ஏர்வாடி:ஏர்வாடியில் டெங்கு காய்ச்சலுக்கு இரண்டரை வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.ஏர்வாடி எல்.என்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் மாறன் (40). இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி நிர்மலா (31). இத்தம்பதியினருக்கு சுகபூரணி இரண்டரை வயது பெண் குழந்தைக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு குழந்தைக்கு காய்ச்சல் வந்துள்ளது. உடனே மாறன் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். இருந்தபோதிலும் குழந்தைக்கு காய்ச்சல் விடாமல் தொடர்ந்து காணப்பட்டதால் டெங்கு காய்ச்சலாக இருக்குமோ என்று சந்தேகமடைந்த தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் உடனே பாளை., ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் குழந்தைக்கு சிகிச்சை பெற அறிவுரை வழங்கினர்.
அதன்படி மாறன் தம்பதியினர் குழந்தை சுகபூரணியை சிகிச்சைக்காக கடந்த 5 நாட்களுக்கு முன்பு பாளை., அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் குழந்தை சுகபூரணிக்கு சிகிச்சையளித்து வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் குழந்தை பரிதாபமாக உரியிழந்தது.இதனால் பெற்றோர்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகினர். இச்சம்பவத்தை கேள்விபட்டதும் ஏர்வாடி எல்.என்.எஸ்.புரமே பெரும் துயரத்திற்குள்ளாகியுள்ளது. ஏர்கனவே ஏர்வாடி, திருக்குறுங்குடி, களக்காடு, நான்குநேரி, வள்ளியூர் பகுதிகளில் டெங்கு காய்ச்சலால் அதிகம்பேர் பாதிக்கப்பட்டு அருகில் உள்ள தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு காணப்பட்டு வருவதால் காய்ச்சல் வந்தவுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காலம் தாழ்த்தாமல் தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வருவதால் டெங்கு அதிகம் தாக்காமல் தற்காத்துக் கொண்டு வருகின்றனர்.
ஆனாலும் சில இடங்களில் போதிய சுகாதார வசதியின்றியும், விழிப்புணர்வு இன்றியும் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு ஏற்பட்டு இறப்பு நேரிட்டு வருகிறது. அதன்படி டெங்கு காய்ச்சல் பாதிப்புள்ளாகி இரண்டரை வயது பெண் குழந்தை சுகபூரணி ஏர்வாடியில் இறந்துள்ளது இப்பகுதியில் பெரும் பரபரப்பையும், துயரத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அரசு இன்னமும் கூடுதலாக பொதுமக்கள் மீதுஅக்கறை கொண்டு டெங்கு நோயிலிருந்து விடுபட போதிய விழிப்புணர்வையும், சுகாதார வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் விரும்புகின்றனர்.
|