள்ள பாரம் குறையும்.அவர்கள் யாரிடமும் பேச இயலாத நிலை இருந்தால் "ஸ்நேகா' அமைப்பிடம் பேசலாம். அவர்கள் சொல்லும் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும். மாணவர்களுக்காக 24 மணி நேர தொலைபேசி உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. 044-24640050, 24640060 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்றார்.
விடைத்தாள் நகல், மறுகூட்டல், மறு மதிப்பீடு விண்ணப்பம் பெற, மறுகூட்டல், மறுமதிப்பீட்டிற்கான கட்டண விவரம்
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், சில மாணவர்கள் மறுகூட்டல், விடைத்தாள் நகல் கோரியோ விண்ணப்பிக்க விரும்பலாம். அவர்களுக்கு எதற்கு எவ்வளவுக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது. விடைத்தாள் நகல் பெற மொழிப் பாடம் மற்றும் ஆங்கிலப் பாடத்திற்கு ஒவ்வொரு தாளுக்கும் 550 ரூபாய் இதர பாடங்கள் ஒவ்வொன்றிற்கும் 275 ரூபாய். மறுகூட்டல் மொழி, ஆங்கிலம், உயிரியல் ஆகிய பாடங்கள் ஒவ்வொன்றிற்கும் 305 ரூபாய் இதர பாடங்கள் ஒவ்வொன்றிற்கும் 205 ரூபாய். மறு மதிப்பீடு விடைத்தாள் நகல் பெற்ற பிறகு 5 நாட்களுக்குள் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வேண்டும். மொழி மற்றும் ஆங்கில மொழிப் பாடங்கள் ஒவ்வொன்றிற்கும் தலா 1,010 ரூபாய் இதர பாடங்கள் ஒவ்வொன்றிற்கும் 505 ரூபாய். விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான கட்டணத் தொகையை, தேசியமயமாக்கப்பட்ட ஏதேனும் ஒரு வங்கியில் சென்னையில் மாற்றத்தக்க வகையில், Director of Government examinations, chennai 6 என்ற பெயரில் எடுக்கப்பட்ட வங்கி வரைவோலையை (டிடி) ஒப்படைத்து விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாணவர்கள் விண்ணப்பங்கள் பெற்ற அலுவலகங்களில் மட்டுமே நேரில் ஒப்படைக்க வேண்டும என்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், சில மாணவர்கள் தங்களது தேர்வு முடிவிலோ அல்லது மதிப்பெண்ணிலோ தவறு இருக்கலாம் என்று கருதினால் விடைத்தாள் நகல் பெறலாம். அல்லது மறுகூட்டல், மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களுக்கு 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. பூர்த்தி செய்த விண்ணப்பங்களைப் பெற 25ம் தேதி 5 மணி வரை நேரம் அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் விண்ணப்பங்கள் 5 இடங்களில் அளிக்கப்படும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது. ஜெயகோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகம், சென்னை(தெற்கு) காந்தி இர்வின் சாலை, எழும்பூர். மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகம் (மத்திய சென்னை), அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை. மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகம், சென்னை (கிழக்கு), ஜெயகோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சூளைமேடு. மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகம், சென்னை (வடக்கு), டாக்டர் அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், எழும்பூர் ஆகிய இடங்களில் விண்ணப்பங்களை மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம். தமிழகத்தில் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், இணை இயக்குனர் (கல்வி), புதுச்சேரி, அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குனர் அலுவலகங்களில் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படும் ஆனால்,சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் அமைந்துள்ள அரசு தேர்வுத்துறை அலுவலகத்திலோ அல்லது சென்னை அரசு தேர்வுகள் மண்டலத்துணை இயக்குனர் அலுவலகத்திலோ விண்ணப்பங்கள் வழங்கப்படாது. இவ்வாறு, அரசுத் தேர்வு இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.
(Received via email from Meyanna, KSA.) |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |