சாதிக் ஜமால் என்பவர் போலியாக என்கவுண்டர் செய்யப்பட்ட வழக்கில் பெரும் திருப்புமுனையாக மும்பையைச் சேர்ந்த பத்திரிகையாளர் கேதன் திரோட்கரை மத்திய குற்றப் புலணாய்வுத் துறை (சிபிஐ) கைது செய்துள்ளது.
காவல் துறைக்கு அவ்வப்போது தகவல் தந்து கொண்டிருந்த பத்திரிகையாளர் திரோட்கர் வியாழக் கிழமையன்று குஜராத் உயர் நீதிமன்றத்தின் முன் ஆஜர் படுத்தப்பட்டார். பின்னர் காந்தி நகரில் உள்ள சிபிஐ அலுவலகத்துக்கு விசாரணைக்காக அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.
2003ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள கேலக்ஸி சினிமா அருகே பட்டப் பகலில் சாதிக் ஜமால் என்பவரை அகமதாபாத் குற்றப் பிரிவு காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைக் கொலை செய்யும் திட்டத்துடன் ஜமால் இருந்ததாலேயே அவரை என்கவுண்டர் செய்ததாக காவல்துறை வாதித்தது. சொராப்தீன் சேக் அவரது மனைவி இஷ்ரத் ஜஹான் மற்றும் மூவரை போலி என்கவுண்டர் செய்த அகமதாபாத் நகர காவல்துறைதான் ஜமாலையும் சுட்டுக் கொன்றுள்ளது.
ஜமால் போலி என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டுள்ளார் என்ற தகவல் அறிந்தவுடனேயே, கேதன் திரோட்கர் தன் குற்றத்தை கீழ் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டிருந்தார். மும்பை காவல்துறையில் என்கவுண்டருக்குப் புகழ்பெற்ற காவல் அதிகாரி தயா நாயக் என்பவரிடம் குஜராத் அரசியல்வாதி ஒருவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஜமால் ஒப்படைக்கப்பட்டதாக திரோட்கர் தன்னுடைய வாக்குமூலத்தில் கூறியிருந்தார்.
ஜமால் கொல்லப்படுவதற்கு முன் 2003 ஜனவரி 11ஆம் தேதி மும்பை போரிவிலி தேசிய பூங்காவில் தயா நாயக் ஜமாலை குஜராத் காவல்துறையிடம் ஒப்படைத்தாகவும் திரோட்கர் செய்தியார்களிடம் கூறினார்.